Published:Updated:

`மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தற்போது சாத்தியமில்லை’ - பி.டி.ஆர் சொன்னது சரியா?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பா.ஜ.க அரசு பல மடங்கு வரிகளை உயர்த்தியதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுமீது பாய்ந்திருக்கிறார். பெட்ரோல் விலை விவகாரத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 108 ரூபாயைத் தொட்டுவிட்டது. இன்னும் விலை உயரக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருள்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு வரிகள்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்றால், அதில் 60 ரூபாய் வரி. எனவே, வரியைக் குறைத்துவிட்டால் பெட்ரோலியப் பொருள்களின் விலை தாமாகக் குறைந்துவிடும். ஆனால், வரிகளைக் குறைப்பதற்கு அரசு தயாராக இல்லை.

மோடி
மோடி

இந்தநிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கடுமையான பொருளாதாரச் சூழலிலும், கொரோனா நிவாரணமாக மக்களுக்கு ரூ.4,000 நிதி உதவியை தி.மு.க அரசு வழங்கியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.9,000 கோடி செலவு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், மாநில அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று சொல்லியிருந்தோம். அதன்படி, இன்னும் இரு வாரங்களுக்குள் அது வெளியிடப்படும். பெட்ரோல், டீசல் விலையில் ‘வாட்’ வரியைக் குறைக்க ஓரளவுக்கு முயல்வோம் என்று கூறியிருந்தோம். அதை உறுதியாகச் செய்வோம். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை” என்று கூறினார் பழனிவேல் தியாகராஜன்.

அதாவது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும், டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம்’ என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதைத்தான், இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். மேலும், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகிறார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

``2014-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் (ஒரு லிட்டர்) மீதான வரியை ரூ.10.39 என்பதிலிருந்து ரூ.32.90 என உயர்த்திவிட்டார்கள். அதாவது, மூன்று மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், மாநில அரசு வரியைக் குறைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39-ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவிகிதம் மாநிலங்களுக்குப் பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஒரு பைசாகூட மாநிலங்களுக்கு வழங்காமல், அந்த வரித் தொகையை மத்திய அரசு முழுமையாக எடுத்துக்கொள்கிறது.

2019 - 20-ம் ஆண்டில் மத்திய அரசு கையாண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரூ.2.40 லட்சம் கோடி. அது, 2020-21-ம் ஆண்டில் ரூ.3.90 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 63 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் மாநிலத்துக்கான பங்காக தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.336 கோடி குறைந்திருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் விலை மற்றும் வரி அதிகரித்தபோதும், தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பங்குகள் குறைந்துள்ளன.

அது, இந்த ஆண்டு இன்னும் குறைந்துள்ளது. ஒருகாலத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 112 டாலர் என இருந்தது. அப்போது, மொத்த பெட்ரோல் வரி, லிட்டருக்கு ரூ.69-தான். மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. இது, 2015, 2020-ம் ஆண்டுகளில் 40 டாலர் ஆனது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.23. மீதித்தொகை உற்பத்தி மற்றும் மத்திய அரசினுடையது.

பெட்ரோல் நிலையம்
பெட்ரோல் நிலையம்

2011-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.99-தான். இன்றைக்கு 44 டாலராகக் கச்சா எண்ணெய் விலை இருக்கும்போது, டீசல் விலை ரூ.92-ஆக உயர்ந்திருக்கிறது. இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்தியிலிருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக் கூடாது என்றால், எப்படி அரசை நடத்துவது?” என்று கொந்தளிக்கிறார்.

`பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை விட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று என்ற தேர்தல் வாக்குறுதியை தற்போதைய சூழலில் நிறைவேற்ற முடியாது என்று நிதியமைச்சர் கூறியதை பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ‘ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாள்களுக்குள்ளாகவே தி.மு.க-வின் சாயம் வெளுத்துவிட்டது’ என்று அவர் சாடியிருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

மேலும், ‘பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறதென்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது’ என்று மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகளையும் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``2014, ஆகஸ்ட் முதல் 2016 ஜனவரி வரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட.து. ஆனால், அந்த விலைக் குறைப்பின் பயன், மக்களைச் சென்றடையவில்லை. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தால் மற்ற பொருள்களின் விலைகள் உயர்வது வாடிக்கை. ஆனால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தபோது, எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. அதனால், மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் பயன்கள் சென்று சேரவில்லை. பெட்ரேல், டீசல் விலைக் குறைப்பை பெருநிறுவனங்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. அதன் அடிப்பைடையில்தான், பெட்ரோல், டீசல் கலால் வரியை 2016-17-ல் மத்திய அரசு உயர்த்தியது. அதன் மூலமாக, மக்களுக்கான கட்டமைப்புகளைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1.76 லட்சம் கி.மீ கிராம சாலைகள் ஐந்து வருடங்களில் அமைக்கப்பட்டன.

நாராயணன்
நாராயணன்

பருவநிலை மாற்றத்தின் தாக்குதலால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் ஏற்படும் மாசைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மீனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, பாரீஸ் ஒப்பந்தப்படி, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியே வைக்க வேண்டும் என்று 200 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முந்தைய ஐ.மு கூட்டணி அரசு, ரூ.1.37 லட்சம் கோடி அளவுக்குப் பங்குகளை (Bonds) எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது. அதாவது, கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளது. இதுவரையிலும் ரூ.5,000 கோடி திருப்பித் தந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 20,000 கோடியைத் திருப்பித்தர வேண்டும். இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் வாட் வரியின் வரி விதிப்பு சதவிகித அடிப்படையில் இருப்பதால் எதிர்பாராத அல்லது திட்டமிடாத அதிக வருவாய் மாநில அரசுக்குக் கிடைக்கிறது. அதன்படி, இன்று 34 சதவிகிதம் பெட்ரோலுக்கு தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, 10 ரூபாய் அளவுக்கு விலை ஏறியிருக்கிறது என்று சொன்னால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் வாட் வரியாக 3 ரூபாய்க்கு மேல் திட்டமிடாத வருவாய் கிடைக்கிறது. எனவேதான், வாட் வரியைக் குறையுங்கள் என்று சொல்கிறோம். இந்த மாதிரி பல காரணங்கள் இருப்பதால்தான், கலால் வரியைக் குறைக்க முடியாது என்று சொல்கிறோம். மேலும், கலால் வரி எப்படியெல்லாம் செலவிடப்படும் என்று பட்ஜெட்டில் கூறியிருக்கிறோம்.

மோடி
மோடி

தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியிருக்கும் கருத்துகள் தவறானவை. மாநில அரசுக்கு முறையாக கலால் வரி பங்கிட்டுக் கொடுக்கப்பட்டுவருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதை நிறைவேற்ற முடியாது என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்” என்றார் நாராயணன் திருப்பதி.

திரிபுரா: திரிணாமுல் காங்கிரஸுக்குச் செல்லும் 9 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்? - கவிழ்கிறதா பா.ஜ.க அரசு?!

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம்.

“பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு தொடர்பான தி.மு.க-வின் வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்றுதான் தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியிருக்கிறார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே மாட்டோம் என்றோ, நிறைவேற்ற இயலாது என்றோ அவர் ஒருபோதும் சொல்லவில்லை. தற்போதுள்ள சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். மாநில அரசு வரியைக் குறைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், மத்திய அரசுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. மாநில அரசுக்குதான் நஷ்டம்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. எனவே, கலால் வரியை மத்திய அரசு குறைத்தால்தான் நல்லது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அதனுடன் மட்டுமே முடிந்துவிடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும். குறிப்பாக, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். அதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான். ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பற்றி என்றைக்குமே மத்திய அரசு கவலைப்பட்டது கிடையாது. கடந்த ஆண்டு கொரோனா சூழலில், 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன் பலன் யாருக்குப் போய்ச்சேர்ந்தது... ஏழை, எளிய மக்களுக்கா போய்ச் சேர்ந்தது? பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயராமல் இருக்கும். அதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். ஆனால், கலால் வரியை உயர்த்திக்கொண்டே போகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் நிதியைவைத்து சாலை போடுகிறோம் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது” என்றார் கண்ணதாசன்.

அடுத்த கட்டுரைக்கு