Published:Updated:

`தேசத்துரோகி பி.ஜே.பி?'- களத்தில் இறங்கிய கமல்... கலக்கத்தில் தி.மு.க வாக்கு வங்கி!

`தமிழகத்தில் அ.தி.மு.க வாக்கு வங்கி சரிந்துள்ளது. பி.ஜே.பி-க்கு எதிரான அலையும் கடுமையாக இருக்கிறது. இந்த இரண்டையும் ஒரு சேர கையாளும் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாக்குவங்கி இருக்கும் என்பதை கமல் உணர்ந்துள்ளார்.’

சாதிப்பிரிவுகள் சொல்லி அதில்

தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்

நீதிப்பிரிவுகள் செய்வார்- அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு

தன்னில் செழித்திடும் வையம்...

கமல் அறிக்கை
கமல் அறிக்கை

என்ற பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி பா.ஜ.க-வுக்கு எதிராக தனது எதிர்ப்புக்குரலை ஓங்கி பதிவு செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தவர் இந்தியாவில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக எழுந்துவரும் கடும் எதிர்ப்புக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஊன்றுகோல் உதவியுடன் மேடையேறியிருக்கிறார்.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தாக்கல் செய்தவுடன் நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தின. ஆனால், கமலின் மக்கள் நீதி மய்யம் நேரடியாக இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இந்திய அரசியல் கட்சிகளை தன் பக்கம் திரும்பச் செய்தது. ஆரம்பத்தில் பி.ஜே.பி பின்புலத்துடன் கமல்ஹாசன் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், நாள்கள் செல்ல அவரின் கருத்துகள் நேரடியாகவே பி.ஜே.பி அரசுக்கு எதிராக ஒழிக்க ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் குடியுரிமைச் சட்டத்திருத்தம் குறித்து தனது கடும் கண்டனத்தை மத்திய அரசுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளார் கமல்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்தித்தார் கமல். அப்போது அவர் ``இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு செத்துக்கொண்டிருக்கும்பொழுது, அதைத் தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி” என்று ஆரம்பத்திலேயே கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ``பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கை இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை? ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?”

கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை விட்டு கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலையைத்தான் டெல்லியிலும், அஸ்ஸாமிலும், அலிகாரிலும் செய்கிறது அரசு பயங்கரவாதம். இனத்தின் பெயரால் நாட்டைப் பிரித்து புதிய நாடு பிறந்துவிடும் என ஆசை வார்த்தை பேசி, சட்டத் திருத்தங்களைத் தனக்கு சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருக்கிறது” என்று கடுமையாக பி.ஜே.பியைச் சாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.ஜே.பி கொண்டுவரும் சட்டதிட்டங்களை எதிர்ப்பவர்களை பி.ஜே.பி தரப்பினர் இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள் என்று சொல்லுவது வழக்கமாகிவருகிறது. ஆனால், கமல் பி.ஜே.பி-யை `தேசவிரோத சக்திகளின் வீழ்ச்சியின் துவக்கம் இது’ என்று சொல்லியுள்ளார். கமலின் இந்த பி.ஜே.பி-க்கு எதிரான வேகம் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

குறிப்பாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்ற முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருந்தது. தி.மு.க உள்ளிட்டவை போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று களத்தில் பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் நீதி மய்யம் பொதுவெளியில் தன்னை அழுத்தமாகப் பதிவு செய்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதற்குப் பிறகுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.

இந்தியாவிலே தமிழகம் மட்டும்தான் பி.ஜே.பி-க்கு எதிரான பெரும் களமாக இப்போது வரை இருந்துவருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்ற அசுரத்தனமான வெற்றிகூட தி.மு.க. தலைமைக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தில் நிலவிய எதிர்கருத்துக்கு கிடைத்த வெற்றி என்பதை தி.மு.க-வும் உணர்ந்தது. அந்தக் களத்தை இப்போது தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் கமலஹாசன்.

மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video

ஏற்கெனவே பி.ஜே.பி மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த கமல், குடியுரிமை மசோதாவுக்கு எதிரான அலை இந்தியா முழுவதும் கடுமையாக இருந்ததைப் பார்த்தபிறகு, தனது கட்சியின் பங்கும் இதில் மகத்தானதாக இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிளிடம் ஆலோசனை செய்தார். உடனடியாக தனது கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மூலம் முதலில் அறிக்கை ஒன்றை விடச் செய்துள்ளார். அந்த அறிக்கையிலும் ``கட்சியும், தலைவரும் இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு கடைசிவரை போராடுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். மறுபுறம் தி.மு.க-வின் செயல்பாடுகளுக்குப் போட்டியாகவும் இந்த விவகாரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கமல் திட்டமிட்ட பிறகே ஊன்றுகோல் உதவியுடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதற்கு காரணம் என்கிறார்கள்” கமலுக்கு நெருக்கமானவர்கள்.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. ஆர்ப்பாட்டம்

``தமிழகத்தில் அ.தி.மு.க வாக்கு வங்கி சரிந்துள்ளது. பி.ஜே.பி-க்கு எதிரான அலையும் கடுமையாக இருக்கிறது. இந்த இரண்டையும் ஒரு சேர கையாளும் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாக்குவங்கி இருக்கும் என்பதை கமல் உணர்ந்துள்ளார். எனவே, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இடைவெளி இருப்பதால் அதற்கு முன்பாகவே தன்னை முழுமையாக பி.ஜே.பி-க்கு எதிரான நபராக மக்களிடம் பதிவு செய்யும் வேலையை கமல் தொடங்கிவிட்டார்.

கமலின் இந்த அதிரடி மற்றொரு ரூபத்தில் தி.மு.க-வுக்கும் பாதகமாகச் செல்லும். தி.மு.க-வே பி.ஜே.பி-யை தேசத் துரோகி என்று சொல்ல யோசிக்கும் நேரத்தில் துணிச்சலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தி பி.ஜே.பிக்கு எதிராக களமாட தயாராகிவிட்டார் எங்கள் நம்மவர்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் கமல் கட்சியினர்.

அதே நேரம் ரஜினியுடன் இணைந்து செயல்படும் திட்டம் கமலிடம் இருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டால்,

கமல், ரஜினி
கமல், ரஜினி

ரஜினி, கமல் இருவரும் இணைந்துசெயல்படுவது அரசியல் களத்தில் புதிய சக்தியாக மாறும். பி.ஜே.பி விஷயத்தில் ரஜினி மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர். ஆனால், கமல் தொடர்ந்து பி.ஜே.பி-க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். இதனால் இருவரும் இணைந்து செயல்படுவதில் சிக்கல் வரும் என்பது ஏற்றுக்கொள்ளகூடியதே. ஆனால், தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் பி.ஜே.பி-க்கு எதிரான செயல்பாடுகள் மட்டும் வெற்றியடைக்கூடிய நிலையில் இருக்கிறது. இதை ரஜினியும் உணராமல் இல்லை” என்கிறார்கள்.

ஆனால், கமலின் இந்தப் பாய்ச்சலை கொஞ்சம் அச்சத்தோடுதான் பார்க்க ஆரம்பித்துள்ளது தி.மு.க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு