Published:Updated:

வி.கே.டி.பாலன்: `நம்பிக்கை மனிதர்’ | இவர்கள் | பகுதி - 5

வி.கே.டி.பாலன்

வாய்ப்பு யாருக்கும், தானே சென்று கதவுகளைத் தட்டுவதில்லை, நாம்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அன்று அந்த அதிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிய அவர் அதன் பிறகு தனது அன்றாட வேலையாக அதை மாற்றிக்கொள்கிறார்.

வி.கே.டி.பாலன்: `நம்பிக்கை மனிதர்’ | இவர்கள் | பகுதி - 5

வாய்ப்பு யாருக்கும், தானே சென்று கதவுகளைத் தட்டுவதில்லை, நாம்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அன்று அந்த அதிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிய அவர் அதன் பிறகு தனது அன்றாட வேலையாக அதை மாற்றிக்கொள்கிறார்.

Published:Updated:
வி.கே.டி.பாலன்
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்
தன்னைத் தேடி வருகிறவர்களுக்கு, அவர்களின் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றித்தரும் தாராள குணம் சென்னை நகரத்துக்கு உண்டு.

இந்தப் பெருநகரத்தை நம்பி வந்தவர்களை இந்த ஊர் ஒருபோதும் கைவிட்டதில்லை. 2008-ம் வருடத்தின் பிற்பகுதியில் சென்னையை நோக்கி வந்தபோது, கொஞ்சம் கனவுகளும் நிறைய வறுமையும் மட்டுமே என்னிடமிருந்தன. இந்த பன்னிரண்டு வருடங்களில் என்னைத் தேடிவந்த எல்லாமுமே இந்த நகரம் எனக்குக் கொடுத்தவைதான்.

`காவியத்தலைவன்’ திரைப்படத்தில், இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டிருந்தபோது அந்தத் திரைப்படத்தில் நடிகர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை எனக்கு இயக்குநர் கொடுத்திருந்தார். இரண்டாவது பகுதியில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தபோது, இயக்குநர் அதிகம் பிரபலமாகாத ஒருவர் நடித்தால் சரியாக இருக்குமெனச் சொல்லியிருந்தார். தற்செயலாக `விருமாண்டி’ படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் நடித்திருந்த பெரியவரைப் பார்க்க, ஊரில் நிஜமாகவே பஞ்சாயத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. அவர் யார், என்னவென மேனேஜர் மூலமாக விசாரித்தபோது மதுரா டிராவல்ஸின் நிறுவனர் திரு வி.கே.டி.பாலன் என்று தெரியவந்தது. அன்றைய தினமே அவரது எண்ணுக்கு அழைத்து நேரில் சந்திக்கச் சென்றேன். அவரைக் குறித்தோ, அவரது தொழில்களைக் குறித்தோ எதுவும் தெரியாது. என்னளவில் அந்தக் கதாபாத்திரத்துகு அவர் சரியாக இருப்பாரா என்பதை நேரில் பார்த்து உறுதிசெய்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் அவருடனான உரையாடல் அவரை வழக்கமான தொழிலதிபர் என்பதையும் தாண்டி சமூகத்தின் மீது அக்கறையும் நேசமும்கொண்ட மனிதர் என்பதை உணரவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றிபெற்ற மனிதர்கள் குறித்து அறிந்துகொள்வதன் வழியாக நாம் நமது பிழைகளிலிருந்து நம்மைத் திருத்திக்கொள்கிறோம்.

காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் சாதிப்பதற்கான சந்தப்பர்ங்களை வழங்குகிறது, சிலர் அதை அடையாளம் கண்டுகொண்டு தங்கள வாழ்வை வெற்றியை நோக்கி திசைதிருப்பிக்கொள்கிறார்கள். பலர் தங்களுக்கான சந்தர்ப்பம் வந்ததையே புரிந்துகொள்ளாமல் தவறவிட்டுவிடுகிறார்கள். வி.கே.டி.பாலன் அவர்கள் வீழ்ச்சிகளைக் கடந்து தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970-களில் திருச்செந்தூரிலிருந்து சென்னையை நோக்கி வந்த பாலன் அவர்களுக்கு இந்தப் பெருநகரில் சொந்தமோ நண்பர்களோ எவருமில்லை. ஒதுங்கக் கூரையில்லாமல், கிடைத்த இடங்களிலெல்லாம் ஒதுங்கி தன்னைப் பாதுகாத்துக்கொண்ட அந்த மனிதருக்கு எதிர்காலத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையும் ஆசையுமிருந்தன. இந்தப் பெருநகரில் தனக்கானதொரு கூரையில்லாத மனிதன் எதிர்கொள்ளும் துயரமும் நெருக்கடிகளும் அசாதாரணமானவை. பாலன் அவர்கள் குறிப்பிடும் அதே எக்மோர் பிளாட்ஃபாரம் எனக்கும் பரிச்சயமானது. ஆதரிக்க ஒருவருமில்லாத மனிதன் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளை என்னால் மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அழுக்கும் வெக்கையும் நிரம்பிய மனிதனாக சென்னையின் தெருக்களில் தனக்கானதொரு வேலையைத் தேடியலைந்த இளைஞனுக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. தன்னைப்போலவே ஒதுங்கக் கூரையில்லாத சில இளைஞர்களோடு உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பிய காவல்துறையினர் தங்களோடு அவரைக் காவல் நிலையத்துக்கு வரச் சொல்கிறார்கள்.

வி.கே.டி.பாலன்
வி.கே.டி.பாலன்

குழப்பத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருந்த இளைஞர் அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார். பாலனும் அந்த இளைஞனைத் தொடர்ந்து ஓடத் தொடங்குகிறார். போலீஸ்காரர்களும் விடுவதாகயில்லை என்கிற முடிவோடு துரத்த, மூச்சுமுட்ட ஓடும் பாலன் அவர்கள் ஒரு கட்டத்தில் ஓய்ந்து களைத்துப்போய் ஓரிடத்தில் படுத்துவிடுகிறார். அங்கு வேறு சிலர் முன்பே அவரைப்போல படுத்திருந்தார்கள். களைப்பில் பாலன் அவர்களும் அவர்களோடு உறங்கிவிடுகிறார். அதிகாலையில் அவரை ஒருவர் எழுப்பி `இந்த இடத்தை எனக்குக் குடு தம்பி. ரெண்டு ரூவா தர்றேன்...’ என்று சொல்ல அவர் குழப்பத்தோடு பார்க்கிறார்.

அவர் படுத்திருந்தது அண்ணா மேம்பாலத்தின் அருகாமையிலிருக்கும் அமெரிக்க தூதரகம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாய்ப்புகள் யாருக்கும் தானே சென்று கதவுகளைத் தட்டுவதில்லை, நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அன்று அந்த விடிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிய அவர் அதன் பிறகு தனது அன்றாட வேலையாக அதை மாற்றிக்கொள்கிறார். அமெரிக்க விசாவுக்காக வருகிறவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவேண்டி முந்தைய நாளே இதுபோல் வந்து படுத்துக்கொள்வார்கள். அப்படி வர முடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுப்பதுதான் பாலன் அவர்களின் வேலை. அவரிடமிருந்த உற்சாகத்தையும் துடிப்பையும் கவனித்த ஒரு டிராவல்ஸ் நிறுவன முதலாளி தன்னிடம் வேலைக்கு வரச்சொல்லிக் கேட்கிறார். `நீ செய்ற இதே வேலையைச்ச் செய்யலாம். அஞ்சு ரூவா தர்றேன்... பகல் நேரத்துல என் டிராவல்ஸுக்கு வேலைக்கு வா...’ என்று அவர் பாலன் அவர்களுக்குப் புதிய வாய்ப்பைத் தர, தனக்கான வெளிச்சம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஒப்புக்கொள்கிறார்.

மற்ற துறைகளிலிருந்து சுற்றுலாத்துறையும் டிராவல்ஸும் முற்றிலும் வேறு குணங்களைக் கொண்டவை.

நட்பும் நம்பிக்கையும் கூடிவந்தால் மட்டுமே இந்தத் தொழிலில் நீண்டகாலம் ஒருவர் தப்பிப் பிழைக்க முடியும்.

வேலைக்குச் சேர்ந்த டிராவல்ஸில் கடுமையாக உழைக்கத் தொடங்குகிறவர் அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பங்களை, சக மனிதர்களை அணுகும் விதத்தையெல்லாம் கற்றுக்கொள்கிறார். அதோடு, வெவ்வேறு அலுவலகங்களில் சிறு சிறு வேலைகளைப் பார்க்கத் தொடங்க இந்த நகரமும் வாழ்வும் மெல்ல பிடிபடத் தொடங்குகிறது. ஹெமிங்வேயின் `கடலும் கிழவனும்’ நாவலில் அற்புதமானதொரு வரி ஒன்று உண்டு. `எந்த ஒரு மனிதனையும் தோற்கடிக்க முடியாது. ஒரு மனிதனை அழிக்க முடியும். ஆனால் தோற்கடிக்க முடியாது.’ மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடும்போதுதான் தோற்றுப்போனவர்களாகிறார்கள். வாழ்வின்மீதும், உலகின்மீதும் சிறு துளி நம்பிக்கை எஞ்சியிருந்தால் போதும்... நமக்கான வெளிச்சம் கிடைத்தே தீரும். பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள்,

வி.கே.டி.பாலன்
வி.கே.டி.பாலன்
`திருநெல்வேலி, தூத்துக்குடி ஆளுகளை எந்த நாட்டுல போய் விட்டாலும் பொழச்சுக்குவாக…’ என்று.

இந்த வார்த்தை அந்தப் பகுதி மக்களின் கடுமையான உழைப்புக்கு அடையாளம்.

சில மாதகால சென்னை வாழ்க்கை அவருக்கு டிராவல்ஸ் தொழிலில் உள்ள நிறையபேரை அறிமுகப்படுத்தியிருந்தது. வெவ்வேறு வேலைகளில் கிடைத்த சிறு வருமானங்களைக் கொண்டு தனக்கான கூரையைத் தேடத் தொடங்குகிறார். ஐம்பது ரூபாய் வாடகையில் அழுக்கும் தூசியும் நிறைந்த பழைய அறை. ஆனால் அங்கிருந்து அவரை யாரும் துரத்த முடியாதென்பது எத்தனை பெரிய ஆறுதல்... நான் சென்னையில் சற்றேறக்குறைய எல்லாப் பகுதிகளிலும் வசித்திருக்கிறேன். நண்பர்களின் அறைகள், நண்பர்களின் நண்பர்களின் அறைகளென இரவில் ஒதுங்குவதற்காக அலைந்தவன் என்கிற வகையில் சொந்தமாக ஓர் அறையில்லாதவனின் துயரை நன்கறிவேன். திருமணமாகி என் மனைவியோடு ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கியபோதுதான் எனக்கானதொரு வீடென்பதை உணரத் தொடங்கினேன். அதற்கு நான் ஏழு வருடங்கள் இந்த சென்னை நகரத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனாலேயே வி.கே.டி.பாலன் அவர்களின் வாழ்க்கைக் கதையைத் தெரிந்தகொண்டபோது மிகப்பெரிய உந்துதல் கிடைத்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஏதேதோ ஊர்களிலிருந்து கனவுகளோடு சென்னை நகர் நோக்கி வருகிறவர்களில் எங்கு தங்கப் போகிறோமென்கிற உறுதியில்லாமல் வருகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நகரம் வஞ்சிக்கக்கூடியது, வாழ்வைத் தொலைத்துவிடுவார்கள் என்கிற பொதுவான நம்பிக்கை ஊர்ப் பக்கங்களில் உண்டு, அது எத்தனை அபத்தமானது!

உண்மையில் இந்த நகரம் எவரையும் ஏமாற்றுவதில்லை, வஞ்சிப்பதில்லை. வாழ்வை முழுமையாக வாழ நம்மை வலுவாக்குகிறது.

இந்த மனித சமுத்திரத்தில் நீந்திப் போராடப் பழகியவன் கரையேறும்போதுதான் தான் எத்தனை பெரிய சாகசத்தை செய்திருக்கிறோம் என்பதை உணர்கிறான்.

