Published:Updated:

ஜெயலலிதா அழைத்து வந்த `ஜெயமால்யதா'; அசாம் போகிறதா ஆண்டாள் கோயில் யானை? துன்புறுத்தல் காரணமா?

ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று திடீரென வந்திறங்கிய அசாம் மாநில அதிகாரிகள் குழுவினர் யானை ஜெயமால்யதாவை ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதா அழைத்து வந்த `ஜெயமால்யதா'; அசாம் போகிறதா ஆண்டாள் கோயில் யானை? துன்புறுத்தல் காரணமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று திடீரென வந்திறங்கிய அசாம் மாநில அதிகாரிகள் குழுவினர் யானை ஜெயமால்யதாவை ஆய்வு செய்தனர்.

Published:Updated:
ஜெயமால்யதா
எட்டுவழிச்சாலை, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எனப் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் அரசியல் களத்தில் அடுத்ததாக எண்ட்ரி கொடுத்துள்ளது அறநிலையத்துறை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை அசாம் மாநில அதிகாரிகள் ஆய்வு செய்ததால் வந்துள்ளது தமிழக அரசுக்கான அடுத்த சோதனை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புத்துணர்வு முகாமில் யானை தாக்கப்பட்டது, கோயில் அலுவலகத்துக்குள் ஊழியர் தாக்கப்பட்டது எனப் பல்வேறு சர்ச்சைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலைச் சுற்றி வருகின்றன. இதில் யானை ஜெயமால்யதா, பாகன்களால் தாக்கப்படும் வீடியோவுக்கு மட்டும் இன்னமும் காரசாரம் குறையாமல் ஆக்ஷன்... ரியாக்ஷன்கள்.. நடப்பது பரபரப்பாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வழங்கப்பட்டதுதான் பெண் யானை ஜெயமால்யதா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5 வயதுக் குட்டியாக, ஒப்பந்த அடிப்படையில் அசாம் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்ட யானை ஜெயமால்யதாவுக்கு புதிய பட்டாடை, நெற்றிப்பட்டம், சிறப்பு பூஜைகள் கொடுத்து வரவேற்கப்பட்டது. தினசரி காலையில், ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்துவிட்டு திருவீதி உலா புறப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திவந்த ஜெயமால்யதாவுக்கு 2021தான் சோதனை தொடங்கியது.

யானை
யானை

அந்த ஆண்டில் பிப்ரவரி 8-ம் தேதி கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் குதூகலமாய் கலந்துக்கொண்ட யானை ஜெயமால்யதா, பாகன்களால் சங்கிலியால் தாக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "நாங்கள் யானையைக் குழந்தை போன்று வளர்க்கிறோம். சொல் பேச்சைக் கேட்காததால், இப்படி அடிக்கநேர்ந்தது" என பாகன்கள் தரப்பில் அலட்சியமான பதிலும் தரப்பட்டது.

இதற்கு வந்த தொடர் எதிர்ப்புகளாலும், விலங்கு நல அமைப்புகளின் கண்டனத்தாலும் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் ஆகியோரை கோயில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள் 2011 கீழ் (வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 64 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 51ன்கீழ்) கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் கோவை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ஜெயமால்யதா
ஜெயமால்யதா

ஆனாலும், கடந்த மாதங்களில் யானை ஜெயமால்யதா தாக்கப்படுவதாகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும், கோயிலுக்கு வழங்கப்பட்ட யானை கோயில் மண்டபத்தில் அல்லாமல், 10 லட்ச ரூபாய் செலவில் கிருஷ்ணன் கோயிலில் தனியார் மண்டபத்தில் பெரிய மின்விசிறி, ஷவர்கள் என நவீன வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகின. மேலும், வளர்ப்பு யானை விதிகளின் கீழ் புதுப்பிக்கப்படவேண்டிய உரிமமும் கடந்த சில ஆண்டுகளாகப் புதுப்பிக்கபடாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகப் பரவிய தகவல்களும் இதற்கு வலுசேர்த்தன.

இந்த விவகாரங்கள் குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் கோயில் நிர்வாகத்துக்குப் பெரும் குடைச்சலையே கொடுத்து வந்தது.

இதற்கிடையே, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை தாக்கப்படுவது தொடர்பாக பீட்டா அமைப்பினர் போலீஸில் கொடுத்த புகாரின்படி, கடந்த ஜூலை மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேவேளை, இந்தவிவகாரம் அசாம் மாநில அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, உரிமம் ரத்தான நிலையில் தங்கள் அரசால் வழங்கப்பட்ட யானையைத் திரும்ப பெற்றுக்கொள்ளும் விதமாக யானையின் தற்போதைய நிலைக்குறித்து ஆய்வு நடத்திட அசாம் மாநில அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஆண்டாள் கோயில்
ஆண்டாள் கோயில்

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று திடீரென வந்திறங்கிய அசாம் மாநில அதிகாரிகள் குழுவினர் யானை ஜெயமால்யதாவை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப் பணிகள் மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் திலீப்குமார் மற்றும் கால்நடை மருத்துவக் குழு, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. ஆய்வை தொடர்ந்து, அசாம் மாநில அதிகாரிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண முயல்வதாகச் சொல்லப்படுகிறது.

யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் பூட்டிய கோயிலுக்குள் நடத்தப்பட்ட ஆய்வும், அசாம் மாநில அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்டவை சந்தேகங்களைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து விளக்கம்பெற தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்புக்கொண்டு பேசினோம். "யானை ஜெயமால்யதா விவகாரம் குறித்து துறைரீதியாக தனியே ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் பிறகே எதையும் சொல்ல முடியும்" என்று‌ முடித்துக்கொண்டார்.