Published:Updated:

``வேதா நிலையத்தின் ஒன்-ஏ அறை” - அன்று அலறியவர்கள், இன்று ஆச்சர்யத்தோடு பவனி!

வேதா நினைவு நிலையம்
வேதா நினைவு நிலையம் ( Jerome )

ஒன்-ஏ அறையையே ஜெயலலிதா பெரும்பாலும்  பயன்படுத்திவந்தார். இந்த அறைக்குள் நடந்த சந்திப்பால் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களும் உண்டு, ஜெயலலிதாவின் அக்னிப் பார்வையால்  காணாமல்போனவர்களும் உண்டு.

``ஒன்-ஏ அறைக்கு வரச்சொல்லியிருக்கிறார் அம்மா” - இப்படித்தான் 2016-ம் ஆண்டு வரை போயஸ் கார்டனிலிருந்து, அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கான அழைப்பு வரும். வேதா நிலையத்தின் முகப்பிலுள்ள அந்த அறையைத் தாண்டி ஓரடி கூட உள்ளே செல்ல முடியாத அமைச்சர்கள் இப்போது வேதா நிலையத்தை வியப்போடு சுற்றிவந்திருக்கிறார்கள்.

 போயஸ் கார்டன் - வேதா நிலையம்
 போயஸ் கார்டன் - வேதா நிலையம்

ஜெயலலிதாவின் ஆஸ்தான இல்லமாக அவர் வாழும் காலம் வரை இருந்தது போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையம். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும், முதல்வராக இல்லாத காலத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த பகுதியாக வேதா நிலையம் இருந்தது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா உயிரோடு இருந்தபோது, இந்த இடத்தை வாங்கியிருக்கிறார். இந்த இடத்தில் வீடு கட்டும்போதே சந்தியா இறந்துவிட, தனி ஆளாக இந்த வீட்டுக்குள் குடியேறினார் ஜெயலலிதா. அதன் பிறகு அரசியல் என்ட்ரி, முதல்வர் என ஜெயலலிதாவின் அடுத்தடுத்த வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் இந்த வேதா நிலையமே பிரதானமாக இருந்திருக்கிறது.

ஜனவரி 28-ம் தேதியன்று ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, வேதா நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்திருக்கிறார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும் பங்கேற்றனர். ஜெயலலிதா வீட்டுக்குள் முதன்முறையாக எந்த அச்சமும் இல்லாமல் அமைச்சர் பெருமக்கள் சென்று வந்ததைப் பார்க்க முடிந்தது.

வேதா நினைவு இல்லம் திறப்பு விழா
வேதா நினைவு இல்லம் திறப்பு விழா

ஜெயலலிதாவின் வீட்டுக்குள்ளே, இதற்கு முன்பு அமைச்சர்கள் யாரும் சென்றது கிடையாதா... ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

``91-96 காலத்திலும், அதற்கு முன்பாகவும் ஜெயலலிதா வீட்டின் கீழ்ப் பகுதியிலுள்ள ஹாலுக்கு அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு ஜெயலலிதாவின் வீடு எது என்று கட்சிக்காரர்களிடம் கேட்டால் ஜெயலலிதா வீட்டுக்கு அருகேயுள்ள புதிய கட்டடத்தை மட்டுமே காட்டுவார்கள். ஆம்! பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக தனது வீட்டை ஒட்டிய காலிப் பகுதியில் இரண்டு அடுக்கில் புதிய கட்டடத்தைக் கட்டினார் ஜெயலலிதா. இந்தக் கட்டடத்தில்தான் ஜெயலலிதாவின் பெரும்பாலான சந்திப்புகள் நடந்தன.

தற்போது அந்த வீட்டின் பிரதான வாசலுக்கு அருகில் சிறிய அறை இருக்கிறது. அந்த அறையின் மேல்தளத்தில் தனியாக மற்றோர் அறையும் இருக்கிறாது. இந்த இடம்தான் ஒன்-ஏ என்று அழைக்கப்படும் அறை. ஜெயலலிதா அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க விரும்பினால், அவர்களை நேராக, ஒன்-ஏ அறைக்கு வரச்சொல்லிவிடுவார்கள். அதற்கு மேல்தளத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை இருக்கிறது. ஜெயலலிதா வீட்டுக்கும், இந்த அறைக்கும் இடையில் மற்றொரு ஹால் இருக்கிறது. இந்த ஹாலில் முக்கிய விருந்தினர்களைச் சந்திப்பதையும் வழக்கமாகவைத்திருந்தார் ஜெயலலிதா.

வேதா நிலையம் மாடியில் ஜெயலலிதா
வேதா நிலையம் மாடியில் ஜெயலலிதா

இதை ஒட்டிய புதிய கட்டடத்தின் முதல்தளத்தில் மீட்டிங் நடத்துவதற்கான கான்ஃபிரன்ஸ் ஹால் ஒன்றும் இருக்கிறது. இதற்கு மேல்தளத்தில் முதல்வரின் செயலாளர்கள் நால்வருக்கும், தனித் தனி அறைகளையும் கட்டிவைத்திருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா வீட்டின் முதல் தளத்திலிருந்து இந்தக் கட்டடங்களுக்கு நேரடியாக வந்துவிடும் வகையில் கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மட்டுமல்ல, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் யாரைச் சந்திக்க விரும்பினாலும் இந்த ஒன்-ஏ அறையையே பயன்படுத்திவந்தார். இந்த அறைக்குள் சென்று ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களும் உண்டு, ஜெயலலிதாவின் அக்னிப் பார்வையால் குட்டு வாங்கி காணாமல்போனவர்களும் உண்டு. இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் உட்பட அனைவருமே ஜெயலலிதாவின் வீட்டுக்குள் சென்றது அந்த ஒன்-ஏ அறை வரை மட்டுமே” என்கிறார்கள்.

ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?
நினைவு இல்லத் திறப்பு விழாவில் திரண்ட கூட்டம்
நினைவு இல்லத் திறப்பு விழாவில் திரண்ட கூட்டம்
Jerome

இன்றைக்கு திறப்புவிழா கண்டதும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மட்டுமே போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதித்தார்கள். முதல்வர் உட்பட சக அமைச்சர்கள் பலருமே ஆர்வத்தோடு முதல் மாடியிலுள்ள ஜெயலலிதாவின் அறையைக் காணச் சென்றனர். அங்கிருந்து நேரடியாக பூங்குன்றன் அறை வழியாக ஓன்-ஏ அறைக்குள் வந்து வெளியே வந்தனர். அருகில் இருந்தபோதும், ஜெயலலிதாவின் வீட்டுக்குள் செல்ல முடியாமல் இருந்த ஆசையை அமைச்சர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலருக்கு வீட்டுக்குள் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் இன்றைக்கும் ஏக்கத்தோடு வாசல் கதவு அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.  ஜெயலலிதாவின் உடைமைகளை இன்னும் கணக்கிட முடியாமல் இருப்பதால், பொதுமக்கள் பார்வைக்கு நினைவு இல்லத்தைத் திறக்க இடைக்காலத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

அடுத்த கட்டுரைக்கு