Published:Updated:

ரஃபேல் வாட்ச் டு பட்டியல் எச்சரிக்கை - அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி... எங்கே ஆரம்பித்தது?!

அண்ணாமலை - செந்தில் பாலாஜி

அண்ணாமலை Vs செந்தில்பாலாஜி மோதலாக மாறியிருக்கும் இந்த விவகாரம் எப்போது ஆரம்பித்தது, இப்போது எந்த நிலையிலிருக்கிறது?

Published:Updated:

ரஃபேல் வாட்ச் டு பட்டியல் எச்சரிக்கை - அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி... எங்கே ஆரம்பித்தது?!

அண்ணாமலை Vs செந்தில்பாலாஜி மோதலாக மாறியிருக்கும் இந்த விவகாரம் எப்போது ஆரம்பித்தது, இப்போது எந்த நிலையிலிருக்கிறது?

அண்ணாமலை - செந்தில் பாலாஜி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம்தான் கடந்த சில நாள்களாக நெட்டிசன்களுக்கு கன்டென்ட்டாக இருந்துவருகிறது. அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி மோதலாக மாறியிருக்கும் இந்த விவகாரம் எப்போது ஆரம்பித்தது, இப்போது எந்த நிலையிலிருக்கிறது?

அண்ணாமலை
அண்ணாமலை

பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஆடை விலை குறித்து பாஜகவினர் கேள்வியெழுப்ப, பதிலுக்கு பிரதமர் மோடி அணியும் ஆடைகளின் விலையைப் பகிர்ந்து எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்தனர். அப்படியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் ஐந்து லட்சம் ரூபாய் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாகப் பரவியது. அதற்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்த அண்ணாமலை,

“புதிதாக நான் அணிந்திருக்கும் வாட்ச், சட்டை, கார் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிருள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்மைத் தவிர வேறு யார் அதை வாங்குவார்கள். நம்முடைய நாட்டுக்காக இந்த வாட்ச்சைக் கட்டியிருக்கிறேன். ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். விமானம் வந்த பிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது. இந்த வாட்ச்சில் விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ச்சுகளில் 149-வது வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன்'' என விளக்கம் கொடுத்திருந்தார்.

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

அண்ணாமலையின் விளக்கத்துக்குப் பிறகு இந்த விவகாரம் ஏற்கெனவே பரவியதைவிட பல மடங்கு வேகத்தில் சமூக வலைத்தளங்களில் விவாதமானது. தொடர்ந்து, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில்,

``பிரான்ஸ் நிறுவனத்துக்காக, உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள Rafale watch-ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்து எனச் சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட்டால், வெளிநாட்டு வாட்ச்சைக் கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி... வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா... கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட முடியுமா... இல்லை வழக்கம்போல Excel Sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனப் பதிவிட்டிருந்தார்.

``அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்... அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை, இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி?
ராஜீவ் காந்தி ட்விட்டரில்

இதற்கு பதிலளிக்கும்விதமாக, ‘மிக விரைவில் தனது ஒட்டுமொத்தச் சொத்து விவரத்தையும் வெளியிடவிருப்பதாக’ பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. அதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்புமனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்துக்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா... வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டதுபோல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டிக் கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்புகொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா... இதுதான் நீங்கள் அளந்துவிடும் (Made in India) 'மேட் இன் இந்தியா'-வா... சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பிகட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கின்றன. இவர் என்ன வெளியிடுவது... யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கிடையே தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அண்ணாமலை, “நான் கவுன்சிலரோ, ஊராட்சி மன்றத் தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசுப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட இப்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும், என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டிருக்கிறது. திமுக-வினர் எனது உடைகள், கடிகாரம், கார் குறித்துக் கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்யவிருக்கிறேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லவிருக்கிறேன். எனது நடைப்பயணத்தைத் தொடங்கும்போது, நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010-11-ம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை மக்களுக்குச் சமர்ப்பிக்கவிருக்கிறேன்.

கடந்த 13 ஆண்டுகளில் நான் செய்த அனைத்துச் செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்யவிருக்கிறேன். 500 ரூபாய் கொடுத்து நான் படத்துக்குச் சென்றிருந்தாலும் அது பதிவாகியிருக்கும். தமிழக அரசியலில் முதன்முதலாக என்னுடைய வாழ்க்கை முழுவதையும் தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப்போகிறேன்” என்று பேசியிருந்தார்.

அதற்கு, ``பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?..,ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது'' என கலாய்க்கும் விதத்தில் பதிலளித்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

திமுக ஐ.டி.விங்
திமுக ஐ.டி.விங்

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய அண்ணாமலை,

``நான் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்துக்கான பில்லை வெளியிட முடியுமா என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்கிறார். இந்த கடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன்... எவ்வளவு பணம் கொடுத்தேன் என்ற அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடவிருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் மக்கள் கேள்வி கேட்பது வழக்கம். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி சாமானியனான என்னைப் பார்த்து கடிகாரத்துக்கு பில் கேட்கிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். கேட்க யாருமில்லை என்ற மமதை திமுக அமைச்சர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. கைக்கடிகாரத்துக்கு மட்டுமல்ல... காவல்துறையில் 2010-ல் சேர்ந்ததிலிருந்து 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட தயாராக இருக்கிறேன். எனது அனைத்து வங்கிக் கணக்குகள், சம்பளமாகப் பெற்ற சுமார் ரூ.1 கோடியை எவ்வாறு செலவு செய்தேன், ரூ.25 லட்சம் கட்டிய கிரெடிட் கார்டு பில் என மாதவாரியாக அனைத்து விவரங்களையும், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால், திமுக-வில் ஒரு வட்டத் தலைவர் தனது சொத்து விவரங்களை வெளியிட தயாராக இருக்கிறாரா... முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடவிருக்கிறேன். இதுவரை முதல்வர் உட்பட 13 அமைச்சர்களின் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து விவரங்களைச் சேகரித்திருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வரை சொத்து விவரங்கள், இந்தோனேசியாவில் திமுக அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான துறைமுகம் ஆகிய விவரங்களைத் தனித்தனியாக வெளியிடவிருக்கிறேன். அமைச்சர் உதயநிதி லெக்சஸ் கார் வாங்கியபோது, அதற்கு வரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் ஏமாற்றி கொண்டுவந்ததைக் கண்டறிந்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட சாட்சி விவரங்களையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

70 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டிருந்தோம். தற்போது பூனைக்கு மணி கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்காமல் அடுத்த அடி எடுத்துவைத்து எந்தப் பயனும் இல்லை. அதை இங்குள்ள கட்சிகள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், எங்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால் திமுக-வை எதிர்த்து துணிச்சலாகக் கேள்வி கேட்கிறோம். முதல்வரின் மருமகன் சபரீசன் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.14 கோடி. அது எங்கிருந்து வந்தது... மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்கள், முதல்வர் முன்பு என்னென்ன கடிகாரம் கட்டினார்... என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தினார் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்'' என திருப்பூரில் நடந்த கட்சி நிகழ்வில் பேசினார்.

மேலும் கோயம்புத்தூரில் நடந்த கட்சி நிகழ்வில்பேசிய அண்ணாமலை,

``ரஃபேல் வாட்ச்சை வைத்தே 25 எம்.பி-க்களை பெற்றுவிடலாம் என நினைக்கிறேன். இத்தனை நாள் ஊழலைப்பற்றிப் பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தது. வாட்ச் பில் என்னிடம்தான் இருக்கிறது. என்றைக்கு இந்த வாட்ச் குறித்து, டீக்கடையில் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன். கருணாநிதி இருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்திருக்க மாட்டார். இந்த வாட்ச் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய பங்காற்றும். எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறார்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இப்போது சில அமைச்சர்கள்தான் வாட்ச் குறித்து பேசுகிறார்கள். எல்லா அமைச்சர்களும் இது குறித்துப் பேசுங்கள்.

ராஜிவ் கந்தி டிவிட்டரில்
ராஜிவ் கந்தி டிவிட்டரில்

வாட்ச் பில் வெளியிடப்படும் அன்றைய தினம் ஒரு வெப்சைட் தொடங்கவிருக்கிறோம். அதில் கோபாலபுர குடும்பம், அனைத்து அமைச்சர்களின் ஊழல்கள், சொத்துகள், பினாமி விவரங்களை வெளியிடுவோம். ஒரே நாளில் அரசியல் புரட்சி ஏற்படுத்தவிருக்கிறோம். முதல்வர் குறித்துப் பேசக்கூடிய தைரியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து பெரிதா... வாட்ச் விவகாரம் பெரிதா என தெரிந்துவிடும். அதுமட்டுமல்லாமல், ஒரு அமைச்சருக்கு இந்தோனேசியாவில் தனியாக ஒரு துறைமுகமே இருக்கிறது. தி.மு.க பெரிய தட்டில் லட்டு போல இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்திருக்கின்றனர். எத்தனை காலம் தி.மு.க ஆட்சியைப் பொறுத்துக் கொள்ளமுடியும். 2024 தேர்தலில் 25 எம்.பி-க்களை பெற்று, தி.மு.க-வுக்கு முடிவுரை எழுதுவோம். எந்த பொறி வைத்தால் எந்த எலி வரும் என நமக்குத் தெரியும்" எனப் பேசியிருந்தார்.

ஆனால், அண்ணாமலை என்ன விளக்கம் கொடுத்தாலும், பில் இருக்கா, இல்லையா என்பது மட்டுமே திமுகவினரின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் தான் பதில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!