Published:Updated:

50 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்தை இழக்காத தி.மு.க... உதயசூரியன் உருவாகி நிலை கொண்டது எப்படி? #OnThisDay

தி.மு.க மாநிலக் கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற்ற தினம் இன்று. 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தி.மு.க, 1957 பொதுத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது. 1958 மார்ச் 2-ம் தேதி, தேர்தல் கமிஷனால் தி.மு.க மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சமாக இருப்பது கட்சிகளின் சின்னம். கட்சி விசுவாசம், தலைமை விசுவாசத்தைவிட 'சின்ன விசுவாசம்' என்பது நம் மக்களிடம் அசைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இன்றளவும் இருக்கிறது. ''காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் இந்தச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்'' என காங்கிரஸ்காரர்களே சொன்னாலும்கூட, வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, தன் அபிமான கைச்சின்னம் இல்லை என்பதால் ஓட்டுப் போடாமல் பலர் திரும்பி வந்த கதைகள் ஏராளம். ''எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை, சாகின்ற வரைக்கும் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுவோம்'' எனும் இரட்டை இலைக்குச் சின்னத்துக்கான நிரந்த வாக்களர்கள் ஏராளம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, புதிதாக வந்த கட்சித் தலைமையின் மேல் அதிருப்தி இருந்தாலும், இரட்டை இலையைத் தாண்டி வேறொரு சின்னத்துக்கு வாக்களிக்க விருப்பமில்லாததால் அ.தி.மு.க-வுக்கே வாக்களித்த அ.தி.மு.க தொண்டர்களும் உண்டு.

சின்னங்கள்
சின்னங்கள்

நம் மக்களின் இந்த சின்ன விசுவாசத்தை நன்றாக அறிந்துகொண்ட புதிய கட்சிகள், ''ஒரு கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னம் வழங்க வேண்டும். இல்லை, நம்பர் சிஸ்டத்தைக் கொண்டு வரவேண்டும்'' என்கிற கோரிக்கைகளை முன்வைக்கின்றன. அந்த அளவுக்கு கட்சியைவிட, தலைவர்களை விட, கட்சியின் சின்னத்தை மக்களின் மனத்தில் ஆழமாகப் பதித்துவிட்டன அரசியல் கட்சிகள்.

இது ஒருபுறமிருக்க, இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்பாலான கட்சிகளுக்கு ஆரம்பத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னம் கடைசி வரை இருந்ததில்லை. உதாரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு முதலில் கிடைத்த சின்னம், இரட்டைக் காளை மாடு. பிற்காலத்தில் காங்கிரஸ் பிரிந்தபோது இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டு, இந்திரா காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னமும், பழைய காங்கிரஸுக்கு கைராட்டைப் பெண் சின்னமும் கிடைத்தன. பின்னர், காங்கிரஸுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது. 'கதிர் அரிவாள் சுத்தியல்' சின்னம் வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி, வலது கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட் என இரண்டாக உடைந்து. கதிர் அரிவாள் வலது கம்யூனிஸ்ட்டுக்கும் அரிவாள் சுத்தியல் இடது கம்யூனிஸ்ட்டுக்கும் கிடைத்தன.

ஸ்டாலின்: கடந்து வந்த அரசியல் பாதையும்... எஞ்சி நிற்கும் முதல்வர் பதவியும்! #Stalin68
“சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.”
- ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1988-ல் எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னம் எனப் போற்றப்படும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, 1989 தேர்தலில் அ.தி.மு.க ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் அ.தி.மு.க ஜெ. அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன. ம.தி.மு.க-வுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட சின்னம் முரசு. பின்னர் கிடைத்த சின்னம், பம்பரம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1996-ல் கிடைத்த சின்னம் சைக்கிள். பின்னர் கிடைத்த சின்னம், தென்னை மரம். பா.ம.க முதலில் போட்டியிட்ட சின்னம் யானை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியாக உருவெடுத்து, தங்களுக்கு நாடு முழுவதும் யானைச் சின்னம் வேண்டும் என தேர்தல் கமிஷனில் முறையிட, அதை ஏற்றுக்கொண்டது தேர்தல் கமிஷன். அதற்குப் பிறகுதான், மாம்பழச் சின்னத்தில் போட்டியிட்டது பா.ம.க இப்படி, தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் சின்னங்கள் மாறிப் போயிருக்கின்றன.

ஆனால், இந்திய அரசியல் வரலாற்றில், முதன்முறை கட்சி அங்கீகாரம் பெறும்போது ஒதுக்கப்பட்ட ஒரு சின்னத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழக்காத ஒரு கட்சி என்றால் தி.மு.க தான். அந்தக் கட்சி மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்றதும், உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டதும் இதே தினத்தில்தான்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

