Published:Updated:

காஸ் சிலிண்டர்: தொடர்ந்து அதிகரிக்கும் விலை... குறையும் மானியம்! - என்ன காரணம்?

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது 850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சிலிண்டரின் விலை, தற்போது 850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாய், 15-ம் தேதி 50 ரூபாய், 25-ம் தேதி 25 ரூபாய், மார்ச் 1-ம் தேதி 25 ரூபாய், இப்போது ஜூலை 1-ம் தேதி 25 ரூபாய் என்று ஐந்து முறை 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1-ம் தேதியில் மட்டும் 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

காஸ் சிலிண்டர் விலை உயர்வு
காஸ் சிலிண்டர் விலை உயர்வு

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு சிலிண்டரின் விலை 998 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், அப்போது மானியம் 500 ரூபாய்க்கு அதிகமாக வழங்கப்பட்டது. தற்போது மானியம் கிட்டத்தட்ட 25 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. முந்தைய காலத்தில் சிலிண்டரின் விலை ஏறினாலும், அந்தத் தொகை மானியமாக மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மானியமும் குறைத்த அளவே தரப்படுகிறது என்பதே வேதனைக்குரிய விஷயம்.

கடந்த 2014-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மானியங்களை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்காமல் நேரடியாக மக்களுக்கே வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதிகம் எதிர்த்தது பா.ஜ.க-தான். இதே பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் மானியம் கொடுக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், மக்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்கவும் செய்தது.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டுக் கணக்கின்படி ஒரு சிலிண்டரின் விலை 261 ரூபாய்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசுதான் நிர்ணயம் செய்துவந்தது. இந்த நடைமுறையை, சந்தையின் நிலைமைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று ஆளும் பாஜ.க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின்னரே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் பல்வேறு குளறுபடிகள் தொடங்கின என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். தற்போதைய நிலையில் விலையை நிர்ணயம் செய்வது யார் என்பதே பெரும் குளறுபடியாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

2015-ம் ஆண்டு ஒரு சிலிண்டரின் விலை 998 ரூபாயாக உயர்ந்திருந்தபோதிலும், 563 ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டது. இப்போது 850 ரூபாய் வரை சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், மானியமாக 25 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் தொகையும் பலருக்கு வந்து சேர்வது கிடையாது. அதேபோல, கடந்த 2020 - 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மானியமாக 40,915 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 12,995 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மானியம்
மானியம்

முன்பு விலை உயரும்போது, வழங்கப்படும் மானியத்தின் தொகையும் அதிகமாகும் என்பதால் சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்வு பெரும் சிக்கலாக இருந்தது கிடையாது. ஆனால், தற்போது விலை மட்டுமே உயர்ந்துகொண்டிருப்பது அடித்தட்டு மக்களுக்குச் சமாளிக்க முடியாத அளவு பெரும் சிக்கலை ஏற்படுத்திவருகிறது. முன்பு பெட்ரோலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. அதேபோல, தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மானியம் மீண்டும் அதிகரித்து வழங்கப்படுமா இல்லை நிறுத்தப்படுமா என்பதற்கு அரசு மட்டுமே பதிலளிக்க முடியும்!

பொருளாதாரம் சார்ந்த சட்டம் குறித்துச் செயல்படும் வழக்கறிஞர் சத்யகுமாரிடம் பேசினோம். ``சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் என எல்லா விலைகளையும் குறைக்க மத்திய அரசு தன்னுடைய கலால் வரியைக் குறைத்துக்கொள்வதே சரியாக இருக்கும். அதைவிடுத்து, மாநிலங்கள் தங்களின் வரியைக் குறைத்தால் அது மாநிலங்களுக்குத்தான் பெரும் வரி இழப்பாக இருக்கும். ஏற்கெனவே தமிழகத்துக்குத் தர வேண்டிய 11,250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இந்தநிலையில், எரிபொருள்களின் விலையையும் மாநில அரசு குறைத்தால், அது மாநில அரசுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும். கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்போது, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டரின் விலை உயர்வது இயல்புதான். ஆனால், கச்சா எண்ணெயின் விலை குறையும்போது பொருள்களின் விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும். அதைப் பெரும்பாலும் அவர்கள் செய்வதே கிடையாது" என்றார்.

சத்யகுமார்
சத்யகுமார்

தொடர்ந்து பேசிய அவர், ``மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு புதிய காஸ் இணைப்புகளை மத்திய அரசு வழங்கியதாகக் கூறிவருகிறது. சமீபத்திய ஆய்வின்படி இந்தத் திட்டத்தில் இணைப்பு பெற்ற 92% மக்கள் காஸ் சிலிண்டரை ரீஃபில் செய்வதே கிடையாது. மீதமுள்ள எட்டு சதவிகிதம் மக்கள் மட்டுமே ரீஃபில் செய்துவருகிறார்கள். இந்த விலை ஏற்றத்தின் விளைவாக இந்த எட்டு சதவிகிதமும் இன்னும் குறையும் நிலைதான் ஏற்படும். அதோடு, இந்தப் பழியையும் மத்திய அரசு, மாநில அரசின் மீது போட்டுவிடுகிறது. உண்மையில் உஜ்வாலா யோஜனா திட்டம் மிகப்பெரிய தோல்வி. கச்சா எண்ணெயின் விலை கூடும்போது குறைந்த அளவிலான வரியையும், விலை குறையும் நேரத்தில் சமமான வரியையும் விதிப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ஒரு பக்கம் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் கொடுக்கப்பட்ட மானியத்தின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது. பட்ஜெட் தாக்கலில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை, மானியம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம். இந்த விலைவாசி உயர்வு எல்லாமே மக்களின் தலைகளில்தான் வந்து விழுகிறது" என்றார் விளக்கமாக!

அடுத்த கட்டுரைக்கு