Published:Updated:

ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மியா கலிஃபா, ரிஹானா, டாப்ஸி
மியா கலிஃபா, ரிஹானா, டாப்ஸி ( Twitter Images )

``ஒரே மாதிரியாக உள்ள ட்வீட்களை பாலிவுட் திரையுலகத்தினர் பதிவிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது மார்க்கெட்டிங் தந்திரம் போலத் தோன்றுகிறது. கொஞ்சம் நம்பும்படியாக மாற்றம் செய்ய முயன்றிருக்கலாம்'' - ஃபரா கான்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 70 நாள்களுக்கு மேலாக இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தொடங்கிய சில நாள்களிலேயே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

ரிஹானா பற்ற வைத்த நெருப்பு!

இந்தநிலையில் பாப் உலகின் இளவரசியாக அறியப்படும் ரிஹானா இரு தினங்களுக்கு முன்பாக ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் பதியப்பட்ட செய்தியை ஷேர் செய்து, `நாம் ஏன் இது பற்றி பேசுவதில்லை?' என்று பதிவிட்டிருந்தார் ரிஹானா.

ரிஹானா
ரிஹானா
செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

ட்விட்டரில் உலக அளவில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் நான்காம் இடத்திலிருப்பவர் ரிஹானா. 10.12 கோடி ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயப் போராட்டம் பற்றி பதிவிட்ட கருத்து, பல லட்சம் லைக்குகளையும் ரீட்வீட்களையும் அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

ரிஹானா பதிவிட்ட ட்வீட்டுக்கு, இன்று மதியம் வரை 7.58 லட்சம் லைக்குகளும், நான்கு லட்சத்துக்கு அதிகமான ரீட்வீட்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

ரிஹானாவுக்கு பதிலடி!

இதையடுத்து ரிஹானாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ``யாரும் அதைப் (விவசாயிகள் போராட்டம்) பற்றிப் பேசப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். எங்கள் நாட்டை ஆக்கிரமித்து தங்கள் காலனித்துவ நாடாக மாற்ற சீனா முயற்சிக்கிறது. முட்டாளே அமைதியாக உட்கார். உங்களைப் போல நாட்டை விற்பவர்கள் அல்ல நாங்கள்" என்று ஆதாரமற்ற தகவல்களைப் பதிவு செய்து சர்ச்சையக் கிளப்பினார்.

mia khalifa, greta thunberg
mia khalifa, greta thunberg
twitter images
`ரொம்ப கொஞ்சமா காசு... நிறைய கெட்ட பேர்... இதான் சம்பாதிச்சேன்!' மியா கலிஃபா

ரிஹானாவைத் தொடர்ந்து இளம்வயது சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட பல சர்வதேசப் பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியுறவுத் துறையின் அறிக்கை!

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்களின் கவனம் இந்திய விவசாயிகளின் பக்கம் திரும்பவே, பதறியடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. அதில், ``வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில்கொண்டு தொடர்ந்து அவர்களுடன் அரசு உரையாடி வருகிறது.

ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களைத் திசைதிருப்பவும் முயல்கின்றனர். கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் தலைநகரில் நடந்த வன்முறை கூட இதன் காரணமாகவே நடந்தது. இதுபோன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்னைகள் குறித்துப் புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். பிரபலங்களால் போராட்டம் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல'' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியப் பிரபலங்களின் பதிவுகள்!

மேற்கண்ட அறிக்கையை இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவத்சவா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் #IndiaTogether #IndiaAgainstPropaganda என்கிற ஹேஷ்டேக்குகளை இணைத்திருந்தார் அவர். இதையடுத்து இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருப்போம்.
சச்சின் டெண்டுல்கர்

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் #IndiaTogether #IndiaAgainstPropaganda என்கிற ஹேஸ்டேக்கோடு தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வீரர்களான விராட்கோலி, ரஹானே, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் இதே ஹேஷ்டேக்கோடு கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். இதேபோல சாய்னா நேவால், பி.டி.உஷா போன்ற விளையாட்டு வீராங்கனைகளும், பாடகி லதா மங்கேஷ்கர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான், சுனில் ஷெட்டி, கரண் ஜோகர், எக்தா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இதே ஹேஷ்டேக்கோடு தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

இந்தியப் பிரபலங்கள் பதிவிட்டிருந்த அனைத்திலும் பொதுவாக இருந்த கருத்துகள் என்னவென்றால், ``விவசாயிகள் இந்த நாட்டின் முக்கியத் தூண்கள். இந்திய அரசு அவர்களின் பிரச்னை குறித்துப் பேசி முடிவெடுக்கும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது. தவறான பிரசாரங்களுக்கு யாரும் இறையாக வேண்டாம். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்'' என்பதுதான்.

இந்தியாவின் முக்கியமான அங்கம் விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணக்கமான தீர்வு காணும் முயற்சிக்கு ஆதரவு தருவோம். அதைவிடுத்து பிளவுபடுத்தும் யார் மீது கவனம் செலுத்தக் கூடாது.
அக்‌ஷய் குமார்

அதில் சில பிரபலங்கள் வார்த்தை மாறாமல் ஓரே மாதிரியாக ட்வீட்களை பதிவு செய்திருந்தனர். அந்த ட்வீட்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, ``யாரோ டைப் செய்து அனுப்பியதைக் காசு வாங்கிக் கொண்டு பதிவு செய்கின்றனர்'' என்று சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகை சஞ்சய் கானின் மகள் ஃபரா கான், ஓரே மாதிரியான ட்வீட்களை பதிவிட்டிருக்கும் பிரபலங்களை விமர்சித்திருக்கிறார். ``ஒரே மாதிரியாக உள்ள ட்வீட்களை பாலிவுட் திரையுலகத்தினர் பதிவிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது மார்க்கெட்டிங் தந்திரம் போலத் தோன்றுகிறது. கொஞ்சம் நம்பும்படியாக மாற்றம் செய்ய முயன்றிருக்கலாம்'' என்று பதிவிட்டிருக்கிறார் ஃபரா கான்.

Amit Shah
Amit Shah

பிரபலங்கள் மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர்கள் பலரும், #IndiaTogether #IndiaAgainstPropaganda என்கிற இரண்டு ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தியாவின் வளர்ச்சியையும், ஒற்றுமையையும் பிரசாரங்களால் குலைத்துவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியா ஒற்றுமையுடன் செயல்படுகிறது'' என்று ரிஹானா உள்ளிட்டோருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பிரபலங்களுக்கு டாப்ஸியின் பதிலடி!

இந்தநிலையில் ஒற்றுமை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பிரபலங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கருத்து ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை டாப்ஸி. அதில், ``ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் என்றால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையைக் குறைத்துவிடுமென்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையைக் குலைக்கும் என்றால், நீங்கள்தான் உங்கள் மதிப்பை வலுப்படுத்த உழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

Taapsee
Taapsee

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ``கிரிக்கெட் வீரர்களை பிரசாரத்துக்காகப் பயன்படுத்துவதை பிசிசிஐ நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னதாக, ``விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் கணக்குகள், ட்வீட்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும்'' என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கிரேட்டா மீது வழக்கு!

இதற்கிடையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த காரணத்தால், சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி காவல்துறை. சதி மற்றும் இரு தரப்பினரிடையே பகைமையை உண்டாக்கியது ஆகிய பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார் கிரேட்டா...

இப்போதும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவித வெறுப்பாலும், மனித உரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாலும் இதனை மாற்ற முடியாது.
கிரேட்டா தன்பெர்க்

பிசிசிஐ அழுத்தம் காரணமா?

இந்த தொடர் சம்பவங்கள் குறித்து அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும், ``ரிஹானா சர்வதேச பிரபலம் என்பதால் அவர் பதிவிட்ட ட்வீட் மிகப் பெரிய வைரலாகி இருக்கிறது. அவருக்குப் பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் பிரபலங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கட்டுப்பாட்டில் பிசிசிஐ இயங்கி வருவதால் கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டதற்கான சாட்சியங்கள் இருக்கும்போது `வெகுசில விவசாயிகள்தான் வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றனர்' என்று எப்படிச் சொல்ல முடியும். இந்திய அரசாங்கம், பிரபலங்கள் எனப் பலரும், சமீபத்தில் நடந்த வாஷிங்டன் கலவரம் உள்படப் பல வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கின்றனர். ஆனால், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நடக்கும் போராட்டம் குறித்துப் பதிவிட்டால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை'' என்று ஆதங்கத்தோடு தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

delhi farmer protest
delhi farmer protest
விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?
பா.ஜ.க ஆதரவாளர்களும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த சிலரும், ``ரிஹானா, டாப்ஸி உள்ளிட்ட அனைவருமே இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கக் காங்கிரஸால் ஏவிவிடப்பட்டவர்கள். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டவர்கள் யாருக்குமே உரிமையில்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்தியாவின் ஒற்றுமையை யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது'' என்கிறார்கள் உறுதியாக.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு