Election bannerElection banner
Published:Updated:

குமரி: பத்மநாபபுரம் தொகுதி சென்டிமென்ட்; நேர்காணலில் குறிப்பிட்ட நிர்வாகி?! - தி.மு.க பஞ்சாயத்து

பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை ( ஃபைல் படம் )

பத்மநாபபுரத்தில் எம்.எல்.ஏ ஆன அ.தி.மு.க-வைச் சேர்ந்த கு.லாரன்ஸ், கே.பி.ராஜேந்திரபிரசாத் ஆகியோர் அமைச்சர் ஆனார்கள். ஆனால் மறுமுறை தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் தொகுதி. இந்த தொகுதிதான் தென் மாநிலங்களிலேயே பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ கணக்கை தொடங்கி வைத்த தொகுதி. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க வளர்ந்து வந்த சமயத்தில் முதன் முதலாக எம்.எல்.ஏ-வை கொடுத்த தொகுதி பத்மநாபபுரம். பா.ஜ.க-வைச் சேர்ந்த வேலாயுதன், 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குச் சென்றார்.

1977-ல் ஜனதா கட்சியைச் சேர்ந்த சுவாமிதாஸ், 1980-ல் முகமது இஸ்மாயில், 1984-ல் சுயேச்சையான பாலச்சந்திரன், 1989-ல் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த நூர் முகமது, 1991-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கு.லாரன்ஸ், 1996-ல் பா.ஜ.க-வின் வேலாயுதன், 2001 அ.தி.மு.க-வின் கே.பி.ராஜேந்திரபிரசாத், 2006-ல் தி.மு.க-வைச் சேர்ந்த தியோடர் ரெஜினால்ட், 2011-ல் தி.மு.க-வின் புஷ்பலீலா ஆல்பன், 2016-ல் தி.மு.க-வின் மனோதங்கராஜ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த மூன்று முறையாக தொடர்ந்து தி.மு.க வசம் இருக்கிறது இந்த தொகுதி. அதனால் மீண்டும் இந்த தொகுதியில் தி.மு.க போட்டியிட வாய்ப்பு மிக அதிகம்.

தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ்
தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ்

இந்த நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் சீட்டுக்காக கடுமையாக மல்லுக்கட்டுகிறார்கள். மாவட்டச் செயலாளர் என்பதால் சீட் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறார் மனோதங்கராஜ். அதே சமயம் பத்மநாபபுரம் தொகுதியின் சென்டிமென்ட் அடிப்படையில் ஒருமுறை வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மறுமுறை வெற்றிபெற்றதில்லை. எனவே சிட்டிங் எம்.எல்.ஏ-வான மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்காமல் தனக்கு சீட் வேண்டும் என தலைமையிடம் கூறி ஜாண் கிறிஸ்டோபர் சீட் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், "அண்ணா அறிவாலயத்துக்கு வேட்பாளர் நேர்காணலுக்குச் சென்ற ஜாண் கிறிஸ்டோபர், பத்மநாபபுரம் தொகுதி சென்டிமென்ட் தொகுதி என கூறியுள்ளார். இங்கு எம்.எல்.ஏ ஆன அ.தி.மு.க-வைச் சேர்ந்த கு.லாரன்ஸ், கே.பி.ராஜேந்திரபிரசாத் ஆகியோர் அமைச்சர் ஆனார்கள். ஆனால் மறுமுறை தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வி அடைந்தனர். அதுபோல பா.ஜ.க-வின் வேலாயுதன் எம்.எல்.ஏ ஆனபிறகு மீண்டும் போட்டியிடபோதும் வெற்றிபெறவில்லை. எனவே தொகுதி சென்டிமென்ட் பற்றி நேர்காணல் குழுவிடம் கூறி மாவட்ட துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் சீட் கேட்டிருக்கிறார்" என்றார்.

ஜாண் கிறிஸ்டோபர்
ஜாண் கிறிஸ்டோபர்

தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபரிடம் இதுபற்றி கேட்டதற்கு, "நான் நேர்காணலுக்கு சென்றபோது பத்மநாபபுரம் தொகுதியில் எனக்கு செல்வாக்கு உள்ளது பற்றியும், கொரோனா சமயத்தில் மக்களுக்கு உதவி செய்தது குறித்தும் கூறினேன். மற்றபடி அங்கு நடந்த எல்லாவற்றையும் பொதுவெளியில் கூறுவது சரியல்ல" என்பதோடு முடித்துக்கொண்டார்.

`காமராஜருக்கு மாலை... மலர்ப் பாதையில் பிரசாரம்!' - அமித் ஷாவின் குமரி சுற்றுப்பயணம் #VisualStory
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு