Published:Updated:

அன்று எஸ்.டி.எஸ்... இன்று மேயர் பிரியா... இது ‘தொங்கல்’ அரசியல்!

மேயர் பிரியா - ஆணையர்

மாநகராட்சி மேயரை, ஒரு பெண்ணை திமுக அவமதித்துவிட்டது என எதிர்க்கட்சியினர் திமுக-வைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அன்று எஸ்.டி.எஸ்... இன்று மேயர் பிரியா... இது ‘தொங்கல்’ அரசியல்!

மாநகராட்சி மேயரை, ஒரு பெண்ணை திமுக அவமதித்துவிட்டது என எதிர்க்கட்சியினர் திமுக-வைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

Published:Updated:
மேயர் பிரியா - ஆணையர்

சென்னை மாநகர மேயர் பிரியா முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடியே சென்றது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. `சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசும் திமுக இப்படிச் செய்யலாமா?' என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. அதேவேளையில், `அவரை யாரும் வற்புறுத்தவில்லை. அவராகத்தான் அப்படிப் பயணித்தார் அதில் தவறேதும் இல்லை' என அவருக்கு ஆதரவுக் குரல்களும் ஒலிக்கின்றன.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா

மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் புயல் பாதித்த இடங்களுக்கு குழுவாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது காசிமேடு பகுதியில் ஆய்வு முடித்துவிட்டு அவர்கள் திரும்புகையில், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மாநகராட்சி மேயரை, ஒரு பெண்ணை திமுக அவமதித்துவிட்டது என எதிர்க்கட்சியினர் திமுக-வைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அதிமுக-வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இது குறித்துப் பேசும்போது,

``சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் கலந்துகொள்ளும் திறப்புவிழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்தரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக இருக்கிறார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும்விதமாக இந்த அரசு செயல்பட்டுவருகிறது. `இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஓர் இழுக்கு ஏற்பட்டிருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கோப்புப் படம்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், `சுயமரியாதை இயக்கம், சமூகநீதி இயக்கம், சாமானியர்களின் கட்சி என்ற இந்த போலிக் கதைகள் அனைத்தும் இறந்து புதைந்து வெகுநாள்களாகிவிட்டன. நேற்று திமுக-வால் அது மீண்டும் வெளிப்பட்டுவிட்டது' என மேயர் பிரியா தொங்கியபடியே பயணிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். கட்சி சார்பற்ற பலரும் இந்தச் சம்பவத்தை விமர்சித்துவரும் நிலையில், மேயர் பிரியா விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் பேசும்போது, ``காசிமேட்டில் இரண்டு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஓர் இடத்தில் எங்களுடன் ஆய்வு செய்தார். அடுத்த இடத்தில் ஆய்வு செய்வதற்கு முன்பு அவருக்கு முன்பாக அந்த இடத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும். அவருக்கு முன்பாக சென்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இரண்டு இடங்களுக்கும் இடையில் தொலைவு அதிகமாக இருந்தது.

இதனால் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென அங்கு கான்வாய் வந்தது. அதிலேயே ஏறிவிடலாம் என்று ஏறிவிட்டேன். ஆனால், இதை வைத்து இவ்வளவு சர்ச்சை செய்வார்கள் என்று நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டோம். இதில் முதல்வருக்கு முன்பாகச் செல்ல வேண்டும் என்றுதான் சென்றேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கான்வாயில் இப்படி வருமாறு என்னிடம் சொல்லவில்லை'' என விளக்கமளித்திருக்கிறார்.

சேகர் பாபு
சேகர் பாபு

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும்போது, "முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது அவருடன் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக மேயர் அப்படிச் சென்றிருக்கிறார். மேலும், அந்த வாகனத்தில் முதல்வரும் இல்லை. பாதுகாவலர்களை இறக்கிவிட்டு பிரியா அந்த வாகனத்தில் ஏறவில்லை. அது யதார்த்தமாக நடந்தது. கடந்தகாலங்களில் மேயர்கள் வெளியிலேயே வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்தவர்களெல்லாம் உண்டு. காவல் நிலையத்தில் மேயரின் கைகள் உடைக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கிறது. ஆனால், இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பாரதியாரின் பிறந்ததினம் கொண்டாடப்படும் இந்த நாளில், துணிச்சலோடு செய்த ஒரு பெண்ணின் இந்தச் செயல் பாரட்டப்பட வேண்டும்" என விளக்கமளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை, கடந்தகாலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காரில் மூத்த அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தொங்கியபடியே சென்றதையும், அதைக் கண்டித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி விமர்சித்ததையும் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

``மயிலாப்பூர் இடைத்தேர்தலின்போது அப்போது மந்திரியாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் அவருடைய துண்டை கார் கம்பியில் போட்டு தொங்கிக்கொண்டே போனார். அண்ணாவை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்து பேசவைத்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் அவர். அதனால், அந்தச் சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பத்திரிகைகளில் அவரை `தொங்கல் தாத்தா’ என்று அப்போது எழுதினர். இப்போதும் அதேமாதிரியான ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தமிழ்நாட்டுக்கு வந்தால்கூட மேயர் வரவேற்பு கமிட்டியில் இருப்பார். அந்த அளவுக்கு பிரிட்டிஷ் காலத்திலிருந்தே மேயர் பதவி என்பது மிகவும் மரியாதைக்குரிய பதவி. உதாரணமாக, ஸ்டாலின் மேயராக இருந்தார். அப்போது அவர் அப்பா கருணாநிதி முதல்வராக இருந்தார். ஸ்டாலின் இப்படிப் போயிருப்பாரா... அவரே தெரியாமல் ஏறியிருந்தாலும், முதல்வர் அனுமதித்திருக்கக் கூடாது. மேயர் பதவியின் மாண்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அதைவிட தவறானது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியான கமிஷனர் அப்படித் தொங்கிக்கொண்டு போனது. இது நிச்சயமாகத் தவிர்த்திருக்கவேண்டிய ஒரு விஷயம். இதனால் அரசியல் பின்னடைவு நிச்சயமாக ஏற்படும்'' என்கிறார் அவர்.