Published:Updated:

''அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை'' - கவலையில் கனிமொழி... வருத்தத்தில் ஆதரவாளர்கள்!

'இந்தி தெரியாது போடா' போன்ற பிரசார யுக்திகளும், இளைஞர்கள் மத்தியில தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதுக்கு யார் காரணம்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''ரிசல்ட் வெளியான நாளே அண்ணன் வீட்டுக்கு வருவாருன்னு எல்லா ஏற்பாடும் செஞ்சு, தலைவரை வரவேற்கத் தயாரா இருந்தாங்க. ஆனா மூணு நாள் ஆகியும் இன்னும் அவர் வீட்டுக்கு வந்து பார்க்கலை. ஆற்காட்டார் வீட்டுக்கு, கோபாலபுரம் எதிர் வீட்டுக்கெல்லாம் போறார். ஆனா தங்கச்சி வீட்டுக்குப் போகணும்னு அவருக்கு இன்னும் தோணலை. அண்ணன் முதல்வராகனும்னு போன நவம்பர்ல இருந்து ஆறு மாசமா கடுமையா பிரசாரம் செஞ்சாங்க. ஆனா, அவங்களுக்கான உரிய மரியாதைய கட்சியும் கொடுக்கலை, தலைவரும் கொடுக்கலை'' எனக் கொதிக்கிறார்கள் தி.மு.க மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் ஆதரவாளர்கள்.

பொன்னுத்தாய், கனிமொழி
பொன்னுத்தாய், கனிமொழி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. நாளை முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சில இடங்களில் பிரசாரம் சென்றதோடு சரி, அ.தி.மு.க-வின் அமைச்சர்களோ தங்களின் தொகுதிக்குள்ளாகவே முடங்கிக்கொண்டனர். ஆனால், தி.மு.க-வில் அப்படியல்ல. தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணித் தலைவர் கனிமொழி என மூன்று ஸ்டார் பிரசாரகர்கள் இருந்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க-வின் சார்பில் கடந்த மார்ச் மாதம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், தெற்கு மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் கனிமொழி. ஆனால், கடந்த நவம்பர் மாதம் முதலாகவே மேற்குப் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் கனிமொழி. எளிமையாக அவர் மேற்கொண்ட பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்தது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாள்கள் ஆகியும் இன்னும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு வந்து பார்க்காததில் கனிமொழி வருத்தத்தில் இருப்பதாகக் கவலைப்படுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். இது குறித்துப் பேசிய அவருடைய ஆதரவாளர்கள்...

''போன நவம்பர் மாசத்துல தொடங்கி அவங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வரைக்கும் பிரசாரம் செஞ்சாங்க. கிட்டத்தட்ட, தமிழ்நாடு முழுக்க 160 தொகுதிகளை அவங்க கவர் செஞ்சிருக்காங்க. 700 கூட்டங்கள்ல பேசியிருக்காங்க. இத்தனைக்கும், அவங்க பிரசாரம் போன டெம்போ ட்ராவலர்ல பாத்ரூம் வசதிகூட கிடையாது. அதேபோல, அவங்க பிரசாரம் போன எந்த இடத்துலயும் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலை. எங்கேயும் தேவையற்ற சர்ச்சைகளும் உருவாகலை. பல நாள் நைட் 2 மணிக்கு மேலதான் சாப்பிடவே செஞ்சாங்க. கட்சிக்காரங்க, நிர்வாகிகள் என்ன சாப்பிட்டாங்களோ அதைத்தான் அவங்களும் எடுத்துக்கிட்டாங்க. பலநாள் காலை சாப்பாடே எடுத்துக்கலை. அதனால பல கிலோ எடையும் குறைஞ்சிட்டாங்க.

கனிமொழி பிரசாரம்
கனிமொழி பிரசாரம்
நா.ராஜமுருகன்

பிரசாரம் செஞ்ச மற்ற எல்லோரும் எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு தெரியலை. ஆனா இவங்க எந்தக் கட்டுப்பாடும் விதிக்கலை. அவங்க வேன்கிட்ட யார் வேணாலும் வர்ற மாதிரிதான் இருந்தது. மக்களோட மக்களா அவங்க செஞ்ச பிரசாரம், பெரிய அளவுல கைகொடுத்திருக்கு. மக்கள் தங்கள் குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான் அவங்களைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்குக் கைகொடுத்து, கட்டிப்பிடிச்சு பெண்கள் அன்பைப் பகிர்ந்துக்கிட்டாங்க. ஆனா, மற்றவங்களுக்குக் கிடைச்ச அளவுக்கான அங்கீகாரமோ, மீடியா வெளிச்சமோ அவங்களுக்குக் கிடைக்கலை.

தேனி : `செந்தில் பாலாஜியைத் தொட்டுப் பாரு தம்பி..!’ - அண்ணாமலையை எச்சரித்த கனிமொழி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவங்க மட்டுமில்லை, மகளிரணிப் பொறுப்பாளர்களையும் வீட்டுக்கு வீடு போய் பிரசாரம் செய்ய அறிவுறுத்தினாங்க. எந்த ஊருல பிரசாரக் களத்துல இருந்தாலும் தினமும் பொறுப்பாளர்கள்கிட்ட பேசி கள நிலவரத்தைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ மட்டுமில்ல, கொரோனா காலகட்டத்துலயே மகளிரணி சார்பா நேரடியா மக்களோட மக்களா நின்னு செஞ்ச உதவிகள் எல்லாம் மறைமுகமா தேர்தல் காலத்துல உதவியிருக்கு. அதுமட்டுமில்ல, 'இந்தி தெரியாது போடா' போன்ற பிரசார யுக்திகளும் இளைஞர்கள் மத்தியில தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதுக்கு யார் காரணம்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

கனிமொழி
கனிமொழி
என்.ஜி.மணிகண்டன்

எடப்பாடி பழனிசாமி, இலவச வாஷிங் மெஷின், ஆறு சிலிண்டர்கள் இலவசம்னு பல அறிவிப்புகளை வெளியிட்டாரு. ஆனா, அவங்க சொல்றது எதையும் செய்யறதில்லைன்னு மக்கள்கிட்ட நிதானமான எடுத்துச் சொல்லி அதை முறியடிச்சதுல இவங்க பங்கு அதிகம். அதேபோல, செந்தில் பாலாஜியை, பா.ஜ.க அண்ணாமலை மிரட்டிப் பேசினப்ப, இவங்கதான் உடனடியா பதிலடி கொடுத்தாங்க. இப்படிப் பல விஷயங்களை இன்னும் அடுக்கிட்டே போகலாம். ரிசல்ட் வெளியான நாளே, அண்ணன் வீட்டுக்கு வருவாருன்னு டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு தயாரா இருந்தாங்க. இந்த வருத்தமெல்லாம் எங்களுக்குத்தான். அவங்களுக்கு அண்ணன் மேல எந்தக் கோபமும் இல்லை. கொஞ்சம் வருத்தம்தான் இருக்கு. காரணம், அண்ணன் எப்பவும் நம்மைக் கைவிட மாட்டாருன்னு அவங்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கு. ஆனா, தலைவர் ஏன் வரலைன்னுதான் தெரியலை. ஒருவேளை முதல்வரான பின்னாடி வரலாம்னு தலைவர் காத்திருக்காரோ என்னவோ... உதயநிதி சந்திச்சு இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டதுபோல தலைவரும் வந்தாருன்னா எங்களுக்கெல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும்'' என்கிறார்கள் எதிர்பார்ப்புடனான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு