Published:Updated:

மக்களைத் தேடி மருத்துவம்: 83.24 லட்சம் பேர்... பயனாளிகளின் எண்ணிக்கை சரியானதுதானா?!

மக்களைத் தேடி மருத்துவம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 83 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தநிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

மக்களைத் தேடி மருத்துவம்: 83.24 லட்சம் பேர்... பயனாளிகளின் எண்ணிக்கை சரியானதுதானா?!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 83 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தநிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

Published:Updated:
மக்களைத் தேடி மருத்துவம்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையில் காரசார விவாதம் வெடித்துள்ளது. `பயன் இல்லாத ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை,எளிய மக்களின் உயிரோடு விளையாடுகிறது ஆளும் அரசு' என்கிற குற்றச்சாட்டை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த நிலையில், ` `இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் அரசின் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பாக பேசலாமா?' என அவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன்

`மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில், சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கி வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தத் திட்டத்தின்மூலம், தொற்றாநோய்களான சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரவிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. தொடர்ந்து இந்தத் திட்டத்தின்மூலம், எவ்வளவுபேர் பயனடைந்து வருகின்றனர் என்கிற தரவுகளை அவ்வப்போது துறை அமைச்சர் தெரிவித்துவந்தார். இந்தநிலையில் இந்தத் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா சென்னை சைதாப்பேட்டை, கோதமேடு பகுதியில் உள்ள, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கியபிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின்மூலம் இதுவரை 83 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தநிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,

``மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு பிரமாண்டமாக ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விடியா திமுக அரசு நடத்தியது. தற்போது அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை. வெற்று விளம்பரத்துக்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதலமைச்சரை வைத்து 'போட்டோ ஷூட்' நடத்திவிட்டு, மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு, ``மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மகத்துவம் அறியாத எடப்பாடி பழனிசாமி, இலட்சக்கணக்கானோருக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சையும், மருந்துப் பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பாக பேசலாமா?'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்தநிலையில், அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் சிவசங்கரியிடம் இதுகுறித்துப் பேசினோம்,

``ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடியாரின் ஆட்சியில் தொடங்கப்பட்ட அற்புதமான ஒரு திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம். குக்கிராமங்களில் வாழும் மக்களின் வீண் அலைச்சல்களைத் தவிர்ப்பதற்காக 2,000 மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டும் வந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அம்மாவின் பெயரில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு `மக்களைத் தேடி மருத்துவம்' என்கிற பெயரில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தனர். அம்மா மினி கிளினிக் இருந்தபோது மக்கள் தாங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் சென்று, சிகிச்சை செய்து வந்தனர். ஆனால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாதமொருமுறை அவர்களாக வந்து மாத்திரை, மருந்துகளை வழங்கும் வகையில் மாற்றினர். ஆனால், பெரும்பாலாலான இடங்களில் முதல்முறை வந்து பார்த்துவிட்டுப் போனதோடு யாருமே வரவில்லை என மக்கள் புலம்பும் வகையில்தான் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி வந்து பார்த்தோம் என மக்களைச் சொல்லவைத்து நெருக்கடியும் கொடுக்கிறார்கள்.

சிவசங்கரி
சிவசங்கரி

மருத்துவம் என்பது மிகவும் இன்றியமையாதது. அதில், கவனக்குறைவோடு அலட்சியமாக இருப்பது என்பது மக்களின் உயிரோடு விளையாடக்கூடிய ஒரு விஷயம். உனடியான இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வீழ்ச்சியை நோக்கித்தான் இந்த அரசு செல்லும்'' என்றார் அவர்.

எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்லாமல், சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்தத் திட்டம் செயல்படுவது தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். சமூக சமத்துவத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் சாந்தி இதுகுறித்துப் பேசும்போது,

``இந்த அரசு 40 லட்சம் பேர், 80 லட்சம் பேர் என வெறும் எண்ணிக்கையில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர தொற்றா நோய்களைக் கண்டறிவதிலும் தொடர் சிகிச்சைகளை அளிப்பதிலும் கவனம் செலுத்துவதில்லை என இந்தத்துறை சார்ந்த அதிகாரிகளே கூறுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஒரு நோயாளியே நான்குமுறை மாத்திரை வாங்கினால், நான்குபேர் பயனடைந்தனர் என கணக்குக் காண்பிப்பதாலோ, ஒரு கோடிப் பேர் பயனடைந்துவிட்டனர் என்று சொலவதாலோ, எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, தொற்றா நோய்களைக் கண்டறிந்து நோயாளிகளை அதன் பாதிப்பிலிருந்து விடுவிப்பதுதான். இருக்கின்ற மக்கள்தொகையில் தொற்றாநோய் எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பதை முதலில் கண்டறியவேண்டும். தொடர் சிகிச்சைகளின் மூலம் அதைக் கட்டுப்படுத்தவேண்டும்.

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

இந்தத் திட்டத்தில் பண்புரியும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகமாகக் கணக்குக் காண்பிப்பதற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் விசிட்டுக்குப் போகாமலேயே போனதாக கணக்குக் காண்பிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதனால், புள்ளிவிபரங்கள் சரியாகக் கொடுக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் , உடல்பருமன் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது'' என்கிறார் அவர்.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் இந்த விஷயம் குறித்துப் பேசினோம்,

``தமிழ்நாடு வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே இது ஒரு புரட்சிகரத் திட்டம். தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் திமுக அரசு செய்த பல சாதனைகளில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் அரசுக்குக் கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எதிர்க்கட்சித் தலைவர் இது மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். `அம்மா மினி கிளினிக்' திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

`நான்கு மாத்திரைக் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள்' என மக்கள் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நோய்களைக் கண்டறிவது என்கிற இந்தத் திட்டத்தின் அடிப்படையைக் கூட புரிந்துகொள்ளாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தொடர்ச்சியான மருத்துவத் தேவை என்றால், பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் தெளிவாகச் செய்துவருகின்றனர். அரசியல் விபத்தினால் முதல்வர் ஆனவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரியாது. அதேபோல, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகமாகக் காண்பிப்பதற்கு எல்லாம் வாய்ப்புகளே இல்லை'' என்கிறார் அவர்.