வி.கே.டி.பாலன் தனியாக டிராவல்ஸ் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். 80-களில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. குருவிகள் ஏராளமாகச் சென்றுவருவார்கள். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் நிகழ்ந்த வணிகம் மிகப்பெரியது. இந்தக் குருவிகளை ஒருங்கிணைத்து அனுப்பிவைப்பதற்கென்றே நிறைய பயண முகவர்கள் உண்டு. அப்படியான ஒரு பயணத்துக்காக 100 பேரின் பாஸ்போர்ட்டுகளை பாலனின் கையில் கொடுத்து ஒரு முதலாளி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைக்கிறார். ராமேஸ்வரத்துக்கு முன்பாகவே அதிகாலையில் ரயில் நின்றுவிட, இவர் இறங்கி விசாரிக்கிறார். பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதால் ரயில் பிற்பகலுக்கு மேல்தான் செல்லும் என்கிற தகவல் கிடைக்கிறது. காலை 9 மணிக்குள் துறைமுகத்தில் சென்று பாஸ்போர்ட்டைக் கொடுக்காவிட்டால் குருவிகள் பயணிக்க முடியாது, பயண முகவருக்கு பெரும் நஷ்டமாகிவிடும்.

அவ்வளவு பதற்றத்திலும் துணிந்து ரயில்வே ட்ராக்கில் நடக்கத் தொடங்கிவிடுகிறார். விடிந்தும் விடியாத காலையில், கடுமையான கடற்காற்றுக்கு நடுவே நடந்து செல்கிறவரை அலைகளின் பேரிரைச்சல் அச்சுறுத்துகிறது. போதாக்குறைக்கு ட்ராக் முழுக்க கிரீஸ் ஆயில் வழிந்து வழுக்கிக்கொண்டிருந்ததால் காலை அழுத்தமாக ஊன்றி நடக்க முடியாத நிலை. மெல்ல தவழ்ந்து தவழ்ந்து அந்த இரண்டு கிலோமீட்டர் ரயில்வே பாதையை இரண்டு மணி நேரங்களில் கடந்து சென்றுவிடுகிறார். குறிப்பிட்ட நேரத்துக்குள் துறைமுகத்தில் பாஸ்போர்ட்டுகளை சேர்த்துவிட்டதால் முதலாளிக்கு பெரும் நிம்மதி. அங்கு பயணத்துக்காகக் காத்திருந்த மற்ற ஆட்களும் இவர் செய்த காரியத்தைக் கேட்டு வியப்போடு பேசியிருக்கிறார்கள்.

அதன் பிறகு ஏராளமான பயண முகவர்கள் அவரிடம் நம்பிக்கையோடு பாஸ்போர்ட்டுகளையும் விசாவையும் ஒப்படைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பாலன் அவர்களிடமிருந்த மிகப்பெரிய இரண்டு முதலீடுகள் கடும் உழைப்பும் நம்பிக்கையும். அந்த முதலீடுதான் எக்மோர் ரயில் நிலைய நடைமேடையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

வெறுமனே ஒரு தொழிலதிபராக இருந்திருந்தால் எனக்கும் அவரைக் குறித்து எழுதுவதற்கு பெரிய ஆர்வமெதுவும் இருந்திருக்காது. அவரிடமிருக்கும் வாசிப்புப் பழக்கம், இலக்கிய ஆர்வம், பொதுக் காரியங்களில் தொடர்ச்சியான ஈடுபாடு இவை எல்லாமுமே அவரை தனித்துவமான மனிதராக எப்போதும் நினைக்கச் செய்யும். நான் கேட்டதும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர், படப்பிடிப்புத் தளத்தில் மிக எளிமையாக நடந்துகொள்வார்.

இவர்கள்
இவர்கள்

யாரிடமும் தனது பின்புலத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கு நடிக்க வந்திருக்கும் இன்னொரு நடிகராக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்வார். மனிதன் பொருளை எளிதில் சம்பாதித்துவிடலாம். நிதானத்தையும் பக்குவத்தையும் சம்பாதிப்பது கடினம். இன்றைக்குத் தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயண முகவர்களில் ஒன்றாக வி.கே.டி.பாலன் அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் நிறுவனம் இருக்கிறதென்றால் அதற்கு அவரது உழைப்பும், நேர்மையும், சக மனிதர்களின் மீதான கரிசனமுமே காரணம்.