Published:Updated:

ராஜதந்திர எடப்பாடி! - கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்?

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

ஆளுநர் சூடாவதற்குள் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதுபோல சமாதானப்படுத்தியது எடப்பாடியின் சாதுர்யம்.

ரஜினியின் ‘அறிக்கை விளக்க ட்வீட்’ கிளப்பிய அதிர்வையும் தாண்டி, கடந்த வாரம் இரண்டு விஷயங்கள் அரசியல்ரீதியாக அனலைக் கிளப்பின. ஒன்று, இந்தியாவையே உலுக்கிய #GoBackStalin ஹேஷ்டேக். இதை யார் செய்தார்கள், எதற்காக டிரெண்ட் ஆனது... என்பதெல்லாம் அடுத்த விஷயம். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இமேஜை பஞ்சர் ஆக்கும்விதத்தில் டிரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக்கால் அறிவாலயம் சற்று அரண்டுதான் போனது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரண்டாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை! சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்த எடப்பாடி பழனிசாமி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்ததால், ‘தான் யாருக்கும் கைப்பாவை அல்ல’ என்பதை நிரூபிப்பதற்காக திடீர் அரசாணை வெளியிட்டு அதிரடி செய்தார். வேறு வழியில்லாமல், மசோதாவுக்கு ராஜ்பவன் அனுமதியளித்தது. ஆளுநர் சூடாவதற்குள் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதுபோல சமாதானப்படுத்தியது எடப்பாடியின் சாதுர்யம். ‘இங்கிட்டு ஒரு குத்து... அங்கிட்டு ஒரு குத்து’ என்பார்களே... அதுதான் இது!

பாவம், இட ஒதுக்கீடு விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்திய தி.மு.க., பெயரைத் தட்டிச் செல்ல முடியாமல் தடுமாறிப்போனது. ‘இதில் சட்டப் பிரச்னை இருக்கிறது’ என்று தி.மு.க உருண்டதை அமைச்சர் ஜெயக்குமார் வெளுத்ததுதான் மிச்சம். சமீபத்திய இந்த உதாரணங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஸ்டாலினால் பரிணமிக்க முடியவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ‘எங்கே சறுக்குகிறார் ஸ்டாலின்?’ என்று ஆராய ஆரம்பித்தோம். அவர் கட்சியின் சீனியர்கள்கூட, கவலையுடன் மனக் குமுறல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்கள்.

டாஸ்மாக் கள்ள மௌனம்

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதாவையே மிரளச் செய்த பிரச்னை ‘டாஸ்மாக்!’ அரசியல் கட்சிகளையும் கடந்து, டாஸ்மாக் விவகாரம் தேர்தல் மையப்புள்ளியாக வாக்காளர்களிடம் நின்றது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் பெரிய அதிருப்தி நிலவியது. வேறு வழியில்லாமல், ‘படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார் ஜெயலலிதா. ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன், 500 டாஸ்மாக் கடைகளை மூடியும், கடைகள் செயல்படும் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைத்தும் உத்தரவிட்டார்.

கொரோனா காலத்தில், தமிழகத்திலுள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இரவு 8 மணி வரை விற்பனை நடைபெற்றது. இப்போது, `நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதாவே மிரண்ட ஒரு விவகாரத்தில், படிப்படியாகப் பழைய நேரத்துக்கு மது விற்பனையைக் கொண்டுவந்து விட்டார் எடப்பாடி. இதுவரை, டாஸ்மாக் தொடர்பாக எந்த விமர்சனத்தையும் ஸ்டாலின் முன்வைக்கவில்லை. தி.மு.க பிரமுகர்களின் கம்பெனிகளிலிருந்து அரசு மது கொள்முதல் செய்வதால் இந்தக் கள்ள மௌனமா... டாஸ்மாக் விவகாரத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன? அறிவாலயத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.

கொரோனா காலத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கே சென்று கொடுத்தது தமிழக அரசு. செப்டம்பரிலிருந்து மாதத்துக்குப் பத்து முட்டை களையும் சேர்த்துக் கொடுத்தார்கள். இப்போது, இந்தத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒதுக்கப்படும் நிதியில், வழங்கிய பொருள்கள் போக மீதத் தொகையை அந்தக் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் வழங்கவும் பள்ளிக்கல்வித்து றையில் விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள். கிராமப்புறப் பெற்றோரிடையே இந்த உதவிகள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ ‘எடப்பாடி நல்லாத்தான்ப்பா பண்றாரு’ என்று பேசவைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு உட்கட்சிப் பிரச்னைகளுக்கு மத்தியிலும் தன்மீது ஒரு ‘பாசிட்டிவ்’ இமேஜை உருவாக்கிக் கொண்டது அவரது சாணக்கியத்தனம். ‘கலைஞரின் மகன் ஸ்டாலின்’ என்கிற பிராண்டைத் தாண்டி, தனக்கான எமோஷனல் அடையாளத்தை பொது மக்களிடம் இதுவரை ஸ்டாலினால் உருவாக்கிக் கொள்ள முடியாதது அவருக்குப் பெரிய சறுக்கல்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குடும்ப அரசியலுக்குள் குடும்ப அரசியல்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, பீகாரில் லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப், மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், சத்தீஸ்கரில் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன் துஷயந்த் சிங் செளதாலா என்று இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகம் மட்டும் விதிவிலக்கா என்ன... ஆனாலும், தான் ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளித்தார் கருணாநிதி. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே உதயநிதியை அரசியலுக்குக் கொண்டுவந்ததையும், நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ததையே தகுதியாகவைத்து, இளைஞரணி பொறுப்பு அளித்ததையும் கட்சிக்குள்ளேயே யாரும் விரும்பவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் உதயநிதியை புரொமோட் செய்திருந்தால் எந்தப் பிரச்னையும் எழுந்திருக்காது. இப்போது நடக்கும் வாரிசு அரசியல், மக்களை முகம் சுளிக்கவைத்திருக்கிறது.

நம்மிடம் பேசிய மிக மூத்த தி.மு.க தலைவர் ஒருவர், “அ.தி.மு.க-விலும் வாரிசுகள் இருக்கிறார்கள். ஆனால், ரவீந்திரநாத்தை எங்கும் பன்னீர்செல்வம் முன்னிலைப்படுத்துவதில்லை. தன் மகன் மிதுனை எடப்பாடி புரொமோட் செய்ததில்லை. தங்களுடைய போஸ்டர்களில் வாரிசுகள் படம் வர வேண்டும் என்று அவர்கள் எங்கும் சொன்னதில்லை. ஆனால், தி.மு.க-வில் ஒரு பதவி பெற வேண்டுமானால், தலைவர் குடும்பத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற பயம் எல்லோரிடமும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, குடும்பத்துக்குள் ஒரு குடும்ப அரசியல் நடக்கிறது. ஒருபுறம் உதயநிதியை உயர்த்திப் பிடித்து, சீனியரான தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழியை ஒதுக்குகிறார்கள். கடந்த சில மாதங்களில், கனிமொழி உருவாக்கிய ‘Justicefor

JayarajandBennicks’, ‘HindiTheriyathuPoda’ போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின. 300 கோடி ரூபாய் கொடுத்து அழைத்துவந்த பிரசாந்த் கிஷோர் உருவாக்கிய ‘ஒன்றிணைவோம் வா’, ‘எல்லோரும் நம்முடன்’ போன்ற திட்டங்கள் செய்ய முடியாததை, கனிமொழி சாதித்துக் காட்டினார். ஆனால், அவருக்கே சார்பு அணியில் ஓரமாக ஓர் இடம் தந்துவிட்டு, கட்சியின் அதிகார இடங்களை நெருங்கக்கூட முடியாமல் தடுப்பணை போடுகிறது செனடாப் ரோடு” என்றார்.

இந்து வாக்கு வங்கி - வெற்று பூதம்!

`இந்து வாக்குகள் பறிபோய்விடுமோ’ என்கிற அச்சம் ஸ்டாலினின் தூக்கத்தை இரண்டு வருடங்களாகவே கெடுத்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் ‘இந்து வாக்கு வங்கி’ என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது அவருக்குத்தான் இன்னும் புரியவில்லை. சமீபகாலமாக, `நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை’, `தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான்!’ என்று ஸ்டாலின் உருள்வது தி.மு.க பாணி அரசியல் அல்ல. திருவள்ளுவர் விவகாரம், கந்த சஷ்டி விவகாரம், ரஜினி கிளப்பிய பெரியார் விவகாரம், மனுஸ்மிருதி விவகாரம் என்று ஏதாவது ஒரு மதம் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி, அதில் ஸ்டாலினை ரியாக்ட் செய்யவைத்து, மத அரசியலுக்குள் தி.மு.க-வை லாகவமாகக் கொண்டுவந்துவிடுகிறது பா.ஜ.க. அவர்கள் வைக்கும் பொறிக்குள் தானாகச் சிக்கிக் கொள்கிறார் ஸ்டாலின். கருணாநிதியின் காலத்திலேயே ‘இந்து விரோதி, இந்துக்களுக்கு எதிரான கட்சி’ போன்ற விமர்சனங்கள் தி.மு.க மீது எய்யப்பட்டன.

செப்டம்பர் 15, 2007-ம் ஆண்டு, ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழா மாநாட்டில் பேசிய கருணாநிதி, “ராமர் என்ன இன்ஜினீயரா... எந்த காலேஜில் படித்தார்?” என்று பேசினார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ராம்விலாஸ் வேதாந்தி, “கருணாநிதியின் தலையை வெட்டுபவர் களுக்கு எடைக்கு எடை தங்கம் அளிக்கப்படும்” என்று அறிவித்தார். நாடே களேபரமானபோதுகூட தமிழகம் அமைதியாகத்தான் இருந்தது. தன் கருத்தை கருணாநிதி வாபஸ் பெறவே இல்லை. ஈழப் பிரச்னை எரிந்தபோதுகூட, 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமேஸ்வர தீவு அமைந்திருக்கும் ராமநாதபுரம் தொகுதியில் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க ஜெயித்தது. தமிழக அரசியல் தன்னைச் சுற்றியே நடக்குமாறு களத்தை அமைத்துக்கொண்டது கருணாநிதியின் சாணக்கியத்தனம். எந்த ஒரு விவகாரத்திலும் கருணாநிதியை எதிர்த்தும், ஆதரித்தும்தான் தமிழக ஆரசியல் சக்கரம் சுழன்றது. ஸ்டாலினிடம் இந்த சாணக்கியத்தனம் ரொம்பவே மிஸ்ஸிங்!

தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர் ஒருவர், “இப்போது கிளம்பியிருக்கும் மனுஸ்மிருதி விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், திருமாவளவன் மீது வழக்கு பாய்ந்ததற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஸ்டாலின். ஒன்று, திருமாவின் கருத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். இல்லை யென்றால், அவரை அழைத்து, ‘கூட்டணிக்கு பங்கம் விளைவிப்பதுபோல நீங்கள் பேசியது தவறு’ என்று கண்டித்திருக்க வேண்டும். எதையுமே செய்யாமல் பூசி மெழுகியிருப்பதில், ‘இந்து ஓட்டு’ என்கிற மாயை அவரை ஆட்டுவிப்பதைப் பார்க்க முடிகிறது. தலைவர் பயப்படும் அளவுக்கு அது பூதமல்ல. இது போன்ற விவகாரங்களைக் கருணாநிதி எப்படிக் கையாண்டாரோ, அதுபோல பா.ஜ.க-வின் வலைப்பின்னலை இடது கையால் அறுத்தெறிந்துவிட்டு, தி.மு.க-வின் செயல்திட்டங்கள், எடப்பாடி ஆட்சியின் அவலங்களைப் பற்றிப் பேசுவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எடுபடாத எக்ஸ்ட்ரா புரொமோஷன்ஸ்

1990-களில் ஸ்டாலினோடு பயணித்தவர்களுக்குத் தெரியும்... எங்கேயுமே அவர் கையில் துண்டுச் சீட்டை வைத்துக்கொண்டு பேசியதில்லை. சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, அவரின் செயல்பாடுகளைக் கட்சியையும் தாண்டிப் பலர் பாராட்டினார்கள். அப்போது, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில்கூட, `ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி’ என்று ரஜினிகாந்த் கூறினார். இன்று ஸ்டாலின் என்றால், துண்டுச்சீட்டு பார்த்துப் படிப்பவராகவும், பேசுவதற்குத் திணறுபவராகவும், வயல்வெளிகளில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவராகவும் அடையாளப்பட்டு நிற்கிறார். தன் இயல்பைத் தொலைத்ததுதான் ஸ்டாலின் கோட்டைவிட்ட பெரிய விஷயம். பிரசாந்த் கிஷோர் டீம் எழுதிக் கொடுக்கும் சீட்டைப் படிப்பதும், மகனின் ஆலோசனைப்படி சிகை அலங்காரத்தை மாற்றிக்கொள்வதும் அவரைக் கேலிக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஆன்லைனில் ட்வீட் போட்டுவிட்டால் அரியணை ஏறிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதுவல்ல அரசியல்.

பிப்ரவரி 16, 2017-ல் நாம் பார்த்த எடப்பாடி பழனிசாமி இப்போது இல்லை. அவர் வேறு ‘லெவலில்’ வளர்ந்திருக்கிறார். தி.மு.க-வைத் தவிர்த்து அவருக்கு இன்று அரசியல் எதிரிகளே கிடையாது. வைகோவின் கரம்பிடித்து அவரால் நடக்க முடிகிறது, திருமாவளவனிடமிருந்து பாராட்டைப் பெற முடிகிறது. ஸ்டாலினைத் துளைக்கும் அளவுக்குக்கூட எடப்பாடியை சீமான் துளைப்பதில்லை. நவம்பர் 1 - தமிழ்நாடு தின அறிவிப்பு, பொங்கலுக்கு இரண்டாயிரம் ரூபாய், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கோரிக்கை, எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த கலைச்செம்மல் விருதுகளை வழங்கியது, பொதுத்தேர்வு ரத்து, செமஸ்டர் ஆல் பாஸ், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு... என்று தன் அரசியல் எதிரிகளைத் திட்டங்களால் திணறடிக்கிறார் எடப்பாடி.

11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கையும் தமிழில் நடத்திக் காண்பித்துவிட்டார். அரசியல், அதிகாரம், கட்சி, மத்திய அரசு, எதிர்க்கட்சி என எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு, ‘போட்டுப் பார்த்துவிடுவோம்’ என்று களத்தில் நிற்கிறார் எடப்பாடி. இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், தி.மு.க எம்.எல்.ஏ-க்களையேகூட எடப்பாடி அனுசரணையாக சாம்பாதித்துக்கொண்டதுதான்!

“ `பா.ஜ.க-வின் கைப்பாவை’ எனும் விமர்சனம், ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம், பெருகும் ஊழல் குற்றச்சாட்டுகள், டாஸ்மாக் பிரச்னை என எடப்பாடியின் ஆட்சியை விமர்சிக்க நிறையவே இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வின் முகமாக, ஒரு முதல்வராகத் தனது சாதுர்யமான நடவடிக்கைகளால் தனது பிம்பத்தை பார்த்துப் பார்த்துக் கட்டமைக்கிறார் எடப்பாடி. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்தான் என்றாலும் அவர்மீது இவ்வளவு விமர்சனம் எழக் காரணம், தி.மு.க-வின் தலைவராக, கருத்தியல்ரீதியில் வலுவான முடிவுகளை எடுக்காதது; சரியான சமயங்களில் விமர்சனங்களை எதிர்வினைகளைச் செய்யாததுதான்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சமீபகால அரசியல் நிகழ்வுகள், ஸ்டாலின் பல இடங்களில் கோட்டைவிடுவதை உணர்த்துகின்றன. ஜீரோவிலிருந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த எடப்பாடி, தன