Election bannerElection banner
Published:Updated:

`பூத் ஏஜென்ட் தேவை' - பத்மப்ரியாவின் கோரிக்கையும் மநீம விளக்கமும்

கமலுடன் பத்மப்ரியா
கமலுடன் பத்மப்ரியா

மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படைக் கட்டமைப்பு எப்படியிருக்கிறது. அதைச் சரிசெய்ய என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள், உண்மையில் பூத் ஏஜென்ட்டுகள் இல்லாமல்தான் களம்காண்கிறதா மக்கள் நீதி மய்யம் என்பதைத் தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம்...

மத்திய அரசின் `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வரைவு அறிக்கையை விமர்சித்து வெளியிட்ட ஒரேயொரு வீடியோவின் மூலம் பிரபலமானவர் பத்மப்ரியா. சென்னையைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின், மதுரவாயல் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அவரின் பிரசாரத்துக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. ஆனால், இட ஒதுக்கீடு தொடர்பாக, அவர் தெரிவித்த கருத்து பலத்த விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்தநிலையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், தேர்தலைச் சந்திப்பதில் தனக்குப் பல பிரச்னைகள் இருந்தாலும், பண பலம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்வது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாகவும் அதைப் போக்க மக்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவில், தனக்கு மதுரவாயல் தொகுதியில் பூத் ஏஜென்ட்டுகளாக இருக்க தன்னார்வலர்கள் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த இரண்டும் கட்சியிலிருந்து ஒரு வேட்பாளருக்கு கிடைக்க வேண்டியவை. `கட்டமைப்பு சிறப்பாக இருந்திருந்தால் இவ்விரு பிரச்னைகளுக்கும் கட்சியிலேயே தீர்வு கிடைத்திருக்கும். அது சரியாக இல்லாததால்தான் வேட்பாளர் பகிரங்கமாக பொதுமக்களிடம் உதவி கேட்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது’ என்று பல்வேறு தரப்பிலிருந்தும் மக்கள் நீதி மய்யத்தின் மீது விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

கமல்ஹாசன் பிரசாரம்
கமல்ஹாசன் பிரசாரம்

கட்சியின் கட்டமைப்பு என்று வரும்போது தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வை அடித்துக்கொள்ள யாருமே இல்லை. தேர்தல் பரபரப்புகள் தொடங்கியது முதல் தற்போது வரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட முறை இவ்விரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் பூத் ஏஜென்ட்டுகள் வரை மீட்டிங் நடத்தி கட்சிக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிசெய்துகொண்டுதான் தேர்தல் வேலைகளையே தொடங்கினார்கள். இவ்விரு கட்சிகளுடன் கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகள் இவர்களின் உதவியுடன் அந்தக் குறையைச் சரிசெய்துகொள்வார்கள். ஆனால், முதல் கூட்டணி என்ற ஒன்றை அமைத்து முதல்வர் கனவோடு கோவையில் வலம்வரும் கமலின் மநீம கட்சியில் கட்டமைப்பு என்றால் என்ன என்பது வேட்பாளர்கள் வரைகூட சென்று சேரவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம். ஜூனியர் விகடன் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் நீதி மய்யத்துக்கு நகரப்புரங்களில் இருக்கும் வரவேற்பு, கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை என்பதன் மூலம் அக்கட்சி கிராமங்கள் வரை சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது.

இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவது ஏன்? - மக்கள் நீதி மய்யம் பத்மப்ரியாவின் பேச்சும், சமூக யதார்த்தமும்

மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படைக் கட்டமைப்பு எப்படியிருக்கிறது, அதைச் சரிசெய்ய என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள், உண்மையில் பூத் ஏஜென்ட்டுகள் இல்லாமல்தான் களம் காண்கிறதா மக்கள் நீதி மய்யம் என்பதைத் தெரிந்துகொள்ள அதன் ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்...

``மக்கள் நீதி மய்யம் கிராமங்களில் போய்ச்சேரவில்லை என்பது உண்மைதான். என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் வரைக்கும் போய்ச்சேர்ந்துவிட்டோம். கட்சியின் கட்டமைப்பைச் சரிசெய்வதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு அடுத்து கொரோனா கால லாக்டௌவுன் என வந்துவிட்டதால் கிராமங்கள் வரை எங்களால் சென்று சேர முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். நிர்வாகிகளின் அஜாக்கிரதையாலும் சில இடங்களில் கட்சியைக் கட்டமைக்க முடியவில்லை. அடிப்படைக் கட்டமைப்பு என்ற ஒன்று இல்லாததால் மநீம வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாததுபோல தோற்றமளிக்கிறதே தவிர வேறு எந்தப் பிரச்னையையும் நாங்கள் சந்திக்கவில்லை. அதாவது கூட்டம் சேரவில்லையே தவிர, எங்களுக்கான ஆதரவு அலை பரவலாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால்தான் நாங்கள் இந்தத் தேர்தலில் அடிப்படைக் கட்டமைப்பை, பூத்துக்கு ஏஜென்ட்டுகள் நியமனத்தைப் பெரிய பிரச்னையாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

இது எங்களுக்கு பலவீனம்தான் என்றாலும், அவற்றையெல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துவருகிறோம். அதற்கு என்.டி.ராமாராவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தங்கள் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் பெற்ற வெற்றிகளெல்லாம் எங்களுக்கு முன்னுதாரங்களாக இருக்கின்றன. ஆனால், தேர்தல் முடிந்ததும் வலுவான கட்டமைப்பை உருவாக்க அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளன” என்கிறார்.

மேலும் ``இந்தத் தேர்தலில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பைச் சரிசெய்துவிட்டு களம்காண வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் இல்லை. உடனடியாகப் போருக்குச் செல்பவர்களுக்குக் கையில் கிடைப்பது எல்லாமே ஆயுதம்தான் என்ற மனநிலையில்தான் இந்தத் தேர்தலையே நாங்கள் எதிர்கொள்ளத் தயாரானோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை என்ற ஒரே காரணத்தைவைத்தே தி.மு.க பெரிய வெற்றியை அறுவடை செய்தது. எங்களுக்கோ ஒன்று அடிமை அரசு என்றும் மற்றொன்று `அட்ஜஸ்ட் அரசு' என்று அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் வெறுப்பிலும் அவர்கள் போதும் என்றும் 50 சதவிகித மக்கள் மனநிலையில் அலை உருவாகியிருக்கிறது. இந்த அலையை நம்பித்தான் கட்சியின் கட்டமைப்பை மனதில் கொள்ளாமல் தேர்தலைச் சந்திப்பது என்ற மனநிலைக்கு நாங்கள் வந்தோம். இவர்கள் இருவரும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்காக எதையும் போராடிப் பெற்றதே இல்லை. நேர்மாறாக, பறிகொடுத்த உரிமைகள்தான் அதிகம். இரண்டு திராவிடக் கட்சிகள்மீதும் அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு நாங்கள் நம்பத் தகுந்தவர்களாகவும் போதுமான தகுதி உடையவர்களாகவும் காட்டிக்கொண்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எங்களுக்கு தலைவர் கமலின் பிரசார உத்தி மற்றும் எங்கள் வேட்பாளர்களின் உழைப்பு ஆகியவை மீதும் நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் இந்தத் தேர்தலையே நாங்கள் சந்தித்துவருகிறோம்.

கமல்
கமல்

அரசியல்வாதிகளே இல்லாத அரசியல் கட்சி மநீம. காலகாலமாக இருக்கும் அரசியல் கட்சிகளின் இலக்கணங்களில் நாங்கள் பின்தங்கித்தான் இருக்கிறோம் என்றாலும், எங்களின் நேர்மையாலும் செயல்பாட்டாலும் மக்களிடம் தலைவர் கமலுக்கு மரியாதை உருவாகியிருக்கிறது. அதை மூலதனமாக வைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என நம்புகிறோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு