Published:Updated:

போராட்டங்களின் நாயகன் – தோழர் ஜி.செல்வா | இவர்கள் | பகுதி 16

ஜி.செல்வா | இவர்கள்
News
ஜி.செல்வா | இவர்கள்

தீவிரமான இயக்கச் செயல்பாடுகளின் காரணமாக கல்லூரியில் அவரின் வருகை பெருமளவில் குறைய, அங்கிருந்து விலகிக்கொள்ள அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.
“Many small people, in small places, doing small things can change the world.”
— Eduardo Galeano

வரலாற்றை உற்று கவனிக்கையில் அது எப்போதும் அதிகாரத்திலிருப்பவர்களின் குரலாக மட்டுமே இருந்துவருவதை நாம் அறிய முடியும். பெரும் சாம்ராஜ்யங்களெல்லாம் குரலற்றவர்களின் படுகொலைகளின் மீது கட்டப்பட்டவைதான் என்பது கசப்பான உண்மை. அரண்மனைகளையும், கோட்டைகளையும், கோயில்களையும் கட்டுவதற்காகத் தனது உழைப்பையும் உயிரையும் தந்த எவரும் அந்தக் கோட்டைகளுக்கு அருகில்கூட வாழ அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தத் துயர வரலாறு இன்றளவும் மாறாத தொடர்கதையாக இருக்கிறதெனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

உலகின் எந்தப் பெருநகரங்களை எடுத்துக்கொண்டாலும் அந்த நகரங்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் பிரமாண்டமாக விஸ்வரூவமெடுத்ததற்குப் பின்னால் அந்த தேசத்து உதிரி மக்களின் உடலுழைப்புதான் முக்கியக் காரணியாக இருந்திருக்கும். அப்படி உருவான வளர்ச்சி, அதற்காக உழைத்த மக்களுக்கான பகிர்வைத் தருவதற்கு பதிலாக அந்த நகரத்திலிருந்து துரத்துவதைத்தான் பரிசாகக் கொடுக்கிறது. ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் ஒரேவிதமான முகத்தை எந்த நகரமும் வழங்குவதில்லை. சென்னை நகரமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. ``தொழிலாளர்களின் உழைப்புக்கு அளிக்கப்படும் சம்பளம், அவர்களால் உருவாக்கப்படும் பொருள்களின் மதிப்பைவிட ( அல்லது உழைப்பின் சரியான மதிப்பைவிட) மிக மிகக் குறைவானது. அந்தக் கொடுக்கப்படாத சம்பளமே உபரி என்கிறது மார்க்சியம்.”

இன்னும் எளிதாக இதை விளங்கிக்கொள்ள தோழர் செல்வா குறிப்பிட்ட ஓர் உதாரணத்தைத் தருகிறேன். 1920-ம் வருடம் ஒரு நிறுவனம் தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு தொழிலைத் தொடங்குகிறது. இந்த நூறு வருட காலத்தில் அந்த நிறுவனம் பெருமளவில் வளர்ந்து, தனது முதலீட்டைவிடவும் பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துவிட்டதோடு பெரும் சொத்துகளையும் சேர்த்திருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்த நகரத்தின் நிர்மாணத்துக்காக வந்த கூலித் தொழிலாளிகளின் நிலை என்னவாக இருக்கிறது? இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின்னாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஏன் கூலித் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முதலாளியின் பங்களிப்பு எத்தனை முக்கியமானதோ அதேயளவு இந்தத் தொழிலாளர்களின் உழைப்பும் முக்கியமானது.

ஆனால் அவர்களுக்கான பகிர்வு கிடைத்திருக்கவில்லை.

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் தனியனல்ல. அவனது வாழ்வும் முன்னேற்றமும் சமூகத்தின் பங்கில்லாமல் சாத்தியப்படுவதில்லை என்பதால், ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் செயல்பாடுகளுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்க வேண்டியவனாயிருக்கிறான். தோழர் ஜி.செல்வாவின் பெற்றோருக்கு எவ்வித அரசியல் இயக்கங்கள் சார்ந்த தொடர்புகளும் இல்லை. அடிப்படையில் நன்றாகப் படிக்கக் கூடியவராகவும், விளையாட்டுகளில் ஆர்வமானவராகவும் இருந்த செல்வாவுக்கு பள்ளிக் காலங்களிலிருந்தே பொது விஷயங்களில் தீவிர ஆர்வமுண்டு.

ஜி.செல்வா | இவர்கள்
ஜி.செல்வா | இவர்கள்

சென்னை, குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவராயிருந்தபோது, சக மாணவர் ஒருவரை ஆசிரியர் அவமானப்படுத்த, அந்த மாணவர் தற்கொலைக்கு முயல்கிறார். மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட அந்த மாணவருக்காக பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து செல்வா என்ற அந்த மாணவன் தனது நண்பர்களோடு ஒரு போராட்டத்தைத் தொடங்குகிறார்.

`சிறுவர்களின் விளையாட்டு’ என ஆசிரியர்களாலும் மற்றவர்களாலும் நினைக்கப்பட்ட அந்தப் போராட்டம் நான்கு மாத காலம் நீடித்ததோடு, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு வெற்றியோடு முடிவுக்கு வந்தது.

அந்தப் போராட்டமும், அது கொடுத்த வெற்றியும்தான் அவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ அவரைத் தங்களோடு இணைந்து பணியாற்றச் சொல்லிக் கேட்க, அமைப்பாக இருக்கவேண்டியதன் அவசியத்தைப் புரிந்திருந்த செல்வாவும் அதற்குச் சம்மதிக்கிறார். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் முன்னோடிகளுள் ஒருவரான தோழர் திரு என்.சங்கரய்யாவை சந்திக்க அழைத்துச் செல்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தோழர்களின் வழிகாட்டுதலாலும், தோழர் சங்கரய்யாவின் இயக்கச் செயல்பாடுகளின் மீது ஏற்பட்ட ஈடுப்பாட்டாலும் செல்வா தனது வாழ்வை கம்யூனிச சிந்தனைகளால் செதுக்கத் தொடங்குகிறார். கல்வியில் பெரும் நாட்டம்கொண்டிருந்தபோதும் மாணவப் பருவத்திலேயே களப் போராட்டங்களிலும், கட்சிச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டதால் அவரது படிப்பு தடைப்படவே செய்தது.

ஜி.செல்வா | இவர்கள்
ஜி.செல்வா | இவர்கள்

கற்றல் என்பது வகுப்பறைகளில் நிகழ்வது மட்டுமல்ல என்ற தெளிவிருந்ததால் அவர் சித்தாந்தங்களைக் கற்றுத் தெளிகிறார். தொடர்ந்த வாசிப்பும், இயக்கத்தினரின் நட்பும் அவருக்குத் தேவையான கல்வியாக அமைந்தன. மாக்ஸிம் கார்க்கி எழுதிய 'தாய்' நாவல் அவருக்கு வாசிக்கக் கிடைக்கிறது. அந்த நாவல் சமூகம் குறித்து அவருக்கிருந்த புரிதலை மாற்றியதோடு, எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் சமூகத்தை நேசிப்பதற்கான மனதையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த நாவலின் பாவேல் கதாபாத்திரத்தைப்போலவே செல்வாவின் வாழ்க்கைப் பயணமும் மாறத் தொடங்கியது.

`படிக்கும் வயதில் அரசியல் தேவையில்லை’ என நமக்குத் தொடர்ந்து கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. என்றாவது `ஏன் எனக்கு அரசியல் தேவையில்லை?’ என எந்த மாணவனாவது கேள்வி எழுப்புகிறாரா? படிக்கும் வயதில் அரசியலைத் தெரிந்துகொள்ளாமல் வேறு எப்போது தெரிந்துகொள்வது? புரட்சி பெரும் எழுச்சியோடு வெளிப்பட்ட எந்த தேசத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு அரசியல், மாணவர்களிடம் விதைக்கப்பட்டது முக்கிய நிகழ்வாக இருப்பதை நாம் காண முடியும். சென்னையின் ஒரு பிரபல கல்லூரிக்குப் பேசச் சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களிடம் அரசியல் நூல்கள் குறித்துப் பேசியபோது அவர்கள் உரையாட அச்சப்பட்டனர்.

`காலேஜ் ல பாலிடிக்ஸ் பேசக் கூடாது’ன்னு சொல்லியிருக்காங்க சார்…’ என ஒரு மாணவி திக்கித் தடுமாறிச் சொன்னார்.

சிந்திக்கவும், கேள்வி கேட்கவும் தவறுகிற ஒரு தலைமுறை எப்படி நாளை புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும்? மாணவர்களிடம் அரசியலைப் பேசுங்கள், சரியான அரசியலைக் கற்றுக் கொடுக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை.

இவ்வளவு களப்போராட்டங்களுக்கு நடுவிலும் பன்னிரண்டாம் வகுப்பில் தனது பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவராக செல்வா தேர்வாகிறார். அதன் பிறகு சென்னை தாம்பரத்தில் ஒரு கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடங்கியவர் இடதுசாரி மாணவ இயக்கமான SFI-ல் இணைந்து தீவிரமாகச் செயலாற்றி, பல்வேறு பிரச்னைகளுக்காகச் சிறைக்குச் செல்லவும் நேர்கிறது. இயக்கச் செயல்பாடுகள், போராட்டங்கள், கைது, சிறையென அவரின் தீவிர நடவடிக்கைகளைக் கண்டு வீட்டில் பெற்றோர் அச்சம்கொள்ளும்போதெல்லாம் தோழர்களின் அரவணைப்பு அந்த அச்சங்களிலிருந்து அவர்களை மீட்டு வந்தது.

குறுகியகாலத்திலேயே எஸ்.எஃப்.ஐ-ன் மாவட்டச் செயலாளராக வளர்ந்தவர்

அந்தக் காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்ற முக்கியமான மாணவர் போராட்டங்களில் பெரும் பங்காற்றியிருக்கிறார். இளங்கலைப் படிப்பு முடிந்த பிறகு சென்னை லயோலாவில் முதுகலைப் படிப்புக்காகச் சேர்கிறார். கல்வி குறித்த உரையாடல்கள் தமிழ்ச் சமூகத்தில் அறிவுபூர்வமாக அதிகரிக்கவேண்டிய தேவை புரிகிறது. கல்விச் சிந்தனைகள் குறித்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கல்வி குறித்த விசாலமான பார்வை வர வேண்டுமானால் அந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என முடிவெடுத்து, தோழர்களின் உதவியோடு கல்வி குறித்த முக்கியமான இருபத்தைந்து நூல்களை மொழிபெயர்க்கிறார்கள்.

ஜி.செல்வா | இவர்கள்
ஜி.செல்வா | இவர்கள்

`புத்தகங்களோடு புத்தாண்டு’ என்கிற அறிவிப்போடு சென்னை லயோலா கல்லூரியில் இருபத்தைந்து புத்தகங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் அறிவுசார் சூழலில் இன்றளவும் மிக முக்கியமானச் செயல்பாடு அது. மாற்றுக் கல்வி குறித்தும், மாணவர்களின் உரிமை குறித்தும் இன்றைக்கு உருவாகியிருக்கும் புதிய கருத்துகளுக்கான விதைகள் இந்த நூல்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீவிரமான இயக்கச் செயல்பாடுகளின் காரணமாக கல்லூரியில் அவரின் வருகை பெருமளவில் குறைய, அங்கிருந்து விலகிக்கொள்ள அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. செல்வா லயோலாவில் தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இணைந்துகொள்கிறார். இதே சமயத்தில் அவரின் தம்பி தொழிற்கல்விக்காக மேல்மருவத்தூரிலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துவிட, தனது குடும்பத்தினரையும் தம்பியோடு இருக்கும்படி மேல்மருவத்தூருக்கு அனுப்பிவைத்துவிடுகிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமே அவருக்கு உலகம். ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிரான போராட்டத்தின்போது இவரைக் கைதுசெய்து அழைத்துச் செல்கிறார்கள்.

ஜி.செல்வா | இவர்கள்
ஜி.செல்வா | இவர்கள்

நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் நீதிபதியிடம் இவர் விவாதம் செய்ய... நான்கு நாள்களுக்குள் ஜாமீன் கிடைத்துவிடுகிற வழக்கில் செல்வாவுக்கு அந்த முறை ஜாமீன் கிடைக்க இருபத்தைந்து நாள்களுக்கும் மேலானது.

இயக்கத்துக்கு அவர் ஆற்றிவந்த அயராத பங்களிப்புக்கு மதிப்பளிக்கும்விதமாக அவரை மத்திய கமிட்டிக்கு அழைக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மத்திய கமிட்டிக்கு அழைக்கப்பட்ட முதல் நபர் செல்வாதான்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களின் எஸ்.எஃப்.ஐ அமைப்பை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியல் போக்கில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்ம் அது. 2009-லிருந்து 2011 வரை டெல்லியில் இருந்தவர், தமிழக அரசியலில் நிலவும் மாற்றங்களை கவனித்து, இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலிருப்பதுதான் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு தமிழ்நாட்டுக்குக் கிளம்புகிறார்.

மாணவர் அமைப்பிலிருந்து விலகி கட்சி வேலைகளைப் பார்க்க அவர் விரும்பியபோது, திரும்பவும் அவர் அடிப்படை உறுப்பினருக்கான வேலைகளிலிருந்து தொடங்கவேண்டியிருந்தது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சூளைப்பள்ளம் என்ற பகுதியில் கட்சி வேலைகள் செய்வதற்காக அனுப்பப்படுகிறார். அது, அந்தப் பகுதி மக்களை இடம்பெயரவைப்பதற்காக அரசின் செயல்பாடுகள் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடத் தொடங்கியதோடு, அவர்களில் சட்டபூர்வமாக 300 குடும்பங்கள் சரியான இடத்தில்தான் குடிசை போட்டிருக்கின்றன என்பதையும் நிரூபிக்கிறார். அந்தப் போராட்டத்தின் வெற்றி அவரை பெருமளவு உற்சாகப்படுத்துகிறது. சென்னையின் பூர்வகுடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் கட்டாய இடப்பெயர்வுகள் என்னும் வன்முறைக்குப் பின்னாலிருக்கும் அரசியல் காரணங்களையும், வரலாற்றுக் காரணங்களையும் மெல்ல மெல்லத் தேடித் தெரிந்துகொள்கிறவர்,

இன்றைக்கு சென்னையின் எந்தப் பகுதியில் மக்கள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டாலும் அதற்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார்.

இளைஞர்களுடன் கலந்துரையாடுவதும் அவர்தம் சிந்தனைகளை கேட்டறிவதும் தனது களப்பணிகளின் முக்கியமான அம்சமாகக் கருதுகிறார் தோழர் செல்வா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகெங்கும் நிலவிய தாராளமயமாக்கல் கோட்பாடுகள், இந்த நூற்றாண்டில் புதிய தாராளமயமாக்கல் எனும் முகம்கொண்டு பரவிவருவதை ஆழ்ந்து கவனிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும்விதமாக மாணவர்களோடும், பட்டதாரி இளைஞர்களோடும் தொடர்ந்து களப்பணியாற்றிவருகிறார். இன்றைய இளைய தலைமுறையின் சமூக விழிப்புணர்வு கண்ணோட்டம் முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறது என்பது அவரின் எண்ணம். ``புதிய தாராளமயமாக்கல் தழைத்தோங்கியிருக்கும் இன்றைய சமூகத்திலேயே பிறந்து, வளர்ந்த அவர்களால் அக்கொள்கையின் சாதக பாதகங்களைச் சரிவர கணித்து கேள்வியெழுப்ப முடிகிறது. இது முன்னெப்போதையும்விட அதிகமாகியிருப்பது வரவேற்புக்குரியது’’ என்கிறார் செல்வா.

ஜி.செல்வா | இவர்கள்
ஜி.செல்வா | இவர்கள்

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னைப் பகுதிக்கான செயலாளராகப் பணியாற்றிவருகிறார். மிகச் சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு கே.பி.மார்க் மக்கள் வாழ்விட உரிமைப் போராட்டத்தில் அவர் கண்ட வெற்றி முக்கியமானது. ஒரு கட்டடத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் கட்டினால்தான் குடியேற முடியும் என முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நீண்ட போராட்டத்தின் காரணமாக, தமிழக அரசு கடந்த வாரம் அந்த அரசாணையை ரத்து செய்தது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தோழர் செல்வாவைப் பல்வேறு போராட்டங்களில் கண்டிருக்கிறேன், பல சமயங்களில் காவல்துறையினரின் கடுமையான தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் மக்கள் போராட்டத்துக்காகக் களத்தில் நிற்கத் தயங்கியதில்லை. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், எத்தகு சமரசமுமின்றி கேள்வியெழுப்பவதிலும், பூர்வகுடி மக்களின் வாழ்வாதரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைக் காக்கும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார் தோழர் ஜி.செல்வா.

போராட்டத்துக்குச் சென்றால் தங்களது வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தால்தான் மக்கள் போராடத் தயங்குகிறார்கள்.

ஏதோவொரு போராட்டத்தின் வெற்றியைச் சுவைக்கும்போது அந்தத் தயக்கங்கள் உடைந்து, பெருமளவிலான மக்கள் ஒன்று திரள்வார்கள். சில வருடங்களுக்கு முந்தைய ஓர் உரையாடலில் `தமது உரிமைகள் குறித்த புரிதல்கள் அதிகரிக்கவேண்டியதுதான் இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கான பிரதான தேவையாக இருக்கிறது’ என எழுத்தாளர் பாலகோபாலின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு அவர் பேசியது நினைவுக்கு வருகிறது. எப்போதெல்லாம் மக்கள் கேள்வி கேட்க மறந்துபோகிறார்களோ... எப்போதெல்லாம் போராட மறந்துபோகிறார்களோ... அப்போதெல்லாம் தோழர் செல்வாவைப் போன்ற யாரோ ஒருவர் அந்த மக்கள் அணிதிரளக் காரணமாகிறார்கள்.