``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
முகாமில் பணயக்கைதி நாடகத்தை நடத்திய அகுனாவினால் படர்ந்திருந்த பரபரப்பு ஒருவாறு ஓய்ந்தது. அகுனாவின் மனநிலை மற்றும் அவனது மருத்துவத் தேவைகள் அனைத்துக்கும் அப்பால், அவனை உயர்பாதுகாப்பு முகாமொன்றுக்கு மாற்றுவது என்று குடிவரவுத்துறை அமைச்சு அன்றைக்கே முடிவெடுத்தது.
அகுனா மறுத்தான். தனியாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ``அல்பா கம்பவுண்ட்” அறையிலிருந்து ஓலமிட்டான். சுவர் அதிரக்குழறி அழுதான். தனது அண்ணனைப் போல, விரைவில் தானும் செத்துவிடப்போவதாக அஞ்சினான்.
ஏகப்பட்ட முகாம் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையோடு அங்கு வந்த குடிவரவு அமைச்சின் அதிகாரிகள், அகுனாவுக்கு நிலமையை எடுத்துக்கூறினார்கள்.
குழந்தைகள், பெண்கள் வசிக்கும் இந்த முகாமில், பணயக்கைதியாக அரசு அதிகாரியைப் பிடித்துவைத்து, அச்சத்தை ஏற்படுத்திய நபரை வைத்துப் பாதுகாப்பது முடியாத காரியம் என்று, பணிவாக எடுத்துக்கூறினார்கள். சிறிது காலம், சிட்னியிலுள்ள உயர்பாதுகாப்பு அகதிகள் முகாமிலிருந்து மன நல மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு, மீண்டும் மெல்பேர்ன் முகாமுக்குத் திரும்பலாம் என்றார்கள்.
அகுனா முற்றிலும் குலைந்துபோயிருந்தான். அண்ணனின் இறப்பினை ஜீரணிக்கமுடியாத நிலையில் உடைந்த கிடக்கும் தன்னிடம், குடிவரவு அமைச்சும் முகாம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் எதை எதையோ எல்லாம் பேசுகிறார்களே என்று விறைத்துக்கிடந்தான். தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு எந்தப் பரிவையும் காண்பிக்காத அதிகாரத்தரப்பு,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனது சக அகதியொருவனை அழைத்து – தன் வலி தெரிந்த ஒருவனின் தோளில் சாய்ந்து – அழுதால் தன் துயருக்குச் சற்று ஆறுதலாயிருக்கும் போலிருந்தது.
``நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்கிறேன். நீதனை மாத்திரம் ஒருதடவை பார்க்க அனுமதிப்பீர்களா”
கண்ணீர் வடிந்த கோடுகளோடு அகுனாவின் கன்னங்கள் நம்பிக்கை இழந்து துடித்தது. ஆனால், அந்த அறிகுறிகள் அனைத்தும் அவனது மன நலம் சார்ந்த பிரச்னையென்றே குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகள் நம்பினார்கள்.
அறைக்குள் அழைத்து வரப்பட்ட நீதனும் அகுனாவுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை, ஆறு சோடி அதிகாரிகளின் கண்களும் ஒரு கமராவும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தன.

தளர்ந்தபடி எழுந்த அகுனா, நீதனை இழுத்து அணைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான். சகலதையும் இழந்து வெற்றுடம்பாய் கிடந்த அகுனாவுக்கு, நீதனின் அணைப்பு அண்ணனின் அருகாமையை அள்ளி வார்த்ததுபோலிருந்தது.
நீதனும் அகுனாவும் அல்பா கம்பவுண்டிலிருப்பவர்கள் என்பதைத் தாண்டி, இருவருக்குள்ளுமிருப்பது அகதிகள் என்ற உறவு மாத்திரம்தானே தவிர, வேறெதுவும் இல்லை. காலையில் தொலைக்காட்சியைப் பார்த்து அழுதுகொண்டிருக்கும் அகுனாவின் தோளில் தட்டி, நீதன் தேனீர் கொடுப்பான். சொல்லப்போனால், இருவரின் வாழ்க்கையையும் பற்றி இருவருக்குமே முழுதாகத் தெரியாது. இருந்தாலும், சொல்லத் தெரியாத பிணைப்பொன்று அவர்களுக்குள் இறுக்கமாக இருந்தது.
ஆதரவற்றுக் கிடக்கும் இந்த முகாமுக்குள் ஒவ்வொரு அகதியும் அவ்வாறானதொரு உறவினை, குறைந்தது யாராவது ஒரு சக அகதியிடமாவது எதிர்பார்க்கிறான். அதுவே, இந்த முகாமுக்குள் அவர்கள் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் கண் வழிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅன்றைக்கு அகுனா, தன் தோள் மீது சிந்திய கண்ணீரும் அந்த அறை அதிர அழுத சத்தமும் நீதனுக்குள் பல மணிநேரம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. தன்னை யாரென்றே தெரியாதவனின் நம்பிக்கையை இவ்வளவு எடையில் சுமந்திருக்கிறோம் என்பதை எண்ணும்போது,
தனது வாழ்வு, தான் உணராத தடத்தில் புரண்டுகொள்கிறதா என்ற சந்தேகம் சுரந்தது. தனது பிஞ்சுக் குழந்தையின் நினைவுகளையெல்லாம்கூட இந்த முகாம் கத்தரித்துவிடுமோ என்ற பீதி அவனைச் சூழ்ந்தது.
அனீஸா அவன் முன்தோன்றி ஆறுதல் சொல்வதுபோல, அவள் புன்னகையை உணர்ந்தான். அறைக்குத் திரும்பிய நீதன் அவள் படத்தை எடுத்து நெஞ்சோடு வைத்து அழுதான்.
ஒருபுறம், ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறை, மறுபுறம், முகாமில் தனிவாழ்வு, இன்னொரு புறம், வெளிக்காண்பிக்கமுடியாத குடும்பத்தின் பிரிவு என்று நீதன் ஒருகணம் கண்மூடிப்பார்த்தான். ஜகார்த்தா கடலில், மூழ்க முதல் தள்ளாடிய படகின் நினைவுகளாய் எண்ணங்கள் புரண்டன. தானும் அகுனாபோல் மாறிவிடுவேனோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருகணம் தலைகாட்டியபோது, அனீஸைவை நினைத்துக்கொண்டான். ஒருநாள் ஓடிவந்து அணைக்கப்போகும் தன் குழந்தைகளின் புன்னகையை எண்ணிப்பார்த்தான். கடல் கடந்து மிதக்கும் நம்பிக்கையின் கீற்றுக்களை இழுத்து இழுத்து மனதில் ஒட்டிக்கொண்டான்.
அடுத்தநாள் அகுனா இல்லாத முகாம் விடிந்ததும், அல்பா கம்பவுண்டில் முதல்நாள் நடைபெற்ற சம்பவங்கள் பற்றித்தான் பேச்சாக இருந்தது. மதியம் சாப்பாட்டு மண்டபம் அகுனாவின் புதினங்களால் நிறைந்திருந்தது.
ஒரு சில அகதிகள், பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த உத்தியோகத்தர்களிடமே நேரடியாகப்போய் கேட்டார்கள். ``முகாமில் அசம்பாவிதம் விளைவித்தால், இங்கிருந்து உயர்பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பப்படுவீர்கள்” என்று உத்தியோகத்தர்கள் இறுமாப்பான பதிலைச் சொன்னார்கள். அகதிகள் புன்னகையோடு கடந்துபோனார்கள்.
அன்றுமாலையே - இவ்வளவு விரைவாக – அடுத்த சம்பவத்துக்கு முகாம் தயாராகியிருக்கத் தேவையில்லை. என்றாலும், அல்பா கம்பவுண்டிலிருந்த கடவுளுக்கு வந்த கோபம், அதனைச் சாத்தியமாக்கியிருந்தது.
அவனொரு ரொஹிங்கிய அகதி. பர்மாவில் மதவெறியர்களினால் சூறையாடப்பட்ட ரக்கீன் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். பர்மாவின் வறிய பிரதேசங்களில் ஒன்றான ரக்கீனில், கடவுள் தனது இரண்டு சகோதரிகளுடனும் தகப்பனுடனும் வசித்து வந்தான். தாய் சிறுவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள்.
தேங்காய் வியாபாரம், இவர்களது குடும்பத்துக்கு பிரதான வரும்படியாக அமைந்திருந்தது.

பர்மாவில் நெடுங்காலமாகப் புகைந்துகொண்டிருந்த பௌத்த சக்திகளின், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறியாட்டம், இரண்டாயிரங்களுக்குப் பிறகு உச்சத்தை அடைந்தது. இனவாதத் தேசப்பற்று இயக்கம் ஒன்றை ஆரம்பித்த பிக்கு ஒருவர், இஸ்லாமிய மக்களை நாட்டைவிட்டுத் துரத்தவேண்டும் என்ற கொள்கையோடு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார். பெரும் எண்ணிக்கையான இளைஞர்களை தனது அமைப்புக்குத் திரட்டி, அவர்கள் அனைவரும் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அறிவித்துப் பெரும் கட்டமைப்பை உருவாக்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அன்று தேங்காய் வியாபாரத்துக்காக தலைநகர், சித்துவி பக்கமாகத் தனது தகப்பனோடு போன, கடவுளின் மூத்த சகோதரியை வரும் வழியில் பிக்குகள் குழுவொன்று கைது செய்தது. அவர்கள் கைதுசெய்யப்பட்ட வயல் கரையோரமாகப் பொலீஸ் வாகனமொன்று பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள், நடைபெற்றுக்கொண்டிருந்த சம்பவத்தைத் திரும்பியும் பார்க்கவில்லை.

எந்த இடத்திற்கும் பர்கா அணியாமல் போய் வருவதையே வழக்கமாகக் கொண்டிருந்த கடவுளின் சகோதரி, அன்றைக்கும்கூட வெகு சாதாரணமாகத்தான் உடையணிந்து தகப்பனோடு போயிருந்தாள்.
விற்றுத்தீர்ந்த தேங்காய் கரப்பு வண்டில், கடவுளின் தந்தையாரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் கட்டியிருந்தது. பிக்குகள் கூட்டமாக மறித்தபோது, சற்றுத் தடம்புரண்டு வயல்கரைப் பக்கமாகச் சரிந்து நின்றது. இரண்டு பிக்குகள், கடவுளின் தகப்பனை விசாரித்துக்கொண்டிருந்தபோது,
ஆளளவுக்கு வளர்ந்து கதிர்முற்றியிருந்த வயல் அச்சத்தோடு காற்றுக்கு அசைந்தாடிக்கொண்டிருந்தது.
கடவுளின் தகப்பனார், தானும் மகளுடன் வருவதாக உரக்கச்சொன்னார். எந்தப் பதிலும் சொல்லாமலேயே பிக்கு ஒருவன் ஓங்கி அறைந்ததில், அவர் தேங்காய் கரப்பு வண்டிலுக்குள் மூர்ச்சையுற்று விழுந்தார்.
நகரத்துக்குப் போன தகப்பனையும் சகோதரியையும் காணவில்லை என்று இரண்டு நாட்களாகத் தேடித்திருந்த கடவுள், பொலீஸாரிடம் சென்று முறைப்பாடு செய்வதற்கு அச்சத்தில், அயலவர்களிடம் தகவல் சொன்னான். இரண்டு நாட்களுக்கு முன்னர், அவர்களை வயல் கரையோரமாகப் பிக்குகள் நிறுத்திவைத்து விசாரித்ததைச் சிலர் கண்டதாகச் சொன்னார்கள்.
கடவுளின் இளைய சகோதரி, வீட்டுச் சுவரில் தலையை அடித்து அடித்துக் குழறினாள். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்ற அச்சத்தில் அவளுக்கும் கடவுளுக்கும் உடம்பெல்லாம் பதறியது.
தேங்காய் மட்டைகள்போட்டு நிரப்பப்பட்ட வயல் கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்டனர்.
இறுதி நிகழ்வு எதுவும் செய்யாமல் சடலங்களைப் புதைத்துவிடும்படி கடவுளின் அயலவர்கள் ஆலோசனை சொன்னார்கள். இன்னொரு பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு, இறுதி நிகழ்வினைச் செய்து, வீணாகப் பிக்குகளின் கண்களில் படவேண்டாம் என்று ஊர் பெரியவர்கள் லாந்தர்களோடு வந்து, இரவில் யோசனை சொல்லிவிட்டுப் போனார்கள்.
இருளும் துயரும் பசியும் எப்போதும் நிறைந்துகிடக்கும் அந்த வீட்டில், இரண்டு நாட்களாக அச்சத்தின் நாற்றமே குமட்டிக்கொண்டிருந்தது. அதனை ஜீரணிப்பதற்கு ஒருவர் போதுமென்று நினைத்தாளோ என்னவோ? ஒருநாள் காலை, சமையலறைத் தாழ்வாரத்தில் கடவுளின் சகோதரியின் சுருக்கிட்டுத் தொங்கிய சடலத்தை ஒப்பாரி வைத்தபடி அவிழ்த்து இறக்கினார்கள் அயலவர்கள்.
கடவுளுக்குக் கண்ணீர் வரவில்லை.
ஊரின் அடுத்த முனையிலிருந்த மையத்தில் சகோதரியை அடக்கம் செய்வது என்று கடவுள் முடிவெடுத்தான். இறுதி நிகழ்வுக்கு மதப்பெரியார்கள் வந்தார்கள். அயலவர்கள் பெரும் எண்ணிக்கையில் தூர இடங்களிலிருந்தும் வந்து சேர்ந்தார்கள். சகோதரியின் சடலத்தோடு, வைக்கோல் அடைத்த இரண்டு பொம்மைச் சடலங்களுக்கும் மதச் சடங்குகளைச் செய்வித்தான். ஒன்றரை மணிநேரம் சுமந்து சென்று சிதைமூட்டிய, இறுதிச்சடங்கினை சில பொலீஸ் ஜீப்களிலிருந்து பிக்குகள் பார்த்துக்கொண்டிருந்ததை ஊரே கவனித்தது. இதனைக் கவனித்த பலர், இறுதி ஊர்வலத்தை நிறைவுசெய்யாமலேயே அரை வழியில் கழன்றுவிட்டிருந்தனர். முதியவர்கள் சிலர் மாத்திரமே மையவாடிவரைக்கும் வந்தனர்.

அன்றிரவு கடவுளின் வீட்டுப்பக்கம் யாரும் போகவில்லை. அந்த வீடு அயலவர்கள் எல்லோருக்கும் தீராத அச்சத்தை உமிழ்ந்தபடி தெரிந்தது.
கடவுளுக்குக் களைப்பிருக்கவில்லை. கண்ணீரும் வரவில்லை.
வீட்டின் பின்வளவிலிருந்த தேங்காய்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்தான். அலவாங்கு, கத்தி, கோடரிகள் அனைத்தையும் பின் கிணற்றடியில் கொண்டுபோய் தொட்டியில் போட்டுக் கழுவினான். அவனது தலைக்கு மேல் அலைக்கழிந்தபடியிருந்த பின்வளவுத் தென்னங்காற்று, எதையோ ஊகித்துவிட்டதுபோல ஓலமிட்டது.
தேங்காய்கள் குவிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் அலவாங்குகளைக் கொண்டு வந்து வரிசையாகத் தரையில் குத்தினான். ஒரேயொரு தேங்காயை உரித்து, உடைத்து நீரை அண்ணாந்து வாயில் ஊற்றினான்.
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. இருள் தனக்காக விலகிப் பாதை காட்டுவதுபோன்ற பேரொளி, தூரத்து வயல்களில் கோடுகளாய் தெரிந்தது.
(தொடரும்)