Published:Updated:

ஈழத்தில் முளைக்கும் சிலை அரசியல்!

நடராஜர் சிலை
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜர் சிலை

- நிலாந்தன்

மூன்று சிலைகள் அண்மை வாரங்களாக ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசுபொருள்களாக மாறின. முதலாவது, ஆனையிறவுக்கு அருகே கண்டி வீதியில், தட்டுவன்கொட்டிச் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை.இரண்டாவது, கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினர் நிறுவிய புத்தர் சிலை. மூன்றாவது, யாழ் நகரத்தின் விளிம்பில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலை.

இம்மூன்று சிலைகளுக்கும் அரசியல் பரிமாணம் உண்டு.ஆனையிறவில் நிறுவப்பட்டுள்ளது நாட்டில் உள்ள நடராஜர் சிலைகளில் ஆகப்பெரியது. தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கரைச்சி பிரதேச சபை அச்சிலையை நிறுவியுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான ஆனையிறவை அரசாங்கம் யுத்த வெற்றி வளாகமாக மாற்றி அமைத்துள்ளது. அது யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்று.

இவ்வாறு யாழ்ப்பாணத்தின் வாசலில், கடலேரியின் உப்புக்காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றிவாடை வீசும் ஒரு பிரதேசத்தில், அந்த யுத்த வெற்றி வாதத்திற்கு எதிரான தமிழ் மரபுரிமைச் சின்னமாக நடராஜர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.அங்கே தமிழ் மக்கள் தமது வீரத்தை அல்லது தியாகத்தை நினைவுகூர்ந்து சின்னங்களை அமைக்கத் தடை உண்டு.அதனால்தான் நடராஜர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

வள்ளுவர் சிலை
வள்ளுவர் சிலை

அதேசமயம் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் இந்திய மத்திய அரசாங்கத்தை மகிழ்விப்பதன் மூலம் கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்துவதற்கு  முயற்சி செய்யும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அந்த நோக்கத்தோடு நடராஜர் சிலையை நிறுவியுள்ளாரா என்ற கேள்வியும் உண்டு.

இரண்டாவது சிலை, கச்சத்தீவில் நிலைகொண்டிருக்கும் கடற்படையினர் தமது வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கிய ஒரு புத்தர் சிலை. கச்சத்தீவு, பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழ்க் கத்தோலிக்கர்களின் யாத்திரிகைத் தலம். அச்சிறிய தீவிலுள்ள அந்தோணியார் கோயிலின் ஏகபோகத்தை நிராகரித்து புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

மூன்றாவது, வள்ளுவர் சிலை. யாழ் புறநகர்ப் பகுதியில் பண்ணை சுற்று வளைவில் நிறுவப்பட்டிருக்கும் இச்சிலை, தமிழ்நாட்டின் விஜிபி குழுமத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இச்சிலையைக் கையளிக்கும் நிகழ்வில் விஜிபி குழுமத்தின் தலைவரோடு ஈழத்துச் சிவசேனையின் தலைவரும் காணப்பட்டார். இச்சிலையை யாழ் மாநகர சபை நிறுவியிருக்கிறது. அதற்குரிய நிதியுதவியை ஒரு தனியார் சுற்றுலா விடுதி வழங்கியது. அன்பளிப்பாக வழங்கப்படுகையில் வள்ளுவருக்குத் திருநீறு பூசப்பட்டிருக்கவில்லை.ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில சைவப் பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக வள்ளுவருக்குத் திருநீறு பூசப்பட்டுள்ளது. இது வள்ளுவரைச் சைவராகக் குறுக்கும் ஒரு முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது.

மேற்கண்ட மூன்று சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மொழியபிமானம், அல்லது இன அபிமானம், அல்லது மத அபிமானம் என்பன நாட்டுக்குப் புதியவை அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியது போல, ‘புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கும்’ ஒரு நாடே இலங்கைத் தீவு. சிங்கள பௌத்தமயமாக்கலின் ஒரு பகுதியாக புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அல்லது, ஏனைய மதங்களின், குறிப்பாக தமிழ் மக்களின் வழிபாட்டிடங்கள் சிதைக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஆழங்காண முடியாத கிணறு என்று அழைக்கப்படுகின்ற நிலாவரைக் கிணறு அமைந்துள்ள காணியில் திடீரென்று ஒரு புத்தர் சிலை தோன்றியது. அருகில் அமைந்துள்ள ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாய், புத்தர் தன் கனவில் வந்து கூறியதால் அச்சிலையை அங்கே வைத்ததாகப் பின்னர் கூறினார்.

கடந்த வாரம் வவுனியா, வெடுக்குநாறி மலையில் உள்ள மிகப் பழைமையான ஆதிசிவன் கோயில் சிதைக்கப்பட்டது. மற்றொரு மலையான குருந்தூர் மலையில் ஏற்கெனவே இருந்த இந்துக் கோயிலைச் சிதைத்துவிட்டு ஒரு புத்த விகாரை கட்டப்பட்டுவருகிறது.

தமிழ்ப் பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் புத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் அனைத்தும் அருகிலுள்ள படை முகாம்களால் பராமரிக்கப்படுகின்றன. அந்த ஆலயங்களுக்கும் உள்ளூர்த் தமிழர்களுக்கும் இடையில் எந்த இடையூடாட்டமும் கிடையாது. அரச போகத்தைத் துறந்து சன்னியாசியாகிய புத்தருடைய சிலைகள் இலங்கைத் தீவில் நில அபகரிப்பின் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.

நடராஜர் சிலை
நடராஜர் சிலை

தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல, கத்தோலிக்கர்கள்  செறிந்து  வாழும் நீர்கொழும்பு போன்ற இடங்களிலும் சிலைகளின் மோதல் உண்டு. கடந்த ஒரு தசாப்த காலத்துள் சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையே போட்டிக்குச் சிலைகளை நிறுவும் போக்கு ஒன்று உருவாகியுள்ளது. இது நீதிமன்றம் வரை போயிருக்கிறது. அதுபோலவே தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் மன்னார் பகுதியில், கத்தோலிக்கர்கள் சிலைகளை நிறுவி தமது மேலாண்மையை, ஏகபோகத்தை ஸ்தாபித்து வருவதாக இந்துக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அதாவது இலங்கைத்தீவில் பொதுவெளியில் காணப்படும் பெரும்பாலான கடவுள் சிலைகள் வெறும் சிலைகள் அல்ல. அவை அரசியல் சிலைகள்; அல்லது ஏதோ ஒரு தரப்பினரின் மேலாண்மையை அல்லது தற்காப்புணர்வைப் பிரதிபலிக்கும் சிலைகள்.

இவ்வாறு சிலைக்குப் பதில் சிலை வைக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தில் அண்மை ஆண்டுகளாக தமிழ்ப்பகுதிகளில் உள்ள இந்துக்களும் சிவலிங்கங்களையும் சைவக் கடவுளர்களின் சிலைகளையும் ஆங்காங்கே வைக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் இரவோடு இரவாக அநாமதேயச் சிவலிங்கங்கள் ஆங்காங்கே தோன்றுகின்றன. கடந்த வாரமும் வடமராட்சிப் பகுதியில் கடற்கரையை அண்டி ஒரு சிவலிங்கம் காணப்பட்டது.

முதலில் சிவலிங்கம் யார் வைத்தது என்று தெரியாமல் வைக்கப்படும். பின்னர் அதற்குப் பீடம் கட்டப்பட்டு, கூரை வைத்துப் பூஜை நடக்கும். இப்புதிய போக்கை ஈழத்துச் சிவசேனை, உருத்திர சேனை போன்ற அமைப்புகள் ஊக்குவிக்கின்றன. அண்மை ஆண்டுகளாக இப்படிப்பட்ட அமைப்புகள் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் மலையகத்திலும் வேகமாக வளர்ந்துவருகின்றன.

குறிப்பாக ஈழத்துச் சிவசேனை, சிங்கள பௌத்தமயமாக்கலைவிட கிறிஸ்தவமயமாக்கலை அதிகம் எதிர்க்கின்றது. ‘தமிழ் மக்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களின் ஆதரவு மட்டும்தான் கிடைக்கும். இந்துக்களாக அடையாளப்படுத்தினால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவு கிடைக்கும்’ என்று ஈழத்து சிவசேனையின் தலைவர் கூறுகிறார். புத்தர் சிலைகளை வைக்கும் சிங்கள பௌத்த அரசியலை விடவும் சக கிறிஸ்தவர்களையே அவர் விரோதியாகப் பார்க்கின்றார்.

மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ சபைகளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். தமிழ் மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று கேட்டுப் போராடுகிறார்கள்.அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையைப் பெறுவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் புதுப்பிக்க முற்படுகின்றது. தமிழ் மக்கள் புதிய சட்ட வரைவையும் எதிர்க்கிறார்கள். ஆனால், ‘அதே சட்டத்தைப் பயன்படுத்தி மதம்மாற்றிகளைக் கைது செய்ய வேண்டும்’ என்று ஈழத்துச் சிவசேனையின் தலைவர் கூறுகிறார்.

புத்தர் சிலை
புத்தர் சிலை

அவரைப் போன்று கிறிஸ்தவர்களை விரோதிகளாகப் பார்க்காதபோதிலும், இந்துத்துவா ராஜதந்திரத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசைக் கையாளலாம் என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அண்மை ஆண்டுகளாக நம்பத்தொடங்கிவிட்டார்கள். தாயகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும், அவ்வாறு நம்புவோர் உண்டு. அவர்கள் தமிழகத்திலும் புதுடெல்லியிலும் உள்ள பாரதிய ஜனதாக் கட்சிப் பிரமுகர்களை நெருங்கச் செல்கிறார்கள். இந்திய மத்திய அரசாங்கத்தை அணுகுவதற்கு இந்து மதத்தை ஒரு வாகனமாகப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை அழிப்பதற்கு எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேரலாம் என்றால், தமிழர்களும் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கு யாரோடும் கூட்டுச் சேரலாம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அண்மை மாதங்களாக தமிழகத்திலிருந்து அர்ஜுன் சம்பத், அண்ணாமலை போன்றவர்கள் வடபகுதிக்கு வருகை தருவது மேற்படி சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கின்றது.

இந்துக்களின் ஆலயங்கள் சிதைக்கப்படுவதையும் இந்து மரபுரிமை சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்படுவதையும் முன்னிறுத்தி இந்தியாவின் பாரதிய ஜனதா அரசாங்கத்தைக் கையாள வேண்டும் என்று இந்து மத அமைப்புகள் இப்பொழுது அறிக்கை விடத் தொடங்கியுள்ளன.

ஈழத் தமிழர்கள் மத்தியில் இப்பொழுது பரவலாகிவரும் சிலை அரசியல் எனப்படுவது ஒரு விதத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிரானது. சிங்கள பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு தமிழ் மக்களும் தமது மரபுரிமைச் சின்னங்களைத் தற்காப்பாக முன்னிறுத்துகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு புறம் அது தமிழ்த் தேசிய அரசியலின் மதப் பல்வகைமையை உடைக்கின்றது. தமிழ் அரசியலை ஒரு மதத்துக்குள் குறுக்க முயற்சி செய்கின்றது.

ஏற்கெனவே தமிழ்ப் பகுதிகளை பிரதேசவாதத்தின் பெயரால் வடக்கு-கிழக்கு என்று பிரிக்க முற்படும் சக்திகள், கிழக்கில் பலமடைந்துவருகின்றன. இப்பொழுது தமிழ் மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க முற்படும் சக்திகள் வடக்கில் உற்சாகமாக உழைத்து வருகின்றன. தமிழ் மக்கள் இப்பொழுது ஒரு பலமான திரட்சியாக இல்லை; அவர்களை ஒரு தேசமாகத்  திரட்டவல்ல தலைமைகளும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பது அவர்களுக்கு வசதியாக உள்ளது.