Published:Updated:

டார்கெட் `தினகரன்’.. எடப்பாடி பழனிசாமி சசிகலாவைத் தவிர்ப்பதன் பின்னணி என்ன? #TNElection2021

எடப்பாடி  - சசிகலா
எடப்பாடி - சசிகலா

சசிகலா குறித்துப் பெரிதாக எதுவும் பேசாமல் எடப்பாடி தவிர்ப்பதை, அவரைக் கெத்தாக காட்டிக்கொள்ளும் யுக்தியாகப் பார்ப்பதா, இல்லை பதற்றத்தில், பயத்தில் அப்படி நடந்துகொள்வதாகப் பார்ப்பதா...மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

''கட்சியிலிருந்து 18 பேரைப் பிரித்து, ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, கட்சியைக் கைப்பற்றப் பார்த்தார் டி.டி.வி.தினகரன். அதை முறியடித்து அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டினோம்''

''தினகரன் பத்தாண்டுக் காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். இப்போது சதிவலை பின்னிக்கொண்டிருக்கிறார்''

''தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அ.தி.மு.க-வை இனி ஒருபோதும் உடைக்க முடியாது. உங்கள் கனவு பலிக்காது”

``தினகரனை நம்பிச் சென்ற 18 பேரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அவரை நம்பினால் நடுத்தெருதான்”

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகத்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து தினகரனுக்கு எதிராக பட்டாசாக வெடித்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சரி, சசிகலாவின் விடுதலைக்கு முன்பும் சரி தி.மு.கவையும், மு.க.ஸ்டாலினையும் மட்டுமே குறிவைத்துப் பிரசாரம் செய்துவந்த முதல்வர், சசிகலாவின் தமிழக வருகைக்குப் பிறகு தினகரன் பக்கம் பாயத் தொடங்கியிருக்கிறார். அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட வாகனத்தில் வந்ததுமுதல், இன்றளவும் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் நான் தான் என அ.தி.மு.க தலைமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவருபவர் சசிகலாதான்... ஆனால், சசிகலா குறித்துப் பெரிதாக எதுவும் பேசாமல் எடப்பாடி தவிர்ப்பதை, கெத்தாக தன்னைக் காட்டிக்கொள்ளும் யுக்தியாகப் பார்ப்பதா, இல்லை பதற்றத்தில், பயத்தில் அப்படி நடந்துகொள்வதாகப் பார்ப்பதா... மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

'' இரண்டும் இல்லை. சசிகலாவால் தனக்கு எந்த லாபமும் இல்லை என்பதாலேயே முதல்வர் அப்படி நடந்துகொள்கிறார். தன்னை ஒரு தலைவராக மேம்படுத்திக் கொள்ளும் வேலைகளையே அவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார். தன்னை மையப்படுத்தியே அரசியல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். சசிகலாவுக்கும் தினகரனுக்கு விழுந்த வாக்குகளை தனக்கு எதிரான வாக்குகளாகவே அவர் பார்க்கிறார். அந்த வாக்காளர்கள் ஒருபோதும் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒருபோதும் அது தனக்கான வாக்குகளாக மாறாது எனவும் நினைக்கிறார். ஜெயலலிதாவின் அ.தி.மு.கவும் கருணாநிதியின் தி.மு.கவும் செத்துவிட்டது. தற்போது தனக்கும் ஸ்டாலினுக்கும்தான் தலைவருக்கான போட்டி நடக்கிறது என நினைக்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

அதனால்தான் சசிகலா போன்றவர்களை ஓரம்கட்டினால்தான் தான் தலைவராக நிலைபெறமுடியும் என நினைக்கிறார். அதேபோல, சசிகலாவுடன் கூட்டு சேர்ந்தாலும், சசிகலாவுக்கு எதிராக தன்னை ஆதரித்த முத்தரையர், நாடார், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோரின் வாக்குகளை தன்னைவிட்டு தி.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் பக்கம் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறார். சசிகலாவால் தனக்கு அரசியல் இலாபமில்லை, சசிகலாவுடன் சேர்ந்தால் அது எலி- தவளை நட்பாக மாறிவிடும் என நினைக்கிறார். அ.தி.மு.க - அ.ம.மு.க ஆகிய கட்சிகள் இணைந்தால் தி.மு.கவுக்கு கடுமையான போட்டியை உருவாக்கமுடியும் என்று பொதுவாகச் சொல்வதை எடப்பாடி ஏற்கவில்லை'' என்கிறார் அவர்.

எஸ்.பி.லட்சுமணன் (மூத்த பத்திரிகையாளர்)

''எடப்பாடி நடந்துகொள்வதை இயல்பான துணிச்சலாக நான் பார்க்கவில்லை. பதற்றத்தின் வெளிப்பாடாக, பயம் அதிகமானதால் ஏற்பட்ட துணிச்சலாகவே நான் பார்க்கிறேன். சசிகலாவின் வருகைக்குப் பிறகு, அவரை வெறுமனே எடப்பாடி விமர்சித்திருந்தால்கூட நாம் அப்படிச் சொல்லமுடியாது. ஆனால், சசிகலா வருகிறார் என்றதும் வேகவேகமாக ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பூட்டுகிறார்கள். அதேபோல, எங்கே, தீபா, தீபக்குக்கு சட்டரீதியாக இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி போயஸ் கார்டன், வேதா நிலையத்தில், சசிகலா நுழைந்துவிடுவாரோ எனப் பயந்து அவசர அவசரமாக திறப்பு விழாவை நடத்தினார்கள். அந்த அவசரத்தில் தீபா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை மறந்துவிட்டார்கள். அதன்காரணமாக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி,அந்த இல்லத்தின் சாவி தற்போது, சென்னை கலெக்டரிடம் இருக்கிறது.

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

'தினகரன் தனிமரம், சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமில்லை' என ஒருபுறம் விமர்சித்துவிட்டு, மறுபுறம் அவரின் தமிழக வருகையின்போது, அவரின் காருக்குப் பின்னால் ஐந்து கார்களுக்கு மேல் வரக்கூடாது, ஐந்நூறு பேருக்கு மேல் இருந்தால் ஐம்பது பேர் சீருடையில் அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏன் விதிக்கவேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அ.தி.மு.க கொடியைக் கழற்றும் துணிச்சல், பயத்தில், பதற்றத்தில்தான் வருகிறது. தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார்கள். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை அரசுடமையாக்குவது சட்டப்படியான செயல்தான். ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு சசிகலா வருகையின்போது அதை ஏன் செய்யவேண்டும். அப்படியென்றால் சசிகலாவைப் பார்த்துப் பயப்படுகிறார்கள், பதற்றப்படுகிறார்கள் அவர் வருகின்ற செய்தி பரவக்கூடாது, இந்த செய்தி பரவவேண்டும் என நினைக்கிறார்கள்.

சசிகலாவை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சொத்துக்களை முடக்கி வருகிறார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் அவமானப்படுத்துவது ஜெயலலிதாவைத்தான். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா சொத்துக் குவித்த வழக்கு என்றுதான் மக்களின் நினைவுக்கு வரும். இவர்கள் ஜெயலலிதாவை உண்மையிலேயே மதிப்பதாக இருந்தால், சத்திமில்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இப்படி விளம்பரப்படுத்தியிருக்கக்கூடாது. இதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்'' என்கிறார் அவர்.

'அ.தி.மு.க - அ.ம.மு.க இணைந்தால் தென் மாவட்டங்களில் கணிசமான இடங்களைப் பெற்று தி.மு.கவுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுக்க முடியும்' எனச் சொல்லப்படும் நிலையில், எடப்பாடி அதை நிராகரிப்பதன் பின்னணி என்ன?

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

தராசு ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர்)

''எடப்பாடி நல்ல திட்டத்தோடு இருக்கிறார். அதனால்தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவர், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் என நூறு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். கிருஷ்ணகிரி டு கரூருக்கு இடைப்பட்ட பகுதிகளில்தான் அந்தத் தொகுதிகள் இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டால் இவற்றில் கணிசமான தொகுதிகளை வென்றுவிடலாம் என நம்புகிறார். அது ஆளும்கட்சியாக அமருவதற்குத்தான் போதாது. ஆனால், எதிர்க்கட்சியாக இருப்பதற்குப் போதும். அதேநேரம், கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்கும் என நினைக்கிறார். சசிகலாவின் வாக்குவங்கி தென்மாவட்டத்தில் இருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பை தென்மாவட்டத்தில் உள்ள, ஆர்.பி.உதயக்குமார், ஓ.பி.எஸ் போன்றவர்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என எடப்பாடி நினைக்கிறார்.

சசிகலாவை பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைந்தால் தி.மு.கவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும் என பொதுவாகத் தோன்றலாம். ஆனால், பத்து வருடம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி இயல்பாகவே கடுமையான போட்டியைக் கொடுக்க முடியாது என்பது எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும். எடப்பாடி எம்.ஜி.ஆராக இருந்தால் மட்டுமே தற்போது அவரால் ஜெயிக்க முடியும். வரும் தேர்தலில், தி.மு.க ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன. எடப்பாடி தரப்பு, ஐம்பது, அறுபது தொகுதிகளில் வெற்றிபெறுவதற்காக தங்களின் கவனத்தைச் செலுத்தி பணியாற்றி வருகிறார்கள்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

பா.ம.கவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அ.ம.மு.கவுடன் எந்த சமரசத்துக்கும் எடப்பாடி தயாராக இல்லை. ஏன், அ.ம.மு.கவுடன், அ.தி.மு.க கூட்டணி அமைப்பதற்குக் கூட வாய்ப்பில்லை. காரணம், கூட்டணி வைத்து, தென் மாவட்டங்களில் தினகரன் தரப்பு ஒரு 40 தொகுதிகளை வென்று, எடப்பாடி தரப்பு குறைவான தொகுதிகள் ஜெயித்துவிட்டால், கட்சி இயல்பாகவே தினகரன் தரப்புக்குச் சென்றுவிடும். அதனால், கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லை. தேர்தல் முடிந்தபிறகு வேண்டுமானால், எதுவும் நடக்கலாம்,ஆனால் தேர்தலுக்கு முன்பாக எந்த இணைப்புக்கும் சாத்தியமே இல்லை'' என்கிறார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு