Published:Updated:

``சின்னம்மா மனசுவெச்சா...'' - நகர்ப்புற உள்ளாட்சியில் கரைசேருமா அமமுக?

தினகரன், சசிகலா

மற்ற கட்சிகளில் தேர்தல் வேலைகள் தீவிரமெடுத்திருக்கும் நிலையில் அமமுக-வின் நிலை என்ன, கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``சின்னம்மா மனசுவெச்சா...'' - நகர்ப்புற உள்ளாட்சியில் கரைசேருமா அமமுக?

மற்ற கட்சிகளில் தேர்தல் வேலைகள் தீவிரமெடுத்திருக்கும் நிலையில் அமமுக-வின் நிலை என்ன, கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

Published:Updated:
தினகரன், சசிகலா
``மற்ற கட்சிகளுக்கு எப்படியோ... ஆனா எங்க கட்சிக்கு இந்தத் தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம்தான். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கூட பெரும்பாலும் வட மாவட்டங்கள்'லதான் நடந்ததுன்னு சொல்லி சமாளிச்சிட்டோம். நடக்கப்போற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அப்படிச் சமாளிக்கவும் முடியாது. ஆனா, எங்க பொதுச்செயலாளர்கிட்ட இருந்து இன்னும் வரவேண்டிய சிக்னல் வரலை. சின்னம்மாவும் அமைதியா இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலை.''

மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் ஏமாற்றத்துடனும் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகிறார்கள், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை வெளியாகிவிட்டது. ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி தொடங்கி மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட சிறிய கட்சிகள் வரைக்கும் ஆர்வமாகத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வேட்புமனுத் தாக்கல்களும் ஜரூராக நடந்துவருகின்றன. ஆனால், அ.ம.மு.க நிர்வாகிகள் இப்போது வரைக்கும் உற்சாகமிழந்தே காணப்படுகிறார்கள்.

அ.ம.மு.க
அ.ம.மு.க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அதிமுக-வை மீட்டெடுப்பதே நோக்கம்'' என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி, கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகள் பெரும்பாலும் அ.தி.மு.க-வின் வாக்குவங்கியைப் பதம் பார்த்து உருவானவைதான் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. குறிப்பாக, 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆண்டிபட்டி , பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.ம.மு.க பிரித்த வாக்குகளால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது அ.தி.மு.க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கண்ணங்குடி, கயத்தாறு ஆகிய இரண்டு ஒன்றியத்தைக் கைப்பற்றி அரசியல் படிக்கட்டுகளில் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டிருந்த கட்சி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமாகச் சறுக்கியது. வாக்கு சதவிகிதம் சரி பாதியாகக் குறைந்ததோடு மட்டுமல்லாமல், கோவில்பட்டியில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனே தோல்வியைச் சந்தித்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஒருபுறமிருக்க, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-விலும், அ.தி.மு.க-விலும் இணைந்தனர். தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் சரியாகத் தொடர்பில் இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. அவர் கட்சியைக் கலைக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியன. ஆனால், தொடர்ந்து, ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும் என மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார் தினகரன். ஆனால், தேர்தல் முடிவுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் நடைபெறப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது அந்தக் கட்சி.

அ.ம.மு.க அலுவலகம்
அ.ம.மு.க அலுவலகம்

மற்ற கட்சிகளில் தேர்தல் வேலைகள் தீவிரமெடுத்திருக்கும் நிலையில் அமமுக-வின் நிலை என்ன, கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

`` நிச்சயமாக தமிழ்நாடு முழுவதும் பரவலா எங்க கட்சி போட்டியிடுது. மாநகராட்சிகள்ல முழுமையா ஆட்கள் நிப்பாங்க. வேட்பாளர்கள் தேர்வு எல்லாம் முடிஞ்சு மாவட்டச் செயலாளர்கள்கிட்ட பட்டியல் இருக்கு. எங்க பொதுச்செயலாளர்கிட்ட இருந்து சிக்னல் வந்ததும் வேலைகளைத் தொடங்கிடுவோம்'' என்று இழுத்தவர், தொடர்ந்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` எங்க கட்சியில இருக்கறவங்க பெரும்பாலும் அ.தி.மு.க., தி.மு.க-வுல இருந்தவங்க. பணம் இல்லாம தேர்தலை எதிர்கொள்வது சாத்தியமே இல்லை. ஆனா, கடந்த சட்டமன்றத் தேர்தலாகட்டும், ஊரக உள்ளாட்சித் தேர்தலாகட்டும்... எல்லோரும் அவங்க கைக்காசைப் போட்டுத்தான் செலவழிச்சுக்கிட்டு வர்றோம். கட்சியில இருந்து பலபேரு வெளியில போறதுக்குக் காரணமே பணம் செலவழிக்க முடியாமத்தான். சட்டமன்றத் தேர்தல்ல கடைசிவரைக்கும் பணம் வரும்னு நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். ஆனா, இந்த முறை தலைமை பணம் தராம சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். மாநகராட்சிகளைப் பொறுத்தவரைக்கும் குறைஞ்சது, ஒரு வார்டுக்கு ஒரு லட்சத்துல இருந்து இரண்டு லட்சமும், நகராட்சிகளுக்கு வார்டுக்கு 50 ஆயிரமாவது தலைமை கொடுத்தாத்தான் எங்களால சமாளிக்கவே முடியும். அப்பத்தான் தமிழ்நாடு முழுவதும் சேர்த்து 200 கவுன்சிலர் இடங்களையாவது எங்களால பிடிக்க முடியும்'' என்றவர் தொடர்ந்து,

சசிகலா
சசிகலா

`` சின்னம்மா மனசுவெச்சா நிச்சயமா அது நடக்கும். சின்னம்மாவுக்காகத்தான் எங்க தலைவர் கட்சியே தொடங்கினாரு. ஆனால், அவங்க குடும்பத்துல உள்ள சிலர் பேச்சைக் கேட்டுக்கிட்டு எங்க தலைவருக்கு பொருளாதாரரீதியா உதவிகள் எதுவும் செய்யாம இருக்காங்க. அவங்க மனசுவெச்சா நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். அதேபோல, சின்னம்மா நீதிமன்றத்தை நம்பி காலத்தைக் கழிக்காம, வெளிப்படையா எங்க கட்சிக்கு இந்தத் தேர்தல்ல ஆதரவு கொடுக்கணும். இரண்டு பேரும் சேர்ந்தா மட்டும்தான் இந்தக் கட்சியைக் காப்பாத்தி, அ.தி.மு.க-வையும் மீட்டெடுக்க முடியும். இல்லைன்னா ஏற்கெனவே வெளியான நியூஸ் மாதிரி கட்சியைக் கலைச்சுட்டுத்தான் போகணும்`` என்கிறார்கள் ஆதங்கமாக.

சி.ஆர்.சரஸ்வதி
சி.ஆர்.சரஸ்வதி

நிர்வாகிகளின் இந்தக் குமுறல்கள் குறித்து, அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம்,

`` தமிழகம் முழுவதும் நாங்கள் போட்டியிடுவது உறுதி. லோக்கலில் செல்வாக்குள்ள எங்கள் கட்சி நிர்வாகிகள் நிச்சயமாக வெற்றிபெறுவார்கள். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்கிற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சின்னம்மாவின் ஆதரவு குறித்து அவர்கள்தான் சொல்ல வேண்டும். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism