Published:Updated:

தி.மு.க முதல் பா.ம.க வரை.. பொதுச்செயலாளருக்கு எந்தெந்தக் கட்சியில் என்னென்ன விதி, எந்தளவு அதிகாரம்?

பொதுச்செயலாளர் அதிகாரம்
பொதுச்செயலாளர் அதிகாரம்

தி.மு.க உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அந்தப் பதவிக்கான அதிகாரம் என்ன... என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை.

தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவியை 43 ஆண்டுக்காலம் அலங்கரித்து வந்த க.அன்பழகன் கடந்த 7-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவர் இறந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருக்கின்றன. ஆனால், அடுத்த பொதுச் செயலாளர் யார், பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்கிற பரபரப்பு தி.மு.க-வினரிடையே இப்போதே தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பதவியென்பது மிகுந்த அதிகாரமிக்க ஒரு பதவியாகப் பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு அமைச்சர் பதவி என்றால் அவருக்கு இணையான செல்வாக்குமிக்க மற்றொருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி என ஆட்சியில் அமைச்சர் பதவிக்கு ஒப்பாகக் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி கருதப்படுகிறது. அப்படி, மாவட்டச் செயலாளர்களுக்கு எல்லாம் தலைமையாக, தலைவருக்கு அடுத்த அதிகாரமிக்க பதவியாக தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி இருக்கிறது. அதனால்தான் அதற்கான எதிர்பார்ப்பு இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அப்படி, தி.மு.க உட்பட தமிழகத்தில் உள்ள கட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அந்தப் பதவிக்கான அதிகாரம் என்ன... என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை.

அன்பழகன் (தி.மு.க)
அன்பழகன் (தி.மு.க)

தி.மு.க

பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து 1949-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார் அண்ணாதுரை. அந்தக் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக, அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தலைவர் பதவி பெரியாருக்கு என ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் இறப்பு வரை கட்சியின் முதன்மை அதிகாரமிக்க பதவியாக பொதுச் செயலாளர் பதவியே இருந்து வந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி கட்சித் தலைமைப் பதவிக்கு வந்தார். அவர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவருடன் தலைமைப் பதவிக்கும் முதல்வர் பதவிக்கும் போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். பின்னர், நாவலர் நெடுஞ்செழியன் தி.மு.க-விலிருந்து வெளியேற, அதுவரை செயலாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு வந்த க.அன்பழகனை பொதுச் செயலாளர் ஆக்கினார் கருணாநிதி. இது நடந்த ஆண்டு 1977. அன்று முதல் அவரின் மறைவு வரை, கிட்டத்தட்ட 43 ஆண்டுக்காலம் அவரே தி.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் பொறுப்பு நியமன அறிவிப்புகள், ஒழுங்கு நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் எல்லாம் பொதுச் செயலாளர் அன்பழகனின் பெயரிலேயே வெளிவந்தன. கட்சியின் முடிவுகளை எல்லாம் தலைவரும் பொதுச் செயலாளரும் இணைந்தே முடிவெடுக்கலாம் எனத் தி.மு.க-வின் கட்சி விதி இருந்தாலும், பெரும்பாலான விஷயங்களில், பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே, அறிவிப்புகள் வெளியிட்டனர் கருணாநிதியும் அன்பழகனும். அவரின் மறைவையொட்டி தற்போது, தி.மு.க-வின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியான பொதுச் செயலாளர் பொறுப்புக்கு யார் வருவது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும், தி.மு.க-வின் பொருளாளராகத் தற்போது பதவி வகித்துவரும் மூத்த தலைவரான துரைமுருகனுக்கே அந்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எல்லாம் சில நாள்களில் தெரியும்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

அ.தி.மு.க

தி.மு.க-வின் பொருளாளராகச் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட,1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா எப்படித் தலைவர் பதவியை பெரியாருக்காக விட்டுத் தந்திருந்தாரோ, அதேபோல எம்.ஜி.ஆர், தன் அரசியல் ஆசானான, அண்ணாவுக்காக அந்த இடத்தை விட்டுத் தந்திருந்தார். தன் கட்சியில் தலைவர் என்ற பதவியே கிடையாது என்று அறிவித்தார். 1987 டிசம்பர் 24-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக எம்.ஜி.ஆர் மறைந்தார். அப்போது வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் பொதுச் செயலாளர் பதவியை அலங்கரித்தார் அவர். கட்சியின் முதன்மை அதிகாரமிக்க பதவியாகவும் அதுவே இருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பிறகு, 1989 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒன்றாக்கப்பட்டன. ஜெயலலிதா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் தான் இறக்கும்வரை அந்தப் பதவியை யாருக்கும் விட்டுத்தரவில்லை ஜெயலலிதா. கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாலும் தொண்டர்களாலும் நிரந்தரப் பொதுச் செயலாளர் எனவும் அழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு பொது உறுப்பினரும் வாக்களித்துதான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் பை-லா. மற்ற விதிகளை மாற்றினாலும் இந்த ஒருவிதியை மட்டும் மாற்ற முடியாதபடி வைத்திருந்தார் அக்கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த விதி மீறப்பட்டது. சசிகலா தேர்தல் மூலமாகத் தேர்தெடுக்கப்படாமல் தலைவர்கள், பொதுக்குழுவின் மூலமாகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலாவை அப்படித் தேர்வு செய்தது கட்சி விதிப்படி செல்லாது எனச் சசிகலா புஷ்பா எம்.பி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதைத் தேர்தல் ஆணையமும் ஏற்று அறிவிப்பே வெளியிட்டது.

ஜெயலலிதா
ஜெயலலிதா
ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்..! #MyVikatan

இது ஒருபுறமிருக்க, தர்மயுத்தத்துக்குப் பிறகு, ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைய சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்துவிட்டதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், அண்ணாவுக்காக எம்.ஜி.ஆர் செய்ததைப்போல ஜெயலலிதா மட்டுமே கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர், இனி பொதுச் செயலாளர் பதவியே இல்லை எனத் தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர், அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். கட்சி அறிக்கைகள், முடிவுகள் அனைத்தும் இருவரின் பெயரிலும் வெளியிடப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

ம.தி.மு.க

தி.மு.க-வின் டெல்லி முகமாக, பிரசாரப் பீரங்கியாகச் செயல்பட்டு வந்த நிலையில், 1993-ம் ஆண்டு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் வை.கோபால்சாமி. அவர் மட்டுமல்லாது, அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட, ஒன்பது மாவட்டச் செயலாளர்களும் 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுடன் இணைந்து 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி `மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் புதிய கட்சி உருவாக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக வைகோ தெர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா, தி.மு.க-வை உருவாக்கியபோது கட்சி எப்படி கட்டமைக்கப்பட்டதோ அதே வழியில் தொடருவதற்காக, தன் கட்சியிலும் தலைவர் என்கிற ஒரு பதவியை இல்லாமல் செய்தார் வைகோ. அதன்படி கட்சியின் முதன்மை அதிகாரமிக்க பதவியாகப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. கட்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை வைகோவே பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு உறுப்பினர்களின் மூலமாக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வைகோவுக்கு போட்டியாக யாரும் போட்டியிடாததால் அவரே தொடர்ந்து வருகிறார். கட்சியின் முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் பொதுச் செயலாளர் பெயரிலேயே வெளியிடப்படுகிறது.

வைகோ
வைகோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தலித் சிறுத்தைகள் எனும் பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, விடுதலைச் சிறுத்தைகளாக 1990-ம் ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி மதுரையில் மாற்றப்பட்டது. தலித் சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளராக செயல்பட்டு வந்த தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகளாக மாறிய பின், அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தலைவராக ஒருவரும், பொதுச் செயலாளர்களாக இருவரும் இருப்பது எனக் கட்சி மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, தலைவராக தொல்.திருமாவளவனும், செயலாளர்களாக தடா பெரியசாமியும் சிந்தனைச் செல்வனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு மூன்று பொதுச் செயலாளர்கள் என அந்தப் பதவி விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி இருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாகவும் பட்டியலினத்தைச் சாராத ஒருவரையும் நியமிப்பது எனக் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், கலைக்கோட்டுதயம் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டனர். தற்போது, ரவிக்குமார் மற்றும் சிந்தனைச் செல்வன் ஆகிய இருவரும் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். இதற்கென மாநில நிர்வாகிகளின் தலைமையில் தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். கட்சியில் தலைவருக்கு அடுத்தபடியான அதிகாரமிக்க பதவியாக இருப்பது பொதுச் செயலாளர் பதவிதான். தற்போது இரண்டாவது முறையாக அந்தப் பதவியில் இருக்கிறார் துரை.ரவிக்குமார், இவர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இனிவரும் காலங்களில் மாவட்டப் பொறுப்பாளர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது எனக் கட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரவிக்குமார்
ரவிக்குமார்
தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர், பொருளாளர் யார் யார்? எதிர்பார்ப்பும் பின்னணியும்

தே.மு.தி.க

பல காலமாக தி.மு.க ஆதரவாளராகவும் தங்கப் பேனா பரிசளிக்கும் அளவுக்கு கருணாநிதியின் அன்புக்குரியவராகவும் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பல அதிரடியான முடிவுகளை எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த போராட்டங்களில் நடிகர் சங்கம் முன்னணியில் நின்றது. இந்த நிலையில், திடீரென நேரடி அரசியலில் இறங்கினார் விஜயகாந்த். 2005 செப்டம்பர் 14-ம் தேதி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். கட்சியின் தலைவராக விஜயகாந்தும் பொதுச் செயலாளராகத் தனது ரசிகர் மன்றத் தலைவராக நீண்ட காலம் இருந்த சொ. ராமு.வசந்தனையும் நியமித்தார். தே.மு.தி.க தொடங்கப்பட்ட காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராமுவசந்தன்.

அவர், 2009-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைய கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இரண்டு பொறுப்புகளையும் தன் வசமே வைத்துக்கொண்டார் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக மட்டும் நீடித்தார் விஜயகாந்த். கட்சி சார்ந்த அறிவிப்புகள் அனைத்தும் பொதுச் செயலாளர் பெயரிலேயே வந்தது. ஆனால், தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சியின் வரவு செலவு ஆகியவற்றை ஆரம்பம் முதலே விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவே கவனித்து வருகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்த அவர், 2018 அக்டோபர் 19-ம் தேதி, கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். தே.மு.தி.க-வில் முதன்மை அதிகாரமிக்க பொறுப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பு இருந்தாலும், பொருளாளரான பிரேமலதாவே கட்சியின் அதிகாரமிக்க நபராக வலம் வருகிறார்.

வடிவேல் இராவணன்
வடிவேல் இராவணன்

பாட்டாளி மக்கள் கட்சி

வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ். கட்சியின் முதல் தலைவராகப் பேராசிரியர் தீரனும் பொதுச் செயலாளராக தலித் எழில்மலையும் தேர்தெடுக்கப்பட்டனர். கட்சி விதியின்படி பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பொருளாளராகவும் பதவி வகிக்க முடியும். அதன்படி தற்போது வடிவேல் இராவணன் என்பவர் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, கட்சியின் பொதுக்குழுவின் வாயிலாகவே தலைவர், செயலாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நடைபெறும் சூழல் பெரும்பாலும் உருவானதில்லை. ஒரேயொருமுறை தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையே இருந்து வருகிறது. பொறுப்பு நியமன அறிவிப்புகள், ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் பெரும்பாலும் தலைவரின் பெயரிலேயே வெளியிடப்படுகிறது. எனினும், தலைவர், செயலாளர் அனைவரையும் தாண்டி, நிறுவனரான மருத்துவர் ராமதாஸே அதிகாரமிக்க நபராகக் கருதப்படுகிறார்.

பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய தேசியக்கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் யார், அவர்களின் அதிகாரம் என்ன... என்பது குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.
அடுத்த கட்டுரைக்கு