Published:Updated:

விஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

திருவேங்கை வாசல் கல்குவாரிக்குள்ளேயே தனியாக எங்கும் பசுமை போர்த்தியபடி இருக்கும் பிரமாண்டமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. புதுக்கோட்டை வந்தாலே விஜயபாஸ்கர் அங்குதான் தங்குவாராம்.

ஒவ்வொரு மாதமும் ஓர் அமைச்சர் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணியைத் தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், அவரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் எனத் தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ரொக்கப்பணம், நகைகள், சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2016-21 காலகட்டத்துக்குள் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பேரில் அக்டோபர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் விஜயபாஸ்கரின் வீட்டில் காலை 7 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

விஜயபாஸ்கர் வீடு
விஜயபாஸ்கர் வீடு

விஜயபாஸ்கரின் அப்பா சின்னதம்பி, தாய் அம்மாக்கண்ணு, சகோதரர் உதயகுமார் ஆகியோர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் நடத்திவரும் 12 கல்வி நிறுவனங்கள், விஜயபாஸ்கரின் தனி உதவியாளரான அன்பானந்தம், ஆதரவாளர்கள் சோத்துப்பாளை முருகேசன், நகராட்சி முன்னாள் தலைவர் சேட், குவாரி கணக்கர் சுப்பையா ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 32 இடங்களில் புதுக்கோட்டையில் சோதனை நடந்தது.

இதில், புதுக்கோட்டையில் நடைபெற்ற சோதனையில் அன்பானந்தத்தின் வீட்டில்தான் முதலில் ரெய்டு முடிவுக்கு வந்தது. அன்பானந்தத்துக்கு மொத்தமாக மூன்று வீடுகள், மூன்று மனைவிகளுக்கும் தனித்தனியாக ஒரே மாதிரியாக வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அன்பானந்தத்தைக் கையோடு அழைத்துக்கொண்டு சென்ற போலீஸார், சோதனையில் ஈடுபட்டனர். நிலைக்கதவு, ஃபர்னிச்சர்கள் தொடங்கி எல்லாம் தேக்கு மயம்தான், அதோடு எங்கு் பார்த்தாலும் ஏசி மயம்தான். சோதனையிட்ட அதிகாரிகளையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறாராம் அன்பானந்தம். அங்கு சில முக்கியச் சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து கல்குவாரி கணக்கர் சுப்பையாவின் வீட்டிலும் சொத்து ஆவணங்களை எடுத்தனர். திருவேங்கை வாசல் கல்குவாரிக்குள்ளேயே தனியாக எங்கும் பசுமை போர்த்தியபடி இருக்கும் பசுமைச் சூழலுக்கிடையே பிரமாண்டமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. புதுக்கோட்டைக்கு வந்தாலே விஜயபாஸ்கர் அங்குதான் தங்குவாராம். இந்த நிலையில்தான் குவாரியிலுள்ள பங்களாவில் மட்டும் 15 மணி நேரம் வரையிலும் சோதனையை நடத்தியுள்ளனர். அங்கும் முக்கியச் சொத்து ஆவணஙகள் பல கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே, ஒவ்வோர் இடமாகச் சோதனை முடித்து அதிகாரிகள் ஆவணங்களைக் கைப்பற்றினர். இலுப்பூரிலுள்ள வீட்டில் இரவு 10 மணிக்குச் சோதனை முடிந்து அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துக்கொண்டு பறந்தனர். கடந்த 2017-ல் நடந்த வருமானவரி சோதனையின்போது வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கெல்லாம் தெம்பாக ``எங்கள் மடியில் கனமில்லை" என்று பேட்டி கொடுத்த சின்னத்தம்பி, இந்த ரெய்டின்போது வீட்டைவிட்டே வெளிவரவில்லை. நள்ளிரவு 12:15-க்கு கடைசியாக கல்குவாரியில் சோதனையை முடித்தனர். புதுக்கோட்டை உட்பட தமிழகம் முழுவதுமே நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ரூ.23,85,700 ரொக்கப்பணம், 4.87 கிலோ தங்க நகைகள்,136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், 19 ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பண்ணை வீடு
பண்ணை வீடு

புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 32 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டாலும், இன்னும் சில ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் சோதனையிலிருந்து தப்பிவிட்டதாகப் பேச்சு அடிபட்டுவருகிறது. அமைச்சரின் ஆஸ்தான நண்பர்கள் ஜே.கே நண்பர்கள் குரூப்பில் சேட் என்கிற அப்துல் ரகுமான் வீட்டைத் தவிர மற்ற நண்பர்களில் யார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படவில்லை. இதில் ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார். சிலர் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் இருக்கின்றனர். காவல்துறையில் பணியாற்றும் அமைச்சரின் நம்பிக்கைக்குரியவராக வலம்வரும் காவல்துறை அதிகாரியின் சொத்து மதிப்பு கடந்த சில வருடங்களில்தான் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் வீட்டிலும் சோதனை நடத்தப்படவில்லை.

`` எங்கள் மடியில் கனமில்லை" - சோதனை நடக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்!

2021 தேர்தலின்போது விராலிமலையில் அமைச்சரின் வெற்றிக்கும், பணம், நகை பட்டுவாடா சம்பந்தமாகவும் மருத்துவர் ஒருவர் பக்கபலமாக இருந்திருக்கிறார். அவரும் சோதனையிலிருந்து தப்பியிருக்கிறார். த.மா.கா., திமுக, காங்கிரஸ் ஆகிய மாற்றுக்கட்சியினர் பலருமே இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றனர். இங்கெல்லாம் ரெய்டு நடத்தப்படாததால், சம்பந்தப்பட்டவர்களும் ஆதரவாளர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு