Published:Updated:

IT Raid: கணக்கில் வராத ரூ.650 கோடி; டாப்ஸி நக்கல் ட்வீட்; அனுராக் வைரல் புகைப்படம் - என்ன பிரச்னை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாப்ஸி - அனுராக் காஷ்யப்
டாப்ஸி - அனுராக் காஷ்யப் ( instagram )

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸிக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை... கணக்கில் வராத ரூ.650 கோடி... விவசாயிகள் போராட்ட ஆதரவு ட்வீட்தான் வருமான வரித்துறை சோதனைக்குக் காரணம்... என்ன நடந்தது? - விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்தவொரு பெரிய பட்ஜெட் பாலிவுட் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருப்பினும், பல்வேறு சர்ச்சைகள் காரணமாக லைம் லைட்டிலேயே இருந்துவருகிறது பாலிவுட் திரையுலகம். அந்தச் சர்ச்சைகள் லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்திருப்பது இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் நடைபெற்றுவரும் வருமான வரித்துறை சோதனை!

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

2011-ம் ஆண்டு, தனது பாலிவுட் நண்பர்களுடன் இணைந்து பேண்டோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார் அனுராக் காஷ்யப். பல்வேறு காரணங்களால் இந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்கு 2018-ம் ஆண்டு மூடுவிழா நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் குறித்து வருமான வரித்துறையினருக்குப் புகார் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அனுராக் காஷ்யப் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அதேபோல பாலிவுட் நடிகை டாப்ஸிக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இதையடுத்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், `விவசாயிகள் போராட்டத்துக்கு டாப்ஸி, அனுராக் இருவரும் ஆதரவு தெரிவித்த காரணத்தால் இந்த ரெய்டு நடைபெறுகிறது' என்ற குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதே கருத்தை முன்வைத்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

#ModiRaidsProFarmers
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
அரசுக்கு எதிரான கருத்துகளை மட்டுப்படுத்தத் திட்டம் - 9 மத்திய அமைச்சர்களின் ரகசிய ரிப்போர்ட்!

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக், ``அவர்களின் குரலை அடக்குவதற்கான முயற்சிதான் இந்த வருமான வரித்துறை சோதனை'' என்று கூறியிருந்தார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ``உள்ளதை உள்ளபடி சொன்ன காரணத்தால், நாஜி அரசு சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்களை மிரட்டிப் பார்க்கிறது'' என்று தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிவுட்டைச் சேர்ந்த சிலர், அனுராக் காஷ்யப், டாப்ஸிக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் இயக்குநர் நீரஜ், திரைப்பட டிவிடி-க்கள், புத்தகங்கள் நிறைந்த அறையில் அனுராக் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``இந்த டிவிடி-க்களுக்கு நடுவே புதைந்து கிடக்கும் புதையலை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என நம்புகிறேன். அனுராக் காஷ்யப் வீட்டிலிருக்கும் புத்தகங்களில் நிச்சயம் ஏதாவது இருக்கும். அதில் நிறைய செல்வங்கள் உள்ளன'' என்று பதிவிட்டிருக்கிறார்.

புத்தகங்கள்
புத்தகங்கள்

இதையடுத்து அனுராக்கின் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிரத் தொடங்கினர். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் பின்வருமாறு உள்ள விஷயத்தைச் சொல்லியிருந்தனர்...

``முக்கியச் செய்தி... அனுராக் வீட்டில் சோதனை நடத்தவந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும், தங்களது வீட்டுக்குத் திரும்பும்போது சினிமா பைத்தியமாக மாறிவிட்டனர்''
அனுராக் காஷ்யப் ரசிகர்கள்

அனுராக் காஷ்யப், டாப்ஸி இருவருமே சிஏஏ., விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர்.

Nirmala Sitaraman
Nirmala Sitaraman
vikatan

இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ``முதலில் எந்த தனிப்பட்ட நபரைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆனால், இங்கு அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட காரணத்தால்... அதே பெயர்கள்கொண்ட நபர்களின் வீட்டில் 2013-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்போது அது பிரச்னையாக்கப்படவில்லை. இப்போது பிரச்னையாக்கப்பட்டிருக்கிறது'' என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தநிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர், பங்குதாரர் உள்ளிட்டோருக்கு மாற்றப்பட்ட ரூ.350 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பேண்டோம் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களின் வசூலில், பொய்க் கணக்கு காட்டப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
மேலும், ``படத் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கில், சுமார் 300 கோடி ரூபாய் வருவாயில், முரண்பாடு இருந்தது. இது குறித்து கேள்வியெழுப்பியபோது அந்நிறுவனத்தின் அதிகாரிகளால் அதற்கு விளக்கமளிக்க முடியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது'' என்றும் வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நடிகை டாப்ஸியின் வீட்டில் ரூ.5 கோடி ரொக்கத்துக்கான ரசீது கிடைத்திருப்பதாகவும், அது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, தனது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையைக் கிண்டலடித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார் டாப்ஸி.

அந்த ட்வீட்டில், ``மூன்று நாள்கள், மூன்று விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடத்தப்பட்டது.

1. பாரிஸில் நான் வைத்திருப்பதாகச் சொல்லப்படும் பங்களாவின் சாவிகள். ஏனென்றால், கோடை விடுமுறை வருகிறது அல்லவா..!

2. நான் வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. எதிர்காலத்தில் என்னைச் சிக்கவைக்க உதவும் என்கிற நோக்கத்தோடு அதை ஃப்ரேம் போட்டு வைக்கப்போகிறார்கள்.

3. மரியாதைக்குரிய மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்த என்னுடைய நினைவுகளும் தேடப்பட்டன.

பின் குறிப்பு: இனி நான் மலிவானவள் இல்லை’’ என்று பதிவிட்டிருந்தார்.

டாப்ஸி
டாப்ஸி
ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் தங்கை ரங்கோலி, டாப்ஸியை `மலிவானவள்' என்று விமர்சித்திருந்தார். இதற்கு கங்கனாவும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பின்குறிப்பாக ``இனி நான் மலிவானவள் இல்லை'' என்பதைச் சேர்த்திருக்கிறார் டாப்ஸி. இதையடுத்து கங்கனா, ``நீங்கள் எப்போதும் மலிவானவள்தான்'' என்று டாப்ஸியின் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் செய்திருக்கிறார்.

டாப்ஸி தனது வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனை குறித்து மௌனம் கலைத்து, ட்வீட் செய்த பிறகு, அவரது ரசிகர்கள் பலரும், ``தன்மீது குற்றமிருந்தால் இப்படி தைரியமாக ஒரு ட்வீட்டை பதிவிட முடியாது. டாப்ஸி நேர்மையானவர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததே இந்த வருமான வரித்துறைச் சோதனைக்குக் காரணம்'' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
டாப்ஸி, அனுராக்
டாப்ஸி, அனுராக்
Instagram/ anurag kashyap

அனுராக் காஷ்யப்பும் வருமான வரித்துறைச் சோதனைக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``Dobaaraa படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டோம்.... எங்களை வெறுப்பவர்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம்'' என்று டாப்ஸியுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு