Published:Updated:

`நகைகள் எதற்கு... ஆயுதங்கள்தான் சேமிப்பு!' - உ.பி பா.ஜ.க தலைவர் சர்ச்சை கருத்து

அயோத்தி வழக்கு தொடர்பாக உ.பி டியோபந்த் பகுதி பா.ஜ.க தலைவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கஜ்ராஜ் ரானா
கஜ்ராஜ் ரானா ( Twitter/@rana_gajraj )

வட இந்தியாவில் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளிக்கு முன்னதாக தந்தேரஸ் (Dhanteras) என்ற பண்டிகையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தங்க ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், சமையல் பாத்திரங்கள் வாங்குவதே இந்த நாளின் சிறப்பு. இந்த வருடப் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது.

தந்தேரஸ்
தந்தேரஸ்

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோபந்த் (Deoband) நகர் பா.ஜ.க தலைவர் கஜ்ராஜ் ரானா என்பவர், தன் மாநில மக்களைத் தங்க நகைகளுக்குப் பதிலாக வாள், இரும்பு ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளதை ஒட்டி ரானா இவ்வாறு பேசியுள்ளார்.

நேற்று முன் தினம் அயோத்தி வழக்கு பற்றி ஊடகங்களிடம் பேசிய ரானா, ``அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோயில் அமைய வேண்டும் என்பதுதான் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் ஆசையாக உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. அது ராமர் கோயிலுக்குச் சாதகமாக வரும் என நம்புகிறோம்.

அயோத்தி
அயோத்தி

தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, தந்தேரஸ் பண்டிகைக்கு மக்கள் ஆபரணங்களை வாங்குவதற்குப் பதிலாக இரும்பு ஆயுதங்கள், வாள்களை வாங்கி சேமித்து வைப்பது நல்லது. உரிய நேரம் வரும்போது அந்த ஆயுதங்கள், நம்முடைய பாதுகாப்புக்கு உதவும்” எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சு உத்தரப்பிரதேசம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

`குரலை உயர்த்திப் பேசுவதால் எந்தப் பயனுமில்லை!- அயோத்தி வழக்கு இறுதி விசாரணையில் தலைமை நீதிபதி

சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தக் கருத்துக்கு அவர் விளக்கமும் அளித்திருக்கிறார். அதில், ``நாட்டின் சூழ்நிலை மோசமடையும் நேரங்களில் இந்த ஆயுதங்கள் மூலம் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் சடங்குகளில்கூட ஆயுதங்களை வணங்குகிறோம். நமது கடவுள்களும் தெய்வங்களும் சூழ்நிலைகளைப் பொறுத்து ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

கஜ்ராஜ் ரானா
கஜ்ராஜ் ரானா

தற்போது மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக ஆலோசனை மட்டுமே வழங்கினேன். நான் கூறியதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

``இதுபோன்ற கருத்துகளுக்கு பா.ஜ.க ஆதரவளிக்காது. அவர் கூறிய அனைத்து கருத்தும் அவருடைய சொந்த கருத்து. எந்த ஒரு செயலும் அறிக்கையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது” என கஜ்ராஜ் ரானாவின் கருத்து பற்றிப் பேசியுள்ளார் உ.பி பா.ஜக. செய்தித் தொடர்பாளர் சந்திரமோகன்.