Published:Updated:

`திருந்தி வந்தால் ஏற்பதே நல்ல தலைமை!' - ஓ.பி.எஸ்-ன் குட்டிக்கதையும் அதிமுக மல்லுக்கட்டும்!

சசிகலா, ஓ.பி.எஸ்
News
சசிகலா, ஓ.பி.எஸ்

சசிகலாவை முன்வைத்துதான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார் என ஒரு தரப்பினரும் இல்லை அவர் பொதுவாகத்தான் சொன்னார் என மற்றொரு தரப்பினரும் அதிமுக-வுக்குள் மல்லுக்கட்டுகின்றனர்.

''நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை, பாவத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே நான் வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும்'' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது, அந்தக் கட்சிக்குள் சரவெடியைப் பற்றவைத்திருக்கிறது. சசிகலாவை முன்வைத்துதான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார் என ஒரு தரப்பினரும் இல்லை அவர் பொதுவாகத்தான் சொன்னார் என மற்றொரு தரப்பினரும் கட்சிக்குள் மல்லுக்கட்டுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவில்
கிறிஸ்துமஸ் விழாவில்

சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போதுதான் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார் ஓ.பி.எஸ். மேலும், அதை, இயேசுபிரான் சொன்னதாக ஒரு பத்திரிகையில் படித்ததாகவும் அந்தக் கதையை கிறிஸ்துமஸ் விழாவில் சொல்வதற்கான வாய்ப்பை இந்த விழா ஏற்படுத்தித் தந்திருக்கிறது எனவும் விளக்கமளித்தார். ஆனால், சசிகலாவை மனதில் வைத்துத்தான் அவர் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் என அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு உண்டாது. இந்த நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்ப,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``ஓ.பி.எஸ் சொன்னது பாமர மக்களுக்கு, தொண்டர்களுக்கு, மாவட்டச் செயலாளர்களுக்குப் பொருந்தும். சசிகலாவுக்குப் பொருந்தாது, அவருக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அந்த விஷயத்தில் எங்கள் ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக இருக்கிறார்'' என பதிலளித்தார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸின் கருத்து, கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலருக்குக் கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளதாக அதிமுக வட்டாரம் கொந்தளிக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர்,

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``ஓ.பி.எஸ் தொடர்ந்து இதே வேலையைத்தான் செஞ்சுக்கிட்டு வர்றாரு. ஏற்கெனவே இப்படித்தான் சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு எல்லோரும் பேசிக்கிட்டு இருந்தப்ப, அவரைக் கட்சிக்குள்ள சேர்த்துக்குறது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பாங்கன்னு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாரு. இப்போ, அதே மாதிரி இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரு. அவர் சொன்ன விஷயத்தைப் பத்திரிகையில படிச்சதா சொல்றாரு, ஆனா அதுல, தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும்னு இல்லவே இல்லை. தலைமை அப்படிங்குற வார்த்தையை இவராகவே சேர்த்துக்குறாரு. அதுமட்டுமில்லை, இந்தக் கதையைச் சொல்ல, விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கிட்டேன்னு வேற சொல்றாரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் மனசுல பல நாளா இருக்குற ஒரு கருத்தை, இதன் மூலம் சொன்னேன் அப்படிங்கிறதுதான் அதுக்கு அர்த்தம். சசிகலாவைக் கட்சிக்குள்ள சேர்க்கணுங்குற எண்ணம் அவருக்கு உண்மையிலேயே இருக்கா, இல்லை அப்பப்போ இந்த மாதிரி ஏதாவது பேசி பயம் காட்டலாம்னு நினைக்கிறாரான்னு தெரியலை. ஆனா, கட்சித் தலைமைப் பொறுப்புல இருந்துக்கிட்டு அவர் இப்படிப் பேசுறதும், கட்சிக்குள்ள சலசலப்பை உண்டாக்குறதும் ரொம்பத் தப்பு'' என்கிறார்கள் கோபமாக.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளரும், ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளருமான கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``ஒரு மனிதன் தெரியாமல் ஒரு தவறு செய்து, அதற்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளலாம். அதுதான் ஒரு தலைமைக்கு அழகு என்றுதான் அண்ணன் ஓ.பி.எஸ் சொன்னார். அண்ணன் சொன்ன கருத்தை, அங்கிருந்த அனைவருமே அமோதித்து ஏற்றுக்கொண்டார்கள். அதிமுக நிர்வாகிகள் பலர்கூட தெரியாமல் தவறு செய்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகத்தில் சேர்ந்துவருகிறார்கள். ஆனால், அண்ணன் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதை தனி ஒரு நபருக்குச் சொன்னதுபோல ஜோடித்து சர்க்கஸ் கோமாளிபோல சிலர் பதில் சொல்லிக்கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையானது. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்கிறார் காட்டமாக.

ஆக மொத்தம், ஓ.பி.எஸ்-ஸின் குட்டிக்கதை கட்சிக்குள் குட்டிக் கலகத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.