Published:Updated:

Cabinet Expansion: மத்திய அமைச்சர்கள் சிலர் ராஜினாமா; 43 பேர் இன்று பதவியேற்பு?! - பரபரக்கும் டெல்லி

மத்திய அமைச்சரவை
News
மத்திய அமைச்சரவை ( மாதிரி படம் )

மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைச்சரவைக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து மத்திய அமைச்சரவையில் இதுவரையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் இடமும் காலியாக இருப்பதால் மொத்தத்தில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

நரேந்திர மோடியுடன் சேர்த்து தற்போது மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது (மோடியைத் தவிர்த்து 21 கேபினெட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். தற்போது மொத்தம் அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், பல மத்திய அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படவிருக்கும் நிலையில் தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய இணை அமைச்சர் தெபாஸ்ரீ சௌத்ரி பதவி விலகியிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மத்திய அமைச்சரவைக் கூட்டம்

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில். இன்று 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் 11 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் இடம்பெறுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அமைச்சர் பதவியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் சிறுபான்மையினர், பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம். வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைச்சரவைக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.