Published:Updated:

ஆக்ஸிஜனைக் காரணம் காட்டி மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?! - நிலவரம் என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில் நாள் ஒன்றுக்கு 1,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துதருகிறோம் என ஸ்டெர்லைட் அனுமதி கேட்டுள்ளதன் பின்னணி என்ன?

``பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால், மக்கள் உயிரைக் காத்திடுங்கள்” என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களிடமிருக்கும் மிக முக்கியமான ஆயுதமாக ஆக்ஸிஜன் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று (22.04.2021) விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து, அங்கு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசுத் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், வேதாந்தாவின் இடைக்கால மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (23.04.2021) மீண்டும் நடைபெற்றது. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தூத்துக்குடி பகுதி மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தை ஒத்திவைத்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.

ஆக்ஸிஜன் அரசியல்... என்னதான் நடக்கிறது?

ஆக்ஸிஜனைக் காரணம் காட்டி மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை... கள நிலவரம் என்ன என்பது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``காற்றையும் மண்ணையும் நச்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரின் மூச்சை அடக்கியது இதே ஆலைதான். உயர் நீதிமன்றம் அளித்த 185 பக்க தீர்ப்பிலும், ``இந்த ஆலை ஆபத்தான நச்சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. `ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை' என தமிழகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிவரும் நிலையில் எதற்காக ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும்? ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இருந்தாலும் அதன் உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேறு எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டிருக்கும் ஒரு நச்சாலையை ஏன் திறக்க வேண்டும்? நச்சுக்காற்றை வெளிவிட்ட அதே ஆலை உற்பத்தி செய்துதரும் ஆக்ஸிஜனை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஆக்ஸிஜனின் தேவையையும் அவசியத்தையும் பற்றி தூத்துக்குடி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்பாளர்கள்
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்

`இலவசமாக ஆக்ஸிஜனைத் தருகிறோம்' எனச் சொல்லி மீண்டும் காப்பர் உற்பத்தியைத் தொடங்கப் பார்க்கிறது ஆலைத்தரப்பு. செய்யும் தவற்றைக்கூடச் சரியாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் என அனுமதி வழங்கினாலும், அதே நல்ல காற்றுக்காக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ஆலைத் தரப்பில் பேசினோம். ``கொரோனா வைரஸ், இரண்டாவது அலையில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன், ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்கத் தயாராக இருக்கிறோம். மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறோம். இக்கட்டான இந்தச் சூழலில் மக்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் இரண்டு உற்பத்திக் களன்கள் மூலம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 டன் ஆக்ஸிஜனை எங்களால் உற்பத்தி செய்ய முடியும். 30 நாள்களில் கிட்டத்த 30 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை மக்களுக்குக் கொடுக்க முடியும். மக்கள் தேவையில்லாத அச்சத்தில் இருக்கிறார்கள். ஆக்ஸிஜன் உற்பத்திக்கு என்று அனுமதி பெற்ற பின்னர் அதில் மற்றொன்றை எப்படித் தயாரிக்க முடியும்? அரசின் மேற்பார்வையில்தானே உற்பத்தியையே தொடங்குவோம்! இப்போதைக்கு நாட்டு மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. அதை எங்களால் கொடுக்க முடியும் எனும்போது அதற்கான முயற்சியை எடுத்திருக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

மக்களுக்கு உதவ வேண்டும் என்பது ஒன்று மட்டுமே எங்களின் தற்போதைய இலக்கு. ஆலையை மீண்டும் திறப்பது குறித்து சட்டரீதியாக வழக்கு சென்றுகொண்டிருக்கிறது. அது தொடர்பான வழக்கு விசாரணை வரும் திங்கள் (26.04.2021) வருகிறது. நிச்சயம் எங்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் என எதிர்பார்க்கிறோம். " என்றனர்.

அரசே ஏற்று நடத்த அனுமதிப்பீர்களா எனக் கேட்டதற்கு, ``அதெப்படி தனியார் ஆலையை அரசிடம் ஒப்படைக்க முடியும்... அப்படி ஒப்படைத்து அரசுத் தரப்பில் உற்பத்தி தொடங்கி நடத்துகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அப்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அரசு, ஆலை நிர்வாகத்தைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்களே தவிர, பிரச்னையைத் தீர்க்க உதவ மாட்டார்கள். வழக்கு தொடர்ந்திருக்கிறோம். பிரச்னையைச் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றனர்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்டைத் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ` ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தத் தயாரா... தமிழக அரசு எடுத்து நடத்தினாலும் கவலையில்லை’ எனத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, `ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். காரணம், ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று கூறினார்.

தமிழக அரசின் இந்த பதிலால், அதிருப்தி அடைந்த நீதிபதி, `மக்கள் இறந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என அரசு சொல்வதா? சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, ஆலையைத் திறக்க முடியாது எனச் சொல்லக் கூடாது’ என்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு