Published:Updated:

பொங்கல் பரிசுப் பணம்: `நிதி இல்லை’... `இதுதான் சொல்லாததையும் செய்வோம் என்பதா?’ | திமுக Vs அதிமுக

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொங்கல் பரிசுப் பணம்
பொங்கல் பரிசுப் பணம் ( வி.ஸ்ரீனிவாசலு )

`பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் இல்லை’ என்பதற்கு அதிமுக-வின் எதிர்ப்பு நியாயம்தானா இல்லை வெறும் அரசியல் நடவடிக்கையா?

தைப்பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாத காலம் இருக்கும் நிலையில், அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை முன்வைத்து எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் கட்சிக்கு எதிராகப் பட்டாசைப் பற்றவைத்திருக்கிறது. ஆனால், 'பரிசுத் தொகுப்பில் பணம் இடம்பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை' என அதிமுக-வுக்கு திமுக-வினர் பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில், அதிமுக-வின் இந்த எதிர்ப்பு நியாயம்தானா இல்லை வெறும் அரசியல் ஸ்டன்ட்டா என்று பார்ப்போம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு கரும்புடன் 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில், பணம் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பணமும் வழங்கப்பட வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி இது குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில், ``பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசுப் பணமும், முழுக்கரும்பும் வழங்கிவந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம், கரும்பைக் காணவில்லை. தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டுவந்த பொங்கல் பரிசுப் பணத்தைக் காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், `` `அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பொங்கல் நிதி உதவி வழங்குவதைக் கைவிட்டுவிட்டு, வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்து மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்குப் பெயர்தான் `சொல்லாததையும் செய்வோம்’ என்பதா?’’ எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழக அரசின் நிதி நிலைமை தெரிந்த பிறகும் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருக்கும் அதிமுக, இந்த விஷயத்தைவைத்து அரசியல் செய்ய நினைக்கிறதா என்கிற கேள்வியை அதிமுக-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பாபு முருகவேலிடம் முன்வைத்தோம்.

``மக்கள்நலன் சார்ந்துதான் அதிமுக எப்போதும் சிந்திக்கும். அதுதான் எங்கள் அரசியலும்கூட. அம்மா முதல்வராக இருக்கும்போது பொங்கல் பரிசுப் பொருள்களுடன் நூறு ரூபாய் பணமும் கொடுத்தோம். எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் 2020-ம் வரும் ஆயிரம் ரூபாயும் 2021-ம் வருடம் 2,500 ரூபாயும் கொடுத்திருக்கிறோம். ஆனால், இந்த அரசு வெறும் பொங்கல் பொருள்களை மட்டும் அறிவித்திருப்பது மக்களை மிகுந்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. அரசாங்கம் என்பது லாப நோக்கோடு செயல்படவேண்டிய ஓர் அமைப்பு கிடையாது. நிதி நிலைமையைக் காரணம் காட்டி மக்களுக்கு வழங்கவேண்டிய உதவிகளை நிறுத்த முடியாது. நிதி நிலையைச் சரிசெய்ய வேண்டியது அரசாங்கத்தினுடைய பொறுப்பு. இதில் காரணம் சொல்வதை ஏற்க முடியாது. நாங்கள் கடைசியாக வழங்கிய 2,500 ரூபாயையாவது இந்த அரசு கொடுக்க வேண்டும்'' என்றவரிடம், ``கடந்த வருடம் கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால்தானே 2,500 ரூபாய் கொடுக்கப்பட்டது, தவிர, தேர்தலைக் கருத்தில்கொண்டு கொடுக்கப்பட்டது என்கிற விமர்சனங்கள் உண்டே’’ என்று கேட்க,

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

''இப்போது மட்டும் கொரோனா நெருக்கடி இல்லையா... கொரோனா முழுமையாக ஒழிந்துவிட்டது என்று இந்த அரசால் சொல்ல முடியுமா... இல்லை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது அதனால் மக்களுக்கு இந்த உதவி தேவையில்லை என்று இவர்களால் சொல்ல முடியுமா?

கடந்த பொங்கலுக்கு ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, 2,500 ரூபாய் பொங்கல் தொகையைக் கொடுத்துவிட்டு, தளபதி ஆட்சி அமைந்ததும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஒன்றும் கொடுக்காமல் இருக்கிறார்கள். எங்களைவிட சிறப்பான ஆட்சியைக் கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள், எங்களைவிட அதிகமாகத்தானே கொடுக்க வேண்டும்? நல்ல விஷயங்களையெல்லாம் கிரெடிட் எடுத்துக்கொள்ளும் இவர்கள் இது போன்ற விஷயங்களில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த அரசைக் குறை சொல்லித் தப்பிக்கக் கூடாது. கடந்த ஆட்சியில் உங்களால் முடியாவிட்டால், எங்களிடம் ஆட்சியை ஒபப்டைத்துவிடுங்கள் என்று பேசினார்கள். அதையேதான் இப்போது நாங்களும் சொல்கிறோம். உங்களால் முடியாவிட்டால் எங்களிடம் ஆட்சியைக் கொடுத்துவிடுங்கள்'' என்கிறார் காட்டமாக.

`பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடித்து நூலகமா?' தி.மு.க vs அ.தி.மு.க; யார் சொல்வது உண்மை?

அதிமுக-வின் இந்த விமர்சனங்கள் குறித்து, திமுக-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

``பண்டிகைகளுக்குப் பரிசுப் பணம் கொடுப்பதென்பது ஓர் அரசின் விருப்பத்தைப் பொறுத்தது. சட்டப்படியும் தார்மிகப்படியும் அது கட்டாயமில்லை. கடந்த காலங்களில், குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பண்டிகைகளுக்குப் பணம் கொடுங்கள் என திமுக சொன்னதில்லை. மழை, வெள்ளம், புயல், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில்தான் கொடுக்கச் சொன்னோம். அதை மாநில அரசிடம் மட்டுமல்ல, மத்திய அரசிடமும் கோரிக்கைகளாக முன்வைத்திருக்கிறோம். ஆனால், பொங்கலுக்குக் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. இது வீட்டிலிருந்து அப்படியே எடுத்துக் கொடுக்கும் விஷயமும் இல்லை. நிதி நிலை சரியாக இருந்திருந்தால் திமுக-வும் தற்போது கொடுத்திருக்கும்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

முதியோர் ஓய்வுத் திட்டம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களைத்தான் காரணம் சொல்லி நிறுத்த முடியாது. ஆனால், இந்த விஷயம் அப்படியல்ல. திமுக எந்த இடத்திலும், தேர்தலின்போதும் பொங்கலுக்கு 5,000, 10,000 தருகிறோம் என்று சொன்னதில்லை. ஆனால், கொரோனா நிவாரணமாகக் கொடுக்கிறோம் என்று சொன்ன தொகை உள்ளிட்ட பல விஷயங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். அதிமுக இந்த விஷயத்தில் நாங்கள் பொங்கலுக்குக் கொடுத்தோம் என சிம்பதியை உருவாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் விட்டுச் சென்ற நிதி நிலையால்தான் எங்களுக்கு விருப்பம் இருந்தாலும் கொடுக்க முடியாத சூழல் தற்போது இருக்கிறது'' என்கிறார் பதிலடியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு