Published:Updated:

பாமக: நிர்வாகிகள் கூட்டத்தில் கொந்தளித்த ராமதாஸ் - சாத்தியமாகுமா அவரின் '60' தொகுதிக் கனவு?

மருத்துவர் ராமதாஸின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிர்வாகிகள் கூட்டத்தில் இவ்வளவு கொதித்துப் பேசவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

''தமிழகத்தில் 36 - 40 கட்சிகள் இருக்கின்றன. அதில் நாம் ஒரு கட்சியா? பெருமையாகச் சில சமயம் சொல்லிக்கொள்கிறோம், மூன்றாவது பெரிய கட்சி என்று. ஆனால், 'ஊராட்சி மன்றத் தேர்தலில் நிற்கவைக்கக்கூட ஆள் இல்லை ஐயா!' என்கிறோம். இது தமிழகம் முழுவதும் பா.ம.க-வில் நடந்ததுதான். இந்தத் தமிழக மக்களுக்காக நாம் போராடாதது ஏதேனும் உண்டா! நம் கட்சியில் உள்ளதுபோல அன்புமணியின் இளைய தம்பி, தங்கைகள் வேறு ஏதேனும் கட்சியில் உள்ளனரா... பின் ஏன் நாம் வளரவில்லை... இதை நாம் எப்போது சரிசெய்யப்போகிறோம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களிடமிருந்து பதிலைப் பெற நினைக்கிறேன்.''

திண்டிவனத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அனலாகக் கக்கிய வார்த்தைகள் இவை.

ராமதாஸ் ஆதங்கம்!
ராமதாஸ் ஆதங்கம்!

இப்போது மட்டுமல்ல, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், இணைய வழியாக நடந்த பா.ம.க-வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திலேயே, ``இத்தனை ஆண்டுகள் ஆகியும், நம் கட்சி ஆட்சியைப் பிடிக்காமல் போக, ராமதாஸே நீதான் காரணம்” என ராமதாஸ் தழுதழுக்க, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர். அடுத்ததாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும், ``துரோகிகள் கட்சியைவிட்டு வெளியேறிவிடுங்கள், மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா..? என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்'' எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். அதே பாணியில் தற்போதும் நிர்வாகிகளை வறுத்தெடுத்திருக்கிறார்.

''சாதாரணப் பஞ்சாயத்து பிரசிடென்ட் வேட்பாளரை நிறுத்துவதற்குக்கூட உங்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. இதற்குப் பல கண்டிக்கத்தக்க, அருவருப்பான காரணங்கள் இருந்தாலும் நீங்க எல்லோரும் பொறுப்பேற்கத்தானே வேண்டும். 'வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆள் இல்லை, நாங்கள் மனு போடவில்லை...' ஏனெனில், அண்டர் ஸ்டாண்டிங்... லோக்கல் அண்டர் ஸ்டாண்டிங்..! அவ்வளவு பலவீனமான கட்சியாகவா மாறிவிட்டது!''
ராமதாஸ்

நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஏழு மாவட்டங்கள் வட தமிழகத்தில்தான் இருந்தன. ஆனால், மொத்தமுள்ள 140 மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் ஓர் இடத்தைக்கூட பா.ம.க-வினர் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 1,421 இடங்களில், வெறும் 45 இடங்களை மட்டுமே பா.ம.க கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல், தனித்துப்போட்டி என தலைமை அறிவித்திருந்தபோதும், மாவட்ட அளவில் பா.ம.க-வினர், அதிமுக-வுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாகச் செய்திகள் வெளியாக, கடுப்பானார் மருத்துவர் ராமதாஸ். உடனே, 'லோக்கல் அன்டர் ஸ்டாண்டிங்' கூடாது என்கிற தொனியில் ஒரு படத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது நடந்த கூட்டத்திலும் அது குறித்துச் சுட்டிக்காட்டிப் பேசியவர், கூடுதலாக, பல இடங்களில் பாமக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது குறித்தும் நிர்வாகிகளை மிகக் கடுமையாகச் சாடினார்.

ராமதாஸ் ட்வீட்
ராமதாஸ் ட்வீட்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தலிலும் கட்சியினரின் உள்ளடி வேலைகளால்தான் பா.ம.க வெற்றிபெறவில்லை எனவும் கூடுதலாக இரண்டு இடங்களில் வெற்றிபெற்றிருந்தால் மாம்பழச் சின்னத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் எனவும் பேசிய ராமதாஸ், ''இனிவரும் காலம் நம் காலமாக இருக்க வேண்டும். அது தமிழக மக்களின் விடியும் காலமாக இருக்க வேண்டும். அந்த விடியலை, பாமக தமிழக மக்களுக்குக் கொடுக்கும் நாளாக இருக்க வேண்டும். அன்புமணி முதலமைச்சர் என்று சொல்லிவிட்டால் போதாது. அதற்கான திட்டம் என்ன நம்மிடம் இருக்கிறது? இரண்டே இரண்டு திட்டம்தான், அது திண்ணைப் பிரசாரமும் சமூக வலைதளமும்தான்'' என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் திண்ணைப் பிரசாரம் செய்யவும், சமூக வலைதளங்களில் கருத்து பிரசாரங்கள் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவர் ராமதாஸின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிர்வாகிகள் கூட்டத்தில் இவ்வளவு கொதித்துப் பேசவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து, அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம்.

''40 ஆண்டுக்கால உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்கிற நியாயமான கோபத்தின் வெளிப்பாடு அது. பலன் என்பது ஆட்சி அதிகாரம் அல்ல. கொள்கைசார்ந்து அவர் நினைத்த ஆக்கபூர்வமான அரசியல் இங்கே நிகழவில்லை, வெறும் பண அரசியல் மட்டுமே நடக்கிறது. கட்சி நிர்வாகிகள் சிலரே அதற்கு விலைபோய்விட்டார்களே என்கிற வருத்தம்'' என்றவரிடம்,

'கட்சித் தலைமையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பேரங்களில் ஈடுபட்டதால்தான் கீழ்மட்ட நிர்வாகிகளும் அதையே பின்பற்றுகிறார்கள்?' என விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்துக் கேட்க, '' தலைமை அப்படிப் பணம் வாங்கியது என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா... இது மற்றவர்கள் வேண்டுமென்றே கிளப்பிவிடுவது. யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்துகள் மட்டுமே...'' என்றவரிடம் 'தேர்தல் தோல்விக்குத் தலைமை பொறுப்பேற்காமல், நிர்வாகிகள்மீதும், தொண்டர்கள் மீதும் பழிபோடுவது சரியா?' எனக் கேட்க,

திலகபாமா
திலகபாமா

'' ஒரு கட்சித் தலைமை எவ்வளவு சிறப்பான திட்டங்களை முன்வைத்தாலும், மனமாற்றம் வரவேண்டியது மக்களிடம் இருந்துதான். அந்தவகையில் உணர்வுரீதியாக எங்கள் தொண்டர்களைத் தொட்டெழுப்பும் முயற்சியாகத்தான் நீங்கள் இந்தப் பேச்சுகளைப் பார்க்க வேண்டும் '' என்றார் அவர்.

பாமக உருவாக்கப்பட்டது ஏன்? - அன்புமணியின் புதிய விளக்கமும் 'இலக்கு'களும்!

'திண்ணைப் பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி' போன்ற ராமதாஸின் திட்டங்கள் எந்த அளவுக்குச் சாத்தியம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

''தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை 2009-ல் இருந்தே பா.ம.க-வுக்குப் பின்னடைவுதான். 2006 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்கங்களில் எம்.எல்.ஏ-க்களைப் பிடித்ததோடு சரி. 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 5.32 சதவிகித வாக்குகளை வாங்கினார்கள். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அது மூன்று சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதேபோல, உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்த நிலையில், திண்ணைப் பிரசாரம் உள்ளிட்ட விஷயங்களைச் செய்யச்சொல்லி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ராமதாஸ். 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதற்குச் சாத்தியங்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன். 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டுமென்றால் வன்னியர் வாக்குவங்கியைத் தவிர மற்ற சமூக வாக்குகளும் முக்கியம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் பாமக-வுக்கு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

ப்ரியன்
ப்ரியன்

வன்னியர் பெரும்பான்மை உள்ள இடங்களில்கூட, முழுமையாக அந்தச் சமூக வாக்குகள் பாமக-வுக்கு விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தவிர, அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள், சாதியைத் தாண்டி கட்சியைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளாகவும் தெரியவில்லை. தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிராக ஒரு வாக்குவங்கி இருக்கிறது. அதைப் பெற வேண்டுமானால், மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், பாமக-வின் அரசியல் செயல்பாடுகள் அப்படியாக இல்லை. அதேபோல, மாநில அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. கூட்டணிக் கணக்குகளை மனதில்வைத்து அதைச் செய்யாமல்விட்டாலும் பலனில்லை. திண்ணைப்பிரச்சாரம் ஒரு சமூகத்துடன் சுருங்கிவிடக்கூடாது. எல்லோருக்குமான கட்சி பாமக என்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அன்புமணி மக்கள் பிரச்னைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்தால்கூட, பத்துப் பதினைந்து தொகுதிகளில் கடுமையான போட்டியை வேண்டுமானால் அந்தக் கட்சி உருவாக்கலாம்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு