Published:Updated:

பட்டினப் பிரவேச தடை நீக்கம்... அடிபணிதலா, சாதுர்ய நடவடிக்கையா?

பட்டினப் பிரவேசம்

பட்டினப் பிரவேச விவகாரத்தில் ஆளும் திமுக அரசு, அடிபணிந்து விட்டதா இல்லை சாதுர்யமாகச் செயல்பட்டதா?

பட்டினப் பிரவேச தடை நீக்கம்... அடிபணிதலா, சாதுர்ய நடவடிக்கையா?

பட்டினப் பிரவேச விவகாரத்தில் ஆளும் திமுக அரசு, அடிபணிந்து விட்டதா இல்லை சாதுர்யமாகச் செயல்பட்டதா?

Published:Updated:
பட்டினப் பிரவேசம்

தருமபுர ஆதின பட்டினப்பிரவேசத் தடை விவகாரம் கடந்தவாரம் தமிழக அரசியல் களத்தில் பல சர்ச்சைகளை உண்டாக்கியது. 'மனிதனை மனிதன் தூக்கிச் சுமப்பதை ஏற்கமுடியாது' என அதற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. ஆனால், 'அது எங்கள் பாரம்பர்யம் அதை யாரும் தடை போடமுடியாது' என தடைக்கு எதிராகப் பலர் கொந்தளித்தனர். அரசு அனுமதி அளித்ததையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அடிபணிந்துவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், `தேவையற்ற பல சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்' என ஆளும் தரப்பில் விளக்களிக்கப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு, அடிபணிந்து விட்டதா, இல்லை சாதுர்யமாகச் செயல்பட்டதா?

மதுரை ஆதினம்
மதுரை ஆதினம்

பழைமை வாய்ந்த மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில், ஒவ்வோர் ஆண்டும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்தப்படும். அன்றைய தினம், ஆதீன குரு மகா சந்நிதானத்தை (ஆதீன கர்த்தர்) பல்லக்கில் அமரவைத்து, மக்கள் தோளில் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, மே மாதம் 22-ம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், `மனிதனை மனிதன் சுமக்கவைக்கும் செயல், ஒரு மனித உரிமை மீறல்' எனக் கூறி திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கத்தினர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திராவிட கழகத்தினர் சார்பில் `தருமபுரம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி, பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஆதீனம் தமிழக அரசின்மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மன்னார்குடி ஜீயர், அமைச்சர்கள் யாரும் நடமாட முடியாது மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ஆதீனங்கள், இந்து மத அமைப்புகள் மட்டுமல்லாமல், சட்டமன்ற எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, தடையை நீக்கவும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், விழுப்புரம் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முதல்வரைச் சந்தித்து தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து, தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாச்சியர் உத்தரவிட்டார்.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

இந்தநிலையில், ஆளும் அரசு அடிபணிந்து விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி இதுகுறித்துப் பேசும்போது,