1949-ம் ஆண்டு, பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.கழகத்தைத் தோற்றுவித்தார் அறிஞர் அண்ணா. தொடர்ந்து ஒரு சமூக இயக்கமாக மட்டுமே செயல்பட்டுவந்த தி.மு.க, அதிகாரபூர்வமாக 1956 மே மாதம் திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், தேர்தலில் பங்கேற்பது என முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, 1957-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 15 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் தேர்தலிலேயே ஒரு நம்பிக்கைக்குரிய வெற்றியைப் பெற்றது அண்ணா தலைமையிலான தி.மு.க. தொடர்ந்து 1958-ம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்று, உதயசூரியன் சின்னம் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து,1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தல் முதல், 2019 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வரை உதயசூரியன் சின்னத்தில்தான் தி.மு.க போட்டியிட்டு வருகிறது. அப்போது ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை இதுவரை இழக்காமல் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது தி.மு.க. இடையில்,1993ல் வைகோ தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டபோது, கட்சியிலும் சின்னத்திலும் எனக்கும் பங்கு இருக்கிறது எனப் போர்க்கொடி தூக்கினார் வைகோ. ஆனால், கருணாநிதி தலைமையிலான தி.மு.க தான் உண்மையான தி.மு.க என 3.5.1994 அன்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இது அண்ணா உருவாக்கிய இயக்கம். தி.மு.கழகம்... கறுப்பு - சிவப்புக் கொடி... உதயசூரியன் சின்னம்... எல்லாமே அண்ணா கொடுத்தவைதான். இதெல்லாம் கலைஞருக்குச் சொந்தமானவையல்ல... அவருக்கு முன் அண்ணா உருவாக்கி வைத்த ‘பாட்டன் சொத்து’க்கள்... அவற்றில் எனக்கும் நிச்சயம் பங்கு உண்டு.
வைகோ (1993ல்)

தி.முகவுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்த வரலாறு குறித்து, தி.மு.க-வின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரான, முகையூர் சம்பத்திடம் பேசினோம்.

''உதயசூரியன் சின்னம் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்பே முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி படையாச்சியிடம்தான் இருந்தது. 1948-ம் ஆண்டு, வன்னியர் குல சத்திரியர் கட்சி எனும் கட்சியை நடத்திவந்தார் அவர். பின்னர் அது, 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி'யாக 1951-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் தலைவராக ராமசாமி படையாச்சியும், செயலாளராக கோவிந்தசாமி படையாச்சியும் செயல்பட்டு வந்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952 தேர்தலில் போட்டியிட்டு, 15 சட்டமன்ற இடங்களிலும் 6 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் சின்னமாக சேவல் இருந்தது. அப்போது, தி.மு.க அரசியல் கட்சியாக இல்லாமல் சமூக இயக்கமாகச் செயல்பட்டது. கோவிந்தசாமி படையாச்சி, அதிலும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டுவந்தார். ராமசாமி படையாச்சி, காங்கிரஸில் அசோசியேட் மெம்பராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், 1954-ல் ராமசாமி படையாச்சியார் காங்கிரஸில் முழுமையாக இணைந்து, காமராஜர் தலைமையிலான ஆட்சியில் அமைச்சரானார்.

முகையூர் சம்பத்
முகையூர் சம்பத்

அதே நாளில், அவர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைக் கலைத்துவிட, அப்போது உழவர் கட்சி என்ற கட்சியை தோற்றுவித்தார் கோவிந்தசாமி படையாச்சியார். இந்த விஷயத்தில் அண்ணாவின் மதிநுட்பம் முக்கியமானது. ராமசாமி படையாச்சி கட்சியைக் கலைத்த உடனே, அந்தக் கட்சியைத் தக்க வைக்க வேறு பெயரில் கட்சியையும், சேவல் சின்னத்தை விட்டு வேறு சின்னத்தையும் பெறுங்கள் என கோவிந்தசாமி படையாச்சிக்கு ஆலோசனை வழங்கியது அண்ணாதான். அப்படி உழவர் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் பெறப்பட்ட சின்னம்தான் உதயசூரியன்.

அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், உழவர் கட்சியின் சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பலர் வெற்றி பெற்றனர். தி.மு.க-வைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் உள்பட சிலரும், அண்ணாவின் பரிந்துரையைப் பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

கோவிந்தசாமி படையாச்சி
கோவிந்தசாமி படையாச்சி
எடப்பாடிக்கு எதிராக முதல் வெடி... அடுத்தடுத்த திட்டங்களுடன் அமைச்சர் மாஃபா ரெடி!

தொடர்ந்து, 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க-வின் மாநாட்டில், தேர்தலில் பங்கேற்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெருவாரியான தி.மு.க தோழர்கள் தேர்தலில் போட்டியிடுவது என வாக்களித்தனர். தொடர்ந்து, 1957ல் தி.மு.க தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, தேர்தல் கமிஷனுக்கு ஒரு கோரிக்கை முன்வைத்தார் அண்ணா. அதில், ''ஏற்கெனவே எங்கள் கட்சித் தோழர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கின்றனர். அந்த சின்னத்துக்குச் சொந்தக்காரரான கோவிந்தசாமியும் எங்கள் கட்சியில்தான் இணைந்திருக்கிறார். அதனால், எங்கள் கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் கமிஷனும் அதை ஏற்றுக்கொண்டு, உதயசூரியன் சின்னத்தை வழங்கியது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. அப்படித்தான், உழவர் கட்சியின் சின்னமாக இருந்த உதயசூரியன், தி.மு.க-வின் சின்னமாக மாறியது. தொடர்ந்து, தேர்தல் கமிஷனின் அங்கீகாரமும் கிடைத்தது'' என்கிறார் முகையூர் சம்பத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு