Published:Updated:

அம்மா மினி கிளினிக் Vs மக்களைத் தேடி மருத்துவம்... அதிமுக Vs திமுக கருத்து மோதல்!

அம்மா மினி கிளினிக் Vs மக்களைத் தேடி மருத்துவம்
News
அம்மா மினி கிளினிக் Vs மக்களைத் தேடி மருத்துவம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த பதில், அதிமுக ரத்தத்தின் ரத்தங்களை கடுமையான கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

''அம்மா மினி கிளினிக் தொடர்பாக ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அம்மா கிளினிக் என்பது முடிந்துவிட்டது. அது தொடங்குகிறபோதே ஓராண்டுக்கான தற்காலிக ஏற்பாடாகத்தான் தொடங்கப்பட்டது'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து அதிமுக ரத்தத்தின் ரத்தங்களைக் கடுமையான கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில், கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை, கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மா.சுப்ரமணியன் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அம்மா மினி கிளினிக் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
file photo

``அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டபோது 1,820 மருத்துவர்கள் மட்டுமே இதற்காக நியமனம் செய்யப்பட்டனர். எந்த ஒரு கிளினிக்குக்கும் செவிலியர்கள்கூட நியமிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு தற்காலிகக் கட்டடத்தில், வேறு பயன்பாட்டில் இருந்த கட்டடங்களில்கூட பெயின்ட் அடித்து ஒரு போர்டை வைத்து தற்காலிக மருத்துவமனையைத் தொடங்கிவைத்தார்கள். பெயர்ப்பலகைதான் இருந்தே தவிர, பயன்பாட்டில் இல்லை. ஆனால், கழக ஆட்சி அமைந்ததும், அதிலிருந்த மருத்துவர்களை பணிநீக்கம் செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் கொரோனா இரண்டாவது அலை தடுப்புப் பணிக்காகப் பயன்படுத்திக்கொண்டோம். இப்போதுகூட மார்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, கொரோனா தடுப்புப் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்'' என பதிலளித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், ``அம்மாவின் பெயரில் இருப்பதால்தான் திட்டமிட்டே இந்த அரசு மினி கிளினிக்குகளை மூடிவிட்டது'' என அதிமுக-வினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஏழை எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்தத் திட்டம் மூடப்படுகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இது ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு'' என விமர்சித்திருக்கிறார். திமுக தரப்பில், ``அம்மா மினி கிளினிக்குகளால் பயனடைந்தவர்கள் யாரும் இல்லை. இந்தத் திட்டத்தால் அரசுக்குத் தேவையில்லாத செலவுதான்'' என பதிலடி கொடுத்துவருகின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியனும், ``அம்மா மினி கிளினிக்கில் யாருமே சிகிச்சை பெறவில்லை. அப்படி இருந்தால் அதற்கான தரவுகளைத் தர முடியாதா?'' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசங்கரி
சிவசங்கரி

இந்த நிலையில், அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்.

``வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத்தான் அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்பட்டுவந்தது. குக்கிராமங்களில் இருக்கும் மக்கள் இந்தத் திட்டத்தால் அதிக அளவில் பயனடைந்தனர். எட்டு கி.மீட்டர் வீண் அலைச்சலை இந்தத் திட்டம் தவிர்க்க உதவியது. செவிலியர்கள் இல்லை, கட்டடம் சரியில்லை என்கிறார்கள், திமுக-தானே ஆட்சியில் இருக்கிறது. ஏன் மருத்துவப் பணியாளர்களை நியமித்து இந்தத் திட்டத்தைத் தொடரலாமே... ஆனால், எடப்பாடியார் கொண்டு வந்தார், அம்மாவின் பெயரில் இருக்கிறது என்கிற காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் இந்தத் திட்டத்தைக் கைவிடுகிறார்கள். இல்லையென்றால் இவர்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக-வின் செய்தித் தொடர்பாளர், சிவ.ஜெயராஜிடம் பேசினோம்.

``ஆட்சி முடியும் நேரத்தில், அவசர அவசரமாகத் தொடங்கப்பட்ட திட்டம் அது. அதற்கு முறையாக நிதியும் ஒதுக்கவில்லை. மத்திய அரசின் நிதியில்தான் அதைத் தொடங்கியிருக்கிறார்கள். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் என யாரையும் நியமிக்கவில்லை. தற்காலிகமாக மருத்துவர்களை நியமித்திருந்தார்கள். அந்தத் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தவிர, அந்தத் திட்டத்தைத்தான் நாங்கள் மேம்படுத்தி, மெருகூட்டி `மக்களைத் தேடி மருத்துவம்' என்கிற அற்புதமான திட்டத்தைத் தொடங்கி மிகச் சிறப்பாக செயல்படுத்திவருகிறோம். இதுவரைக்கும், 41,73,000 பேர் இந்தத் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களில் பயனடைந்திருக்கிறார்கள். மினி கிளினிக்குகளால் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள் என்கிற தரவுகளை அதிமுக-வினரால் தர முடியுமா?

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

மக்களுக்கு நன்மை தரும் எந்தத் திட்டத்தையும் திமுக நிறுத்தவேண்டிய அவசியம் கிடையாது. அப்படி நாங்கள் நினைத்திருந்தால், அம்மா உணவகத்தின் பெயரை மாற்றியிருப்போமே... ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் படம் போட்ட புத்தகப்பையைக் கொடுத்திருக்க மாட்டோமே?

முதலில் இது போன்ற விமர்சனங்களை முன்வைக்க, அதிமுக-வினருக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது. சட்டமன்றத்தில் தொடங்கி உழவர் சந்தை, சமத்துவபுரம் என நாங்கள் உருவாக்கிய நல்ல விஷயங்களைக் கிடப்பில் போட்டவர்கள் இவர்கள். மக்கள் செல்வாக்குமிக்க எங்களுக்கு, இவர்களின் புகழை மறைக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எங்களின் ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்க வெற்று விளம்பர அரசியலைச் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி'' என்கிறார் அவர்.