Published:Updated:

``மத்திய அரசுடன் மோதும் மாநில அரசுகள்!” - புதிய பரிமாணம் எடுக்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) செயல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

கடந்த 2019 பொதுத்தேர்தலில், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையோடு பா.ஜ.க ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடங்கி தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) வரை தனது அஜெண்டாவில் உள்ளதைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறது.

அந்த வரிசையில், கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நட்பு சக்திகளின் ஆதரவோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. சி.ஏ.ஏ நிறைவேற்றப்பட்டதி லிருந்தே நாடு முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

பிரதான தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ’சி.ஏ.ஏ மற்றும் அதோடு சேர்ந்த என்.ஆர்.சி - என்.பி.ஆரை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்’ என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. சி.ஏ.ஏ -வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

சி.ஏ.ஏ-வுக்கும், என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அரசு சொல்லிவந்தாலும், 'இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வாதிட்டுவருகின்றன. சி.ஏ.ஏ-வுக்கு எழுந்த எதிர்ப்பு, நாடாளுமன்றத்தில் அதனை ஆதரித்த நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் போன்றவர்களையுமே ‘எங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி-யை செயல்படுத்த மாட்டோம்’ என அறிவிக்க வைத்திருக்கிறது

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

ஆனால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆரை செயல்படுத்துவதில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை என பா.ஜ.க உறுதிபடத் தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் சி.ஏ.ஏ-வுக்கு இடைக்காலத்தடை விதிக்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே சி.ஏ.ஏ-வின் அடுத்தகட்டம் என்னவென்பது தெரியவரும்.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

இந்த நிலையில், சி.ஏ.ஏ-வைத் திரும்பப்பெற வேண்டும் என கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு முன்னர், என்.பி.ஆர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள மாநிலத்தில் நிறுத்திவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மத்திய அரசின் ஒரு சட்டத்தை எதிர்த்து மாநில அரசு, உச்ச நீதிமன்றம் செல்லும் அரிதான சம்பவங்களில் இதுவும் ஒன்று.

``உண்ணாவிரதம் முதல் உச்ச நீதிமன்றம் வரை" - சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடரும் பினராயி அதிரடிகள்!

கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் அரசும் சட்டப்பேரவையில் சி.ஏ.ஏ-வை திரும்பப்பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சி.ஏ.ஏ -வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரள அரசுடன் உச்ச நீதிமன்றத்தில் இணையப்போவதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார். கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவும் காங்கிரஸ் ஆளுகிற மாநில அரசுகளும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளோடு இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகள் இதனை ஏற்க மறுத்து, அடுத்தகட்ட போராட்டங்களுக்கு நகர்வது, சி.ஏ.ஏ எதிர்ப்பு புதிய பரிமாணம் அடைவதைக் காட்டுகிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ஆனால், காங்கிரஸ் எம்.பி மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “சி.ஏ.ஏ சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுதான். ஆனால், உச்ச நீதிமன்றம் ஒருவேளை சி.ஏ.ஏ-வை செல்லும் என அறிவித்துவிட்டால், மாநில அரசுகள் அதனை எதிர்க்க முடியாது. இது சிக்கலான நிலைதான். சி.ஏ.ஏ எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை எதிர்க்கட்சிகள், அவர்கள் ஆளுகிற மாநில அரசுகள் சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் எதிர்ப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகப் பார்க்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 131, மத்திய அரசு - மாநில அரசு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கிற அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கிறது. அந்தப் பிரிவின்கீழ்தான் கேரள அரசு இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் சொல்வதே இறுதித் தீர்வாக இருக்கும்.

’கேரள அரசு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. இது, சட்டவிரோதமானது’ என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

மேலும், பல மாநில அரசுகள் இந்த சட்டப் போராட்டத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுவது, சுதந்திர இந்திய வரலாற்றில் இது புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ-வை செயல்படுத்த மாட்டோம் என்கிற நிலையில் இருக்க, உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள், சி.ஏ.ஏ-வை செயல்படுத்துவதில் முழு வீச்சில் இருக்கின்றன.

இதுபற்றி முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், , “மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அமைச்சரவை முடிவுசெய்தால் போதுமானது. ஆளுநரின் அனுமதி தேவையில்லை. அரசியலமைப்புப்படி, குடியுரிமை மத்திய அரசின் அதிகாரத்தில் வரக்கூடியது. எனவே, மாநிலஅரசு அதை சட்டப்பூர்வமாக நிராகரிக்க முடியாது. சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர அதிகாரம் இருக்கிறதா இல்லையா... என்கிற கேள்வி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறபோதுதான் எழும். சட்டத்திற்குள்ளிருந்து இதைப் பார்த்தால் முடியாது என்பதுதான் பதில். ஆனால், சி.ஏ.ஏ -வுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு இடையே, மாநில அரசுகளும் அதனை எதிர்ப்பது மேலும் வலுசேர்க்கும். மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சட்டத்துடன் மாநிலஅரசு ஒத்துழைக்க மறுப்பது அரசியலமைப்புக்கு நெருக்கடி ஆகாது. இவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறை. இதுக்கு சட்டப்பூர்வ தீர்வு எட்டப்படும்வரை அடுத்து எதையும் கணிக்க முடியாது” என்றார்.

எல்லாவற்றையும் சட்டம்தான் முடிவு செய்ய வேண்டும். அது, சொல்லப்போகும் முடிவுக்கே தேசமே காத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு