Published:Updated:

`நேரு, ஸ்டாலின் புகழாரம்; மத்திய அமைச்சர் கைது!' - சிவசேனா, பாஜக விரிசல் அதிகரிக்கிறதா?!

சிவசேனா - பா.ஜ.க

ஒரே கொள்கை... 30 ஆண்டுகள் கூட்டணி என மகாராஷ்டிர அரசியலில் ஒற்றுமையாக இருந்த பாஜக-வும் சிவசேனாவும், தற்போது எதிர் எதிர் துருவங்களாக நிற்கின்றன. பலமுறை கருத்து வேறுபாட்டால் இவ்விரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொண்டிருந்தாலும், பிறகு சில காலத்திலேயே ஒன்றிணைந்திருக்கின்றன!

`நேரு, ஸ்டாலின் புகழாரம்; மத்திய அமைச்சர் கைது!' - சிவசேனா, பாஜக விரிசல் அதிகரிக்கிறதா?!

ஒரே கொள்கை... 30 ஆண்டுகள் கூட்டணி என மகாராஷ்டிர அரசியலில் ஒற்றுமையாக இருந்த பாஜக-வும் சிவசேனாவும், தற்போது எதிர் எதிர் துருவங்களாக நிற்கின்றன. பலமுறை கருத்து வேறுபாட்டால் இவ்விரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொண்டிருந்தாலும், பிறகு சில காலத்திலேயே ஒன்றிணைந்திருக்கின்றன!

Published:Updated:
சிவசேனா - பா.ஜ.க

30 ஆண்டுகள் கூட்டணியிலிருந்த சிவசேனாவும் பாஜக-வும், தற்போது பரம எதிரிகளைப்போல மோதிக்கொள்கின்றன. கிட்டத்தட்ட ஒரே கொள்கைகளைக்கொண்ட இவ்விரு கட்சிகளும், 1989-லிருந்து 2019 வரை கூட்டணியிலிருந்தன. சகோதரத்துவத்தோடு இயங்கிவந்த இந்த இரு கட்சிகளும், கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களில் மோதிக்கொண்டு, இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பிவருகின்றன.

மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2019 சட்டமன்றத் தேர்தலில், பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிகண்டன. வெற்றிக்குப் பின்னர் பேசிய பட்னாவிஸ், ``இரண்டரை வருடம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தருவதாக நாங்கள் சொல்லவேயில்லை'' என்றார். `ஆட்சிப் பொறுப்பில் சம பங்கு என்று சொல்லிவிட்டு, இப்போது பேச்சை மாற்றுகிறார்கள்' என்று கொந்தளித்தனர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பாஜக-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனா. அதுமட்டுமல்லாமல் தங்கள் கட்சியோடு கருத்தியல் முரண்பாடுகொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நகரம் அமைந்திருக்கும் மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்த பாஜக-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது சிவசேனா.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடங்கி பாலிவுட் நடிகை கங்கனாவுடனான பிரச்னை, சிவசேனா கட்சியினருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் எனப் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் மோதிக்கொண்டன. இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்குப் பிரச்னைகள் வளர்ந்தன.

ஒரு கட்டத்தில், சண்டைகள் கொஞ்சம் தணிய, சிவசேனா கட்சியின் நாளேடான `சாம்னா'வில் ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில் காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், `காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் பாஜக-வுடன் சேர முயல்கிறதா சிவசேனா?' என்பது போன்ற சந்தேகங்கள் கிளம்பின. ஆனால், சமீபத்தில் மத்திய பாஜக அமைச்சர் நாராயண் ரானேவைக் கைதுசெய்து, அந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது சிவசேனா அரசு.

உத்தவ் தாக்ரே- ஸ்டாலின்
உத்தவ் தாக்ரே- ஸ்டாலின்

தொடர்ந்து, சுதந்திர தின போஸ்டர் விவகாரத்தில் பாஜக-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது சிவசேனா. இது தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் `சாம்னா'வில் எழுதியிருக்கும் கட்டுரையில், ``மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஜவஹர்லால் நேரு, மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங்கள் விடுபட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள், சுதந்திரப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவரான நேருவை ஒதுக்கிவைத்திருக்கின்றனர். இன்று பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக மத்திய அரசு விற்க முயலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நேருவால் உருவாக்கப்பட்டவைதான். நேருவை இந்த அளவுக்கு ஏன் வெறுக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருந்தன. அந்தப் படங்களை அகற்றாமல் அப்படியே மாணவர்களுக்குக் கொடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால், நீங்களோ நேருவின் படத்தை நீக்குகிறீர்கள். நாட்டை உருவாக்கியதில் நேரு, இந்திரா காந்தியின் பங்களிப்பை உங்களால் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்று வில்லன்களாகவே கருதப்படுவர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`சாம்னா' கட்டுரையில், நேருவையும் இந்திராவையும் புகழ்ந்து எழுதியிருப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினையும் பாராட்டி எழுதியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றது.

ஒரே கொள்கையோடு ஒற்றுமையாகப் பயணித்த சிவசேனாவும், பாஜக-வும் மீண்டும் இணைய வாய்ப்புகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு சில பதில்களைச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ``சாம்னாவில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் சிவசேனாவின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலேயே இருக்கும். சமீபத்திய சாம்னா கட்டுரை ஒன்றில், காங்கிரஸைப் புகழ்ந்து, பாஜக-வை விமர்சித்திருக்கிறது சிவசேனா. அதோடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினையும் பாராட்டியிருக்கிறது. முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை `உண்மையான பெண் சிங்கம்' எனப் புகழ்ந்து, பாஜக-வை விமர்சித்திருந்தது சிவசேனா. இந்தியாவில், பாஜக-வுக்கு எதிராக நிற்கும் கட்சிகளைத் தொடர்ந்து பாராட்டி, `நாங்களும் பாஜக-வுக்கு எதிரானவர்களே' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துவருகிறது சிவசேனா. பாஜக-வை எதிர்த்து நிற்க முடிவு செய்துவிட்டதால்தான் இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது அந்தக் கட்சி.

30 ஆண்டுகளாகப் பிரிவதும் சேருவதுமாக பாஜக-வும் சிவசேனாவும் கூட்டணியிலிருந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளும் ஒன்றாக இருந்த காரணத்தால், சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட்டணியில் முற்றிலுமாக பிரிவு ஏற்படாமல் இருந்துவந்தது. ஆனால், 2019-க்குப் பிறகான மோதல்களைவைத்துப் பார்க்கையில், இவ்விரண்டு கட்சிகளும் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பதுபோலவே தோன்றுகிறது.

சிவசேனா, உத்தவ் தாக்கரே
சிவசேனா, உத்தவ் தாக்கரே

காரணம், சிவசேனாவுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, பின்னர் பாஜக பின்வாங்கியதைப் பச்சை துரோகமாகப் பார்க்கிறது சிவசேனா. அதுமட்டுமல்லாமல் மாநிலக் கட்சிகளின் உரிமைகளை எப்போதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காத கட்சியாகவே கடந்த காலங்களில் சிவசேனா இருந்திருக்கிறது. அப்படியிருக்கையில், மகாராஷ்டிராவின் மாநிலக் கட்சியான தங்களை ஒழித்துக்கட்டும் நோக்கோடு பாஜக செயல்பட்டுவருவதாகக் கருதுகிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

அதேநேரத்தில் பாஜக-வும், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்குக் காரணம் சிவசேனாதான் என்ற கோபத்தில் இருக்கிறது. மேலும், தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரை சிவசேனா அரசு கைதுசெய்தது, பாஜக-வினரைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே கொள்கைகளைப் பின்பற்றினாலும், தற்போது விரிசல் பெரிதாகிவிட்டது. பாஜக-வை எதிர்ப்பதற்காக, சில கொள்கைகளைக்கூட சிவசேனா சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறது என்கின்றன மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்கள். எனவே, இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.