``அடிப்படையில் பல்லக்குத் தூக்கும் முறை என்பது ஆரிய அடிமைத் தனத்தின் நீட்சி. திறந்தவெளி மேடையில், வானகத்தில் நின்றுகொண்டு ஆதினங்கள் மக்களைச் சந்திப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மக்கள் பல்லக்கில் தூக்கிச் சுமக்கவேண்டும் என்பதை ஏற்கமுடியாது. கை ரிக்‌ஷாவை ஒழித்துவிட்டதாக பெருமைகொள்ளும் திமுக, பல்லக்குத் தூக்க அனுமதி அளிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சேலத்திலும் தாம்பரத்திலும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி கேட்கிறது. காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஷாகாவுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆரியத்தை சமரசமில்லாமல் எதிர்க்கும் திமுகவின் லட்சணம் இதுதான். இந்த அரசு யாரையோ திருப்திப்படுத்த ஆன்மிகம் ஆன்மிகம் என தம்பட்டம் அடிக்கிறது என திராவிட கழகத் தலைவர் ஐயா வீரமணி அறிக்கை வெளியிடுகிறார். அது யார் என்கிற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர்கள் யாரும் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் கருத்துத் தெரிவிக்கிறார். அதற்கு யாரும் எதிர்வினை ஆற்றவில்லை. கூடுதலாக, `ஜீயர் மிகவும் நல்லவர், அவருக்கும் கருத்துரிமை உண்டு' என அமைச்சர் சேகர் பாபு சொல்கிறார். இதே கருத்தை எங்களைப் போன்றவர்கள் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், `நாங்கள் சோடா பாட்டில் வீசுவோம்' என்றார். அன்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு ஆதரவாக அறிக்கை விட்டது தி.மு.கவின் ஜெகத்ரட்சகன். ஜீயருடைய உண்ணாவிரத்தை நிறுத்த நேரில் சென்று பார்த்தது துர்கா ஸ்டாலின். அப்படி அன்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு ஆதரவாக நின்ற திமுக, தற்போது மன்னார்குடி ஜீயருக்கு ஆதரவாக நிற்கிறது. ஆதினங்கள் பட்டினப் பிரவேசத்துக்கு மாற்று வழியைத் தேட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார். எங்களைப் போன்றவர்கள் கோரிக்கை வைக்கலாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படிக் கோரிக்கை வைத்து பொறுப்பைத் தட்டிக் கழிப்பது என்ன மாதிரியான அணுகுமுறை. ஆர்.எஸ்.எஸ் கலவரம் செய்யத் திட்டமிட்டார்கள், அதனால்தான் சாதுர்யமாகச் செயல்பட்டோம் எனச் சொல்கிறார்கள். ஆனால், இது திமுகவின் வழமையான ஆரிய அடிபொடித்தனத்தின் வெளிப்பாடுதான். திமுக இந்த விவகாரத்தில் அடிபணிந்து விட்டது என்பதே உண்மை'' என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் கொரோனா காலத்தைத்தவிர மற்ற ஆண்டுகளில் இந்த நிகழ்வுகள் நடக்கத்தான் செய்தது. அப்போது கேள்வி எழுப்பாதவர்கள், இப்போது எழுப்புகிறார்கள் என்றால், சுயமரியாதைக்கான இயக்கமான திமுகவைத்தான் அனைவரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.அது சரிதான். ஆனால், ஆரியத்தை எதிர்த்து உருவானதுதான் சைவ மடங்கள். ஆரியத்தின் பல்லக்கு கலாசாரத்தை நாம் பின்பற்றக் கூடாது என சைவ மடாதிபதிகள்தான் முடிவெடுக்க வேண்டும். திராவிட அரசியலின் மூலமே சைவ மதத்தில்தான் இருக்கிறது. சைவமதம் என்பது திராவிட மதம். அதனால்தான், இந்து சமய அறநிலையத்துறையைக்கூட திராவிட அறநிலையத்துறை எனப் பெயர் மாற்ற கோரிக்கைகள் எழுகிறது. சைவ மடாதிபதிகள் ஆரியவாதிகளாக மாறிவிட்டார்கள் என்றால் பக்தர்களும், தமிழ் மக்களுக்கும்தான் அவர்களைக் கேள்வி எழுப்பவேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டால், இதைவைத்து தமிழகத்தில் அரசியல் செய்யக் காத்திருக்கும் பாஜகவுக்குத்தான் அது வலு சேர்க்கும். பட்டினப் பிரவேசம் நடக்காவிட்டால் அதனால் பல பிரச்னைகள் உருவாகும் என்றால், அதை முன்னெச்சரிக்கையோடு தடுக்க வேண்டியதுதான் அரசினுடைய பொறுப்பு. ஒரு மக்கள் அரசாங்கம் அதைத்தான் செய்யும். திமுகவுக்கு கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், எங்கள் கொள்கையை எல்லா இடத்திலும் சென்று நீட்டமுடியாது. நீங்கள் முன்வைக்கும் எல்லா விமர்சனங்களுக்கும் இதுதான் பதில். அதேவேளை, ஆண்டாள் விவகாரத்தில் ஜீயருக்கு ஆதரவாக தி.மு.க இருந்தது என்பது அடிப்படையிலேயே தவறான ஒரு கருத்து'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism