Published:Updated:

`அதிமுக-வில் தொடரும் ஆடு புலி ஆட்டம்!' - பின்னாலிருந்து இயக்குவது யார்?

``இதேநிலை தொடர்ந்தால், வரும் டிசம்பர் 1-ம் தேதி நடக்கவிருக்கும் செயற்குழுக் கூட்டத்திலும் இதே போன்ற அமளிதுமளியை எதிர்பார்க்கலாம்" என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நேற்று நடந்த, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பல்வேறு கூச்சல், குழப்பங்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவது தொடர்பாக, கடந்த அக்டோபர் 11-ம் தேதி நடந்த கூட்டமும் இதேபோல சர்ச்சையில்தான் முடிந்தது. குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காகக் கூட்டம் நடத்தப்படுவதும், அதற்குத் தொடர்பில்லாத விஷயங்களைச் சிலர் பேசிவிடுவதுமே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் சொல்லப்படுகிறது. ஆனால், `வாய்ப்பு கிடைக்கும்போது பேசாமல் வேறு எப்போது பேசுவது... இப்படியே போனால், கட்சியைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்' என்பது ஓ.பி.எஸ் தரப்பின் பதிலாக இருக்கிறது.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

இந்த நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி, அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், அந்தக் கூட்டத்திலும் இதே போன்ற அமளிதுமளியை எதிர்பார்க்கலாம் எனக் கூறும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், தற்போது அ.தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சிப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்கள்.

``உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. பல்வேறு வாக்குறுதிகளை ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுத்துத்தான் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்த்தனர். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை இ.பி.எஸ் தரப்பு நிறைவேற்றவில்லை. பின்னாளில், வழிகாட்டுதல்குழு போன்ற ஓ.பி.எஸ்-ஸின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சியில் இருந்தபோதும் சரி, அடுத்ததாகத் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு தொடங்கி, கூட்டணிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் வரை அனைத்து விஷயங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கியிருந்தது. அதேபோல, தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா தேர்வு என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிதான் கோல் அடித்தார். ஆனால், கொடநாடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததும் அரசியல்ரீதியாகச் சற்று முடங்கிப்போனார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஓ.பன்னீர்செல்வம், அடுத்தடுத்து அறிக்கைகள் விடுவது, கட்சித் தொண்டர்களைச் சந்திப்பது எனத் தன்னை ஆக்டிவாகக் காட்டிக்கொண்டார்.

அ.தி.மு.க பொன்விழா
அ.தி.மு.க பொன்விழா

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் என ஏகப்பட்ட நெருக்கடிகள் கட்சிக்கு ஒரு வலுவான தலைமை அவசியம் என ஒரு சிலரை யோசிக்கவைத்தன. சசிகலா அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்றும் கட்சிக்குள் ஒரு கருத்து எழுந்தது. ஆனால், 'கட்சிக் கூட்டங்களில் தேர்தல் தோல்வி குறித்தோ, சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் பேசிவிடக் கூடாது. கட்சியில் தன்னுடைய அதிகாரம் அப்படியே நீடிக்க வேண்டும்' என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், பொன்விழா ஆண்டுக் கூட்டத்தில் ஜே.சி.டி பிரபாகர் பேச எழுந்ததுமே, வளர்மதி வேண்டுமென்றே கூச்சல் குழப்பத்தை உண்டாக்கினார். அன்வர் ராஜாவையும் பேசவிடாமல் செய்தனர். அதேபோலத்தான், நேற்று நடந்த கூட்டத்தில், 'வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும்' எனச் சிலர் பேச, பயங்கரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அன்வர் ராஜாவைத் திட்டுவதுபோல கூட்டத்தை டைவர்ட் செய்தார் சி.வி.சண்முகம் .

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடப்பாடி திட்டமிட்டு ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படி ஆட்களை இறக்குகிறாரா இல்லை அவர்கள் தங்களை எடப்பாடியின் விசுவாசிகளாகக் காட்டிக்கொள்ள இப்படிச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், கட்சி தொடர்பான மற்ற விஷயங்களைப் பேசிவிட வேண்டும் என மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் நினைப்பதும், எப்படியாவது அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு நினைப்பதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதுமட்டுமல்ல, நேரடியாக மோதிப்பார்த்து வேலைக்காகவில்லை என்று தெரிந்துகொண்ட ஓ.பி.எஸ் தரப்பினர், சமீபகாலமாக செங்கோட்டையனைக் கொம்புசீவிவிட்டு சில வேலைகளைச் செய்துவருகின்றனர். அவரைக் கேடயமாகப் பயன்படுத்தி எடப்பாடியைக் கட்சியில் டம்மியாக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். ஆனால், முழுமையாக அவரின் கைக்கே அதிகாரம் போவதையும் ஓ.பி.எஸ் தரப்பு விரும்பவில்லை. அவரை ஒரு துருப்புச்சீட்டாக வைத்து ஆடிப்பார்க்கிறார்கள்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கட்சியில் அவைத்தலைவர் பொறுப்பையும் செங்கோட்டையனைக் கேட்கச் சொல்லி உசுப்பேற்றிவருகின்றனர். ஆனால், மறுபுறம் இதுவரை எடப்பாடிக்கு மிகத் தீவிரமாக ஆதரவு தெரிவித்துவந்த வேலுமணியும் தங்கமணியும் சமீபகாலமாக பெரிய அளவில் ஆதரவாக இல்லாமல் இருப்பதும், மாவட்டச் செயலாளர்களில் சிலர் ஓ.பி.எஸ்-ஸுடன் தொடர்பிலிருப்பதும் எடப்பாடிக்குத் தெரியாமல் இல்லை. தவிர, செங்கோட்டையனுக்குப் பின்னால் ஆளும் தரப்பு இருக்கிறதா என்கிற சந்தேகமும் அவருக்கு இல்லாமல் இல்லை. உண்மையில் கட்சியில் இரட்டைத் தலைமை எனப் பெயரளவுக்கு இருந்தாலும், எடப்பாடியின் கைதான் இதுவரை ஓங்கியிருந்தது. சமீபத்தில் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை எடப்பாடியும் உணர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் அதிகாரத்தைப் பரவலாக்கிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஓ.பி.எஸ் உட்பட பலருக்கும் இருக்கிறது. உண்மையிலேயே, பெயரளவுக்கு இருந்த வழிகாட்டுதல்குழுவில் உறுப்பினர்களை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஓயும். இல்லாவிட்டால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு