Published:Updated:

``அப்போ உதயநிதி, இப்போ இன்பநிதி என்கிறார்கள்..." - எடப்பாடியின் பிரசார வியூகம் எடுபடுமா?!

உதயநிதி - ஸ்டாலின் - எடப்பாடி

``மக்களாட்சித் தத்துவத்தின்படியே உதயநிதியை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். வாரிசு ஆட்சியாக இது இருந்தால் அதை முடிவு செய்து வீழ்த்த வேண்டியது மக்கள்தானே தவிர, எடப்பாடி இல்லை." - இராஜீவ் காந்தி

``அப்போ உதயநிதி, இப்போ இன்பநிதி என்கிறார்கள்..." - எடப்பாடியின் பிரசார வியூகம் எடுபடுமா?!

``மக்களாட்சித் தத்துவத்தின்படியே உதயநிதியை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். வாரிசு ஆட்சியாக இது இருந்தால் அதை முடிவு செய்து வீழ்த்த வேண்டியது மக்கள்தானே தவிர, எடப்பாடி இல்லை." - இராஜீவ் காந்தி

Published:Updated:
உதயநிதி - ஸ்டாலின் - எடப்பாடி

அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தனித்தனியாகச் செயல்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். இதேபோல், 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை இப்போதே ஆரம்பத்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அந்தவகையில், அவர் கடந்த சில நாள்களாகவே திமுக-வின் வாரிசு அரசியலைக் கையிலெடுத்துத் தீவிரமாகத் தாக்கி பேசிவருவது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சி வரவேற்பு விழாவில் பேசும்போது, ``அவர்கள் என்ன அரச பரம்பரையா... ராஜ பரம்பரையா... கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி, அதன் பிறகு இன்பநிதியா... இங்கு இருக்கிறவர்கள் யாராவது ஒருவர் முதலமைச்சராகக் கூடாதா... யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். முதல்வர் ஆகலாம். அதற்கு ஒரே ஒரு கட்சி அதிமுக கட்சி மட்டும்தான்” என்றார்.

உதயநிதி!
உதயநிதி!

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அதிமுக சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக தலைவர்கள், `மக்கள்தான் குடும்பம்’ என வாழ்ந்துவந்தார்கள். ஆனால், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக-வில் சாதாரணத் தொண்டன்கூட முதல்வராகிவிடலாம். ஆனால், திமுக-வில் அப்படிக் கிடையாது. குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும்​. இதேநிலை நீடித்தால் இலங்கை​யில் நடந்ததைப்போலத் தமிழ்நாட்டில்​ ஸ்டாலின்​ குடும்பத்துக்கும்​ நடக்கும்’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வாரிசு அரசியலைக் கையில் எடுத்துப் பேசிவருவது குறித்து திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டோம்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

``எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். சாமானியன் வர வேண்டும் என்பதைத்தான் திமுக விரும்புகிறது. ஆனால், அந்தச் சாமானியன் யார் என்பதுதான் இங்கே கேள்வி. கிராமப்புறப் பகுதியில் பிறந்து திராவிட தத்துவத்தால், கொள்கையால் ஈர்க்கப்பட்டு சாமானியர்கள் முதல்வர் ஆனதுதான் இங்கே வரலாறாக இருக்கிறது. ஆனால், எடப்பாடி போன்று முதல்வர் ஆனவர்கள் இங்கு யாரும் கிடையாது. அது கறுப்புப் பக்கங்களைக்கொண்டது.

தளபதியாகட்டும், உதயநிதியாகட்டும்... அவர்களைக் கொள்கைரீதியாக எங்கள் கட்சி ஏற்றுக்கொண்டிருக்கிறது. சேப்பாக்கத்தில் வேட்பாளராக உதயநிதி நிற்கும்போது, `கருணாநிதி பேரன் என்றோ, ஸ்டாலினின் மகன் என்றோ நீங்கள் நினைத்தால் என்னைத் தோற்கடியுங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன் என்று நீங்கள் நம்பினால் என்னை வெற்றிபெற வையுங்கள்’ என்றார். மக்களாட்சித் தத்துவத்தின்படியே உதயநிதியை மக்கள் தேர்வுசெய்திருக்கிறார்கள். வாரிசு ஆட்சியாக இது இருந்தால் அதை முடிவுசெய்து வீழ்த்தவேண்டியது மக்கள்தானே தவிர, எடப்பாடி இல்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே எடப்பாடி இது போன்று பேசிவருகிறார்’’ என்றார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

அதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் வைகைச்செல்வனிடம் கேட்டபோது, ``ஸ்டாலின் அரசியலுக்கு வருவாரா என்று கலைஞரிடம் கேட்டபோது, `இது ஒன்றும் சங்கர மடம் இல்லை’ என்றார். ஆனால் அவர் இருக்கும்போதே ஸ்டாலினைத் துணை முதல்வராக அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார். இதனாலேயே, ஸ்டாலின் எளிதாக முதல்வராகியிருக்கிறார். இதேபோல், உதயநிதியை இப்போது கொண்டுவந்திருக்கிறார்கள். அமைச்சராக இல்லாத உதயநிதிக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அடுத்த தலைவர் இவர்தான் என்பதை அடையாளப்படுத்துகிறார்கள்.

இதை மையப்படுத்தித்தான் இன்பநிதியையும் கொண்டுவருவார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஆனால், ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுக-வின் தலைமைக்கு வருவது மிக மிகக் குறைவு. திமுக-வில் தலைமை பொறுப்புக்கு வர நினைத்து குரல் கொடுப்பவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள். வைகோவுக்கு என்ன நடந்ததோ அதுதான் நடக்கும். எடப்பாடியின் இந்தப் பிரசாரம் கட்டாயம் தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.