Published:Updated:

'நாம் திராவிடர்கள்'...13 கோடிக்குக் கணக்கு... ட்விட்டர் ஸ்பேசஸில் எஸ்.வி.சேகர் உரையாடல்!

நடிகரும் பா.ஜ.க உறுப்பினருமான எஸ்.வி.சேகரும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அது க்ளோஸுடு குரூப் என அவரே உரையாடலின் நடுவே சொல்லவும் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ட்விட்டரில் க்ளோஸுடு குரூப் என நினைத்து, பா.ஜ.க ஆதரவாளர்களுக்கிடையில் நடந்த உரையாடல் ஒன்று, ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. லாக்டௌனில் கன்டென்டுக்காகக் காத்திருந்த நெட்டிசன்களுக்கு இது, வெறும் வாய்க்குப் போடப்பட்ட அவலாக மாறியிருக்கிறது.

கொரோனா காலகட்டம் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்த, ஜூம், மீட் போன்ற செயலிகளைப்போல, ட்விட்டரிலும் ஸ்பேசஸ் (Spaces) எனும் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஜூம் போன்ற செயலிகளில் வீடியோ மற்றும் ஆடியோ ஆகிய இரண்டு வசதிகளும் இருக்கும். ஆனால், ஸ்பேசஸில் ஆடியோ வசதி மட்டுமே இருக்கும். அதாவது, செல்போனில் கான்ஃபிரன்ஸ் காலில் பேசிக்கொள்வதுபோல. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கலாம். ஒருவர் ஹோஸ்ட் செய்ய, பத்து பேர் பேச்சாளர்களாகப் பங்கேற்கலாம். மற்றவர்கள் கவனிக்க மட்டுமே முடியும். ஏறக்குறைய டிஜிட்டல் மேடை என ஸ்பேசஸை நாம் வர்ணிக்க முடியும். சமீபகாலமாக இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்தி ஏராளமான விவாதங்கள் நடந்தன.

Twitter | ட்விட்டர்
Twitter | ட்விட்டர்

இளையராஜா திரையுலகுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி ட்விட்டர் பிரபலம் ஒருவர் அதைக் கொண்டாடும் விதமாக ஸ்பேசஸ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதேபோல, எழுத்தாளர், கி.ரா-வின் மறைவையொட்டி ஆனந்த விகடன் சார்பாக அவருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு பிரபலங்கள் பங்கேற்க நடத்தப்பட்டது. ஸ்பேசஸில் கொரோனா குறித்தும் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில், தேர்தல் முடிவுகள் குறித்தும் பல விவாதங்கள் நடந்தன. அந்தவகையில், தற்போது, பா.ஜ.க ஆதரவாளர்களிடையே நடந்த உரையாடல்தான் சமூக வலைதளங்களில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. தமிழச்சி என்கிற நபர் ஹோஸ்ட் செய்த அந்த உரையாடலில் பலர் உரையாடுகிறார்கள். அதில் நடிகரும், பா.ஜ.க உறுப்பினருமான எஸ்.வி.சேகரும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். `அது க்ளோஸுடு குரூப்’ என அவரே உரையாடலின் நடுவே சொல்லவும் செய்திருக்கிறார்.

அந்த உரையாடலில் எஸ்.வி.சேகர் பேசும்போது, '' நாம் இந்துக்களாக ஒண்ணு சேர முடியாது. வேல் வேல் வெற்றிவேல்னு போனா ஜெயிச்சுற முடியும்னு நினைச்சா எப்படி முடியும்... ஒருத்தர் வேல் வேல் வெற்றிவேல்னு சொன்னா, இன்னொருத்தர் 'ஓம் நமச்சிவாய' சொல்லுவார். இன்னொருத்தர் 'ஓம் நமோ நாராயணா' சொல்லுவாங்க. பார்த்தசாரதி கோயிலுக்குப் போறவங்க, கபாலி கோயிலுக்கே வர மாட்டாங்க. இன்னும் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், வீரப்பசாமின்னு எத்தனையோ சாமி இருக்கு. வேல் யாத்திரைக்கு பதிலா, இறை நம்பிக்கை யாத்திரைன்னு கடவுள் நம்பிக்கை உள்ளவங்களை ஒண்ணு சேர்த்திருக்கணும். எவ்வளவோ மிஸ் பண்ணிட்டோம்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

மோடியைக் கூப்பிட்டு, `வேல் வேல் வெற்றிவேல்...’ சொல்ல வைக்கிறோம். ராசிபுரத்துக்கு வரச் சொல்றோம். உலகமே நிமிர்ந்து பார்க்கிற பிரதமரைக் கூட்டிட்டு வந்துட்டு, மோடியே வந்தாலும் தோற்கடிப்பேன்னு சொல்ற அளவுக்கா பண்ணுறது... மோடி போட்டோவை பி.ஜே.பி வேட்பாளர்களே பிரசார வாகனத்துல வைக்கலை. நான் வேட்பாளராக இருந்து எனக்கு அப்படிக் கொடுத்திருந்தா நான் வேனைவிட்டு கீழே இறங்கியிருப்பேன். மோடி போட்டோ போட்டு நான் ஜெயிச்சா ஜெயிக்கிறேன். இல்லையா அப்படிப்பட்ட வெற்றியே எனக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 13 கோடி ரூபா கொடுத்திருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன். இப்போ தோத்துப் போனவங்களும், ஜெயிச்சவங்களும் ஒழுங்கா கட்சிக்குக் கணக்கு கொடுத்திருக்காங்களா. கொடுக்கணும் இல்லையா! நாமதான் உண்மையான திராவிடர்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லோரும் திராவிடர்கள்தான். நாம திராவிடர்களைப் பிரிச்சுப் பார்க்க வேண்டாம். நாம நேர்மையான திராவிடர்களா இருப்போம். முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். நான் ஆரியன், திராவிடன் இல்லைன்னு பிரிச்சுப் பார்த்தா எதுவும் பண்ண முடியாது.

எஸ்.வி.சேகர் - உதயநிதி ஸ்டாலின்
எஸ்.வி.சேகர் - உதயநிதி ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கு மோடி ஐடியா கொடுக்கலைன்னா அனுமதி வாங்கியிருக்க முடியுமா? தமிழ்நாட்ல, இந்தியாவுல நடந்த எந்த ஊழலுக்கும் இன்னும் தண்டனை கிடைக்கலை. அதனால பா.ஜ.க மேல சந்தேகப்படுறாங்க. நாம என்னைக்கு முழிச்சுக்கப் போறோம். நான் முருகன் மேல, கேசவ விநாயகம் மேல புகார் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடுமா... கமலாயத்துக்குள்ளேயே கட்சியை நடத்தணும்னா அது ஃபைனான்ஸ் கம்பெனியா இருந்தாத்தான் முடியும். அப்போதான் பணம் தேவைப்படுறவன் நம்மளைத் தேடி வருவான். இன்னிய வரைக்கும் பி.ஜே.பி மக்கள் மத்தியில போய்ச் சேரவே இல்லை. அதைச் சரி பண்ணாத வரைக்கும், மோடி மத்த ஊருல ஜெயிச்சா இங்க லட்டு கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கலாம். அவ்வளவுதான்'' என்பதாக அந்த உரையாடல் முடிகிறது.

``தெரியாமல் ஃபார்வேர்டு செய்ய எஸ்.வி.சேகர் என்ன எழுதப் படிக்கத் தெரியாதவரா?” -  நீதிபதி கேள்வி

இது குறித்து எஸ்.வி.சேகரிடம் பேசினோம்.

''பா.ஜ.க-வில் நான் இன்னும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து கட்சியில் என்னிடம் விசாரணை நடத்தினால் நான் அங்கு பதில் சொல்லிக்கொள்வேன்'' என்றவர், தொடர்ந்து பேசும்போது, ''ட்விட்டர் ஸ்பேசிஸில் என் முதல் உரையாடல் அதுதான். க்ளோஸுடு குரூப் என நினைத்துப் பேசிவிட்டேன். 30 நிமிடங்களுக்கு மேலாகப் பேசியதில் சில விஷயங்களை மட்டும் கட் செய்து பரப்பி வருகிறார்கள். 3 கோடிக்குப் பதிலாக 13 கோடி என்று சொல்லிவிட்டேன். அதோடு வேட்பாளர் 13 கோடி செலவழித்தார் என்றும் நான் சொல்லவில்லை. வேறு ஏதேனும் விஷயத்துக்காகக்கூட வாங்கியிருக்கலாம். அதுவும் நான் கேள்விப்பட்டேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். நல்ல நோக்கத்துக்காக, தனிப்பட்ட முறையில் நான் பேசிய சில விஷயங்களை கட் செய்து போடும்போது அது தவறாகத் தெரிகிறது. நான் யாருக்கும் எதிராகப் பேசவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியும் பேசவில்லை.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

அதில் பேசிய யாரும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிடையாது. பலர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஆனால், மோடியின் ஆதரவாளர்கள், அவரின் கொள்கைகள் ஜெயிக்க வேண்டும் என நினைப்பவர்கள். நான்கூட கட்சியில் இருக்கிறேன் என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் மோடிக்கும் மட்டும்தான் அது தெரியும். என்னை பா.ஜ.க-வில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதையும் பெரிதாக்க சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் எடுபடவில்லை. தி.மு.க-வுக்கு வாழ்த்து சொன்னதுகூட பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பல்லாண்டுகால நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாமல் எப்படி இருக்க முடியும்...'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு