Published:Updated:

தமிழக பா.ஜ.க தலைவர் அறிவிப்பு எப்போது?!- நள்ளிரவு வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்

பி.ஜே.பி தலைமையகம்-கமலாலயம்
பி.ஜே.பி தலைமையகம்-கமலாலயம்

தமிழக பி.ஜே.பி-க்கு விரைவில் தலைவரை நியமிக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் தொடர்ந்து டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பி.ஜே.பி தலைவர் பதவியிலிருந்து தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றபிறகு கடந்த ஐந்து மாதங்களாக பி.ஜே.பி மாநிலத் தலைமைப் பதவி காலியாகவே இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் சில தினங்களில் தமிழக பி.ஜே.பி தலைவர் யார் என்பது தெரிந்துவிடும் என்ற நிலை இருக்கிறது.

தமிழிசை
தமிழிசை

அகில இந்திய பி.ஜே.பி தலைவராக இருக்கும் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பி.ஜே.பி சட்டத்திட்டப்படி அவரால் கட்சியின் தலைமைப் பதவியைத் தொடர முடியாது. எனவே, செயல் தலைவர் என்ற பதவியில் ஜே.பி நட்டா நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்து அகில இந்திய அளவில் பி.ஜே.பி கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோட்ட பொறுப்பாளர், மாநில பொறுப்பாளர்கள் முதல் மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்துவந்தது. அதில் பெரும்பாலான மாநிலங்களிலும் முழுமையாகத் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. இன்னும் சில மாநிலங்களில் தேர்தல் நடந்துவருகிறது.

தமிழகத்திலும் உட்கட்சித் தேர்தல் மாவட்ட அளவில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், தமிழக பி.ஜே.பி-க்கு விரைவில் தலைவரை நியமிக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் தொடர்ந்து டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய தலைவர் தேர்வுக்கு முன்பாக தமிழகத்தின் தலைவர் பதவிக்கான அறிவிப்பு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவிவருகிறது. காரணம். வரும் 21-ம் தேதி ஜே.பி நட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

 நட்டா
நட்டா

பி.ஜே.பி சட்டதிட்டப்படி தலைவராக ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் 51 சதவிகித அளவு மாநிலத் தேர்தலை முடித்து, மாநிலத் தலைவரை தேர்வு செய்திருக்க வேண்டும். அதன்படி தற்போது இந்தியாவில் 34 மாநிலங்கள் இருக்கின்றன. 18 மாநிலங்களில் தேர்தல் முடித்து அந்தப் பட்டியல் தலைமைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த எண்ணிக்கை அளவுக்கு தேர்தல் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்து வேறு மாநிலங்களிலிருந்து முடிவு வருகிறதா என்று பி.ஜே.பி தலைமை எதிர்பார்க்கிறது. அப்படி இல்லை என்றால் தமிழகத்தின் தலைவர் பதவியை அறிவித்து 18 மாநில கணக்கில் தமிழகத்தையும் சேர்க்க அகில இந்தியத் தலைமை முடிவு செய்துள்ளது.

சோழர்கள், பாண்டியர்கள், காட்டுவாசிகள்... எல்லோருக்கும் பொதுவான விஷயம் இதுதான்! #10yearsofAayirathilOruvan

அகில இந்தியத் தலைவர் தேர்தல் குறித்து நேற்று பி.ஜே.பி தலைமை அலுவலத்தில் நீண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் எத்தனை மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது, இன்னும் எந்த மாநிலங்களில் தேர்தலை ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்க முடியும் என்றெல்லாம் ஆலோசனை நடந்துள்ளது. அகில இந்திய பி.ஜே.பி அமைப்புச் செயலாளர் சந்தோஷ் இந்த விவகாரத்தை முழுமையாக பார்த்துவருகிறார். அப்போது தமிழகத்துக்கான தலைவர் பதவி குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது.

சந்தோஷ்
சந்தோஷ்

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் இப்போது தேர்ந்தெடுக்கப்படுபவரின் தலைமையில்தான் அடுத்த ஆண்டு தேர்தலை பி.ஜே.பி சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, புதிய முகத்துக்கு வாய்ப்புக் கொடுப்பதைவிட பழைய நபர்களை, தமிழக அரசியல் களத்தில் நன்கு அறிமுகமான நபரை இந்த முறை தேர்வு செய்ய சந்தோஷ் ஆலோசனை செய்துள்ளார். மூன்று மூத்த தலைவர்கள், இரண்டு இளம் தலைவர்கள் பெயர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு நேற்று நள்ளிரவுவரை இந்த ஆலோசனைக் கூட்டம் நீண்டுள்ளது. ஆனால், இறுதியில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

சனிக்கிழமை அன்று அகில இந்தியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிடும். திங்கள் அன்றுவரை மனுக்கள் பெறப்பட்டு, செவ்வாய் அன்று தேர்தல் நடந்து தலைவர் அறிவிக்கப்படுவார். ஆனால், நட்டாவைத் தவிர வேறு யாரும் போட்டியிடமாட்டார்கள் என்பதால் நட்டாவே தலைவராவது உறுதியாக உள்ளது. அதற்குப் பிறகுதான் தமிழகத்தின் தலைவர் பதவிக்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள் பி.ஜே.பி-யினர்.

அடுத்த கட்டுரைக்கு