Published:Updated:

`இந்தி தெரியாது போடா...', `தி.மு.க வேணாம் போடா' - டிரெண்டாகும் ஹேஷ்டேக் பின்னணி சீக்ரெட்!

இந்தி எதிர்ப்பு - கனிமொழி
News
இந்தி எதிர்ப்பு - கனிமொழி

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக டிரெண்டாகிவரும் ஹேஷ்டேக்குகளின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் கைங்கர்யங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். `இந்தி தெரியாது போடா' ஹேஷ்டேக்கை தி.மு.க திட்டமிட்டு டிரெண்ட் செய்ததாகச் சொல்கிறது தமிழக பா.ஜ.க!

`இந்தி தெரியாது போடா...’ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங் ஆக... இப்போது, `தி.மு.க வேண்டாம் போடா’, `நீ யார்னே தெரியாது ......... போடா...’ என்பது போன்ற `ஏடாகூட’ ஹேஷ்டேக்குகளையெல்லாம் டிரெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழக அரசியல் களம் எப்போதும் தகித்துவரும் என்பது வரலாறு. நீறுபூத்த நெருப்பாக அமிழ்ந்துகிடந்த இந்த அனலை மீண்டும் விசிறிவிட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை முன்னிறுத்தும், மும்மொழிக் கொள்கைத் திட்டம்!

கனிமொழி ட்விட்டர் பதிவு
கனிமொழி ட்விட்டர் பதிவு

இந்த நிலையில்தான், தி.மு.க எம்.பி கனிமொழி, இந்தி மொழி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதாவது, `இந்தி தெரியாது’ என்று கூறியதாலேயே, `நீங்கள் இந்தியரா...’ என்ற கேள்வியை விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், `இந்தி தெரிந்தால்தான் இந்தியரா...’ என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார் கனிமொழி. இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் அரங்கில் `பரபர’ விவாதத்தைப் பற்றவைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
யுவன் ஷங்கர் ராஜா - ஶ்ரீரிஷ்
யுவன் ஷங்கர் ராஜா - ஶ்ரீரிஷ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ``இந்தி மொழி தெரியாததால் கனிமொழிக்கு ஏற்பட்டது போன்ற கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து இந்தி மொழிக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பு கருத்து மோதல்களும் தீவிரமாகின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அண்மையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அந்த வகுப்புகளின்போது, இந்தி மொழியிலேயே உரையாடிய அமைச்சக அதிகாரி, `இந்தி தெரியாதவர்கள் பயிற்சி வகுப்பைவிட்டு வெளியேறுங்கள்’ என்று கூறியது நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளி மாணவர் சேர்க்கைப் படிவத்தில், `மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டதாக அடுத்த சர்ச்சை சலங்கை கட்டி ஆடியது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

இப்படி இந்தித் திணிப்பு முயற்சி தொடர்கதை ஆகிவருவதைக் கண்டு குமுறிக்கொண்டிருந்த நிலையில்தான், தமிழ்த் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், இந்தி மொழி தெரியாததால், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆனந்த விகடன் இதழில் பேட்டியாகப் பதிவு செய்திருந்தார். அதில், ``நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு.

2011-ஆகஸ்ட்ல டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தியில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்கல்லாம் இப்படித்தான்... யூ தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்கல்லாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சுட்டார் அந்த அதிகாரி’’ என்று தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த இளம் கலைஞர்களை கொதிப்படையச் செய்துவிட்டது. இதையடுத்து, `இந்தி தெரியாது போடா...’, `நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்களை அணிந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்த இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும், `இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆனது.

தி.மு.க எம்.பி கனிமொழி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகியிருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல' என்று பதிவிட்டிருந்தார்.

கீர்த்தி - சாந்தனு
கீர்த்தி - சாந்தனு

இதையடுத்து இந்த விவகாரம் அரசியல்ரீதியான மோதலாக உருவெடுக்க ஆரம்பித்தது. தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் தி.மு.க-வின் பின்னணியிலேயே இது போன்ற உடைகளை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், திட்டமிட்டே ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்துவருவதாகவும் விமர்சிக்கத் தொடங்கினர். மேலும், `இந்தி தெரியாது போடா' ஹேஷ்டேக்குக்கு பதிலடியாக, `தி.மு.க வேண்டாம் போடா’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.

தமிழ்த் திரைப்படத்துறையின் தயாரிப்பாளரும் பா.ஜ.க கலை - கலாசாரப் பிரிவின் செயலாளருமான அழகன் தமிழ்மணி இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 1965-லிருந்தே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. அப்போது நடைபெற்ற இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவன்தான் நானும்.

ஆனால், தற்போது தமிழ்த் திரைப்பட உலகில், இந்தி மொழிக்கு எதிராகப் போராட்டக் குரல் எழும்பியிருப்பதன் பின்னணியில் தி.மு.க-வின் பங்கு இருக்கிறது. கனிமொழி, இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரிடம் `இந்தி தெரியுமா?’ என்று விமான நிலையத்தில் அதிகாரி கேட்டதாகவும், அதையொட்டியே இத்தனை சர்ச்சைகளும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த இரு சம்பவங்களுமே தனிப்பட்ட அதிகாரிகளின் செய்கைகளால் ஏற்பட்டவை. அப்படியிருக்கும்போது, ஒட்டுமொத்தமாக மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தை திசை திருப்பும் வேலைகளை தி.மு.க திட்டமிட்டு செய்துவருகிறது.

அழகன் தமிழ்மணி
அழகன் தமிழ்மணி

ஒரே நாளில், திரைத்துறையினர் அனைவரும் எப்படி இதற்கு ஆதரவு அளித்தார்கள்... `இந்தி வேண்டாம்’ என்ற வாசகங்களுடன்கூடிய பனியனை ஒட்டுமொத்தமாக திரைத்துறையினர் அனைவருக்கும் ஒரே நாளில் விநியோகம் செய்தது யார்?

உலக அளவில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தவர்கள் யார்? இப்படி எந்தக் கேள்விக்கும் திரைத்துறையினருக்கே பதில் தெரியவில்லை. ஏனெனில், அவர்களுக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது திட்டமிட்டு தி.மு.க செய்துவரும் இயக்கம்; நடிப்பு மட்டுமே தமிழ்க் கலைஞர்கள். அரசியலை திரைத்துறையில் கலக்கச் செய்யும் தி.மு.க-வின் இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு போராட்டமும் தன்னெழுச்சியாக இருக்க வேண்டுமே தவிர, இது போன்று திரைமறைவில் இருந்துகொண்டு தூண்டிவிடும் போராட்டமாக இருக்கக் கூடாது. இப்படியான போராட்டங்கள் வெற்றிபெறவும் முடியாது!’’ என்றார் உறுதியாக.

தமிழக பா.ஜ.க பொருளாளரான எஸ்.ஆர்.சேகர், இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, `` `இந்தி தெரியாது போடா...’ என்று இப்போது தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்வதற்கு என்ன அவசியம் வந்தது? யார், யாரைக் கூப்பிட்டு `உனக்கு இந்தி தெரியுமா, கட்டாயம் நீ இந்தி படித்துத்தான் ஆக வேண்டும்’ என்றெல்லாம் சொன்னார்கள். இந்தி தெரியாதவர்கள் ரோட்டில் நடக்கக் கூடாது, ரயிலில் ஏறக் கூடாது, சாப்பிடக் கூடாது, தூங்கக் கூடாது என்றெல்லாம் யாராவது சொன்னார்களா?

இதுபற்றிக் கேட்டால், கனிமொழிக்கு நேர்ந்த அனுபவத்தையும் ஆயுஷ் அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்ததையும் உதாரணம் காட்டுகிறார்கள். தனி மனிதர்கள் சிலரால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு அரசாங்கம் எப்படிப் பொறுப்பாக முடியும்? எனவே, இவை இரண்டுமே உப்புச் சப்பில்லாத வாதங்கள். அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறனுக்கும் இப்படியான அனுபவம் ஏற்பட்டது என்கிறார்கள். இவர்கள் சொல்கிறபடி பார்த்தால்கூட 2011-ல் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதானே வெற்றிமாறனுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது... அப்படியென்றால், இதற்கான பதிலை தி.மு.க - காங்கிரஸ்காரர்கள்தானே சொல்ல வேண்டும்...

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

ஆக உப்புச் சப்பில்லாத இந்த வாதங்களை தி.மு.க-வினர்தான் பூதாகரமாக்கிவருகிறார்கள். அதற்கும்கூட இவர்களிடம் போதிய அறிவு இல்லை. ஏனெனில், `இந்தி வேண்டாம் போடா' என்ற இந்த ஹேஷ்டேக்கை தமிழ்நாட்டிலிருந்து ஒரு பயகூட டிரெண்டிங் செய்யவில்லையே... அவை முழுவதும் உக்ரைனிலிருந்தும், கஜகஸ்தானிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் அல்லவா டிரெண்டிங் ஆகியிருக்கின்றன! 98 சதவிகிதம் இப்படியான வெளிநாடுகளிலிருந்துதான் டிரெண்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்பது ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த டிரெண்டிங் விவகாரத்தில் தி.மு.க-வினர்தான் பின்னாலிருந்து இயக்குகிறார்கள். குறிப்பாக கனிமொழிதான் இந்த விவகாரத்தை பெரிதாகக் கிளப்பிவிட்டிருக்கிறார்!'' என்றார்.

தி.மு.க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது,

``தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குரலாக தி.மு.க ஒலித்துக்கொண்டிருப்பதை ஒப்புக்கொள்ள முடியாத பா.ஜ.க., இப்படியான போராட்டங்களை நாங்கள் தூண்டுவதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். பொதுமக்களாக இருக்கக்கூடிய இளைஞர்கள்தான் இன்றைக்கு `இந்தி வேண்டாம் போடா...’ ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சரி... அவர்கள் சொல்வதுபோல், நாங்கள்தான் தூண்டிவிடுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், திரைத்துறையில் உள்ளவர்களுக்கு சுய அறிவு இல்லை என்று சொல்கிறார்களா? பனியன்களை நாங்கள்தான் கொடுத்தோம் என்கிறீர்கள். நாங்கள் எதைக் கொடுத்தாலும் திரைத்துறையினர் அப்படியே அணிந்துகொள்வார்கள் என்கிறார்களா, என்ன இது அர்த்தமற்ற வாதம்?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

யார் சொன்னாலும் திரைத்துறையினர் கேட்டுக்கொண்டு செயல்படுவார்கள் என்று சொன்னால், உங்கள் கையில்தான் அரசாங்கமே இருக்கிறதே.... `இந்தி வேண்டும்' என்று திரைப்படத் துறையினரை சொல்லச் சொல்லுங்களேன்.

கலையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர் வெற்றிமாறனே, `இந்தி தெரியாததால் எனக்கும் இதுதான் நிலைமை' என்று சொல்லி பேட்டியளிக்கிறார். அவரது அந்தப் பேட்டி கலைத்துறையைச் சேர்ந்தவர்களை சிந்திக்கவைக்கிறது. அதன் வெளிப்பாடாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதாவது, இது போன்ற அனுபவங்கள் கலைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்ற அனுபவ வெளிப்பாடுதான் இந்த எதிர்ப்பு.

'இந்தி திணிப்பு' என்பது ஆண்டாண்டுகாலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்தாலும், மத்தியில் பா.ஜ.க ஆட்சி வந்த பிறகுதான், ரொம்பவும் தீவிரமாக `இந்தி தெரிந்தால்தான் நீ இந்தியன்' என்ற பாசிச வெறிநிலைக்கு நாடு ஆளாகியிருக்கிறது. இதோ, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அலுவலர்கள் மத்தியிலும் இந்தி திணிக்கப்படுவதாக அதிகாரி ஒருவரே தற்போது புகார் கொடுத்திருக்கிறார்.

ஆக, அரசியலைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி, திரைத்துறையைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருமே இந்தி திணிப்பு என்ற வன்முறைக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-தான் செட் செய்து இப்படிச் செய்கிறார்கள் என்று பா.ஜ.க-வினர் பொய் சொல்லிவருகிறார்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

எப்போதுமே செட்டிங் செய்து மக்களை ஏமாற்றுவதெல்லாம் பா.ஜ.க-வின் பழக்கம். தி.மு.க என்பது கொள்கைரீதியாக மக்களிடையே உணர்வுகளைத் தட்டியெழுப்பக்கூடிய இயக்கம். இந்தச் செயல்பாடுதான் நாட்டு மக்களிடையே தி.மு.க மீது ஓர் ஈர்ப்பை உருவாக்கி, மாற்றத்தை உருவாக்குமே தவிர... செட்டிங் வேலையெல்லாம் தி.மு.க-வுக்கு பழக்கமில்லாதது!'' என்றார் விளக்கமாக.