Published:Updated:

ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவகாரம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு - அரசியலா, அக்கறையா?

ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

முதல்வரின் விளக்கத்தைக் கேட்பதற்கு முன்பாகவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றன என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவகாரம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு - அரசியலா, அக்கறையா?

முதல்வரின் விளக்கத்தைக் கேட்பதற்கு முன்பாகவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றன என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Published:Updated:
ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர். அதேவேளை, ``ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை'' என சட்டமன்றத்தில் விளக்கமளித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனாலும் ` தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது' என எதிர்க்கட்சிகளும் 'எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே ஒன்றுமில்லாத விஷயத்தை அரசியலாக்குகின்றன' என ஆளும் தரப்பும் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர்.

ஆளுநர் ரவி - மயிலாடுதுறை ஆதினம்
ஆளுநர் ரவி - மயிலாடுதுறை ஆதினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆளுநர் பார்வைக்குப் போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தைக் கொண்டுவந்து மறைத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடியை சாலையில் எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. ஆளுநரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி,

``ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆளுநர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" என்று காட்டமாகக் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் மீது கற்கள், தண்ணீர் பாட்டில்கள், கறுப்பு கொடிகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலின்போது தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து வன்முறைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

சட்டசபை
சட்டசபை

ஆனால், இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்,

``ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்துக்கு எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டி.ஜி.பி தெளிவான அறிக்கை கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், `ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மற்றும் அவர் பாதுகாப்பு வாகனங்கள் கற்களாலோ, கொடிகளாலோ வேறு எந்தப் பொருள்களாலோ பாதிக்கப்படாமல் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை, ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, டி.ஜி.பி-க்கு கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த அரசு, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்கு பொறுப்பிருக்கிறது" என்று கூறினார்.

ஆனால், முதல்வரின் விளக்கத்தைக் கேட்பதற்கு முன்பாகவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது. இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய நினைக்கின்றன என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,

`` எங்களுக்கு அரசியல் செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்போது அதுகுறித்து எப்படிப் பேசாமல் இருக்கமுடியும். நீட், தேநீர் விருந்து புறக்கணிப்பு என ஏற்கெனவே ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்துவரும் நிலையில், அவரின் சுற்றுப்பயணத்தின்போது கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியே கொடுத்திருக்கக் கூடாது. அதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான சரியான வழிமுறை. இப்போது வந்து கறுப்புகொடியை யாரும் வீசவில்லையென முதல்வர் பகிரங்கமாகச் சொல்கிறார். ஆனால், ஒரு வாகனத்தில் கறுப்புக்கொடி வந்து விழுந்ததும் அதைக் காவல்துறையினரே சென்று எடுத்து அப்புறப்படுத்தியதையும் அனைத்து ஊடகங்களிலும் பார்த்தோம். அதனால் அப்பட்டமான பொய்யை முதலமைச்சர் சொல்லக்கூடாது. இன்றைய சூழலில் கட்சியும் சரி ஆட்சியும் சரி முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதிமுக ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ள ஒரு கட்சி. வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அதைக் கண்டிப்பது அதிமுகவின் கடமை. அந்த அடிப்படையில் ஆளுநரின் சுற்றுப்பயணத்தின்போது நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இதில் எந்த அரசியலும் இல்லை.'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், இவர்கள் எதற்கு இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றனர் என்று தெரியவில்லை. அதைவிட, இந்த விஷயம் குறித்துப் பேச அதிமுகவுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது. சென்னா ரெட்டி கவர்னராக இருந்தபோது இவர்கள் என்ன செய்தனர் என்பதை தமிழ்நாடு அறியும். பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலாலேயே வெளிநடப்பு செய்திருப்பார்கள். இந்த ஆட்சியில் வேறெந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் நாடகம் எல்லாம் மக்கள் மன்றத்தில் எடுபடாது'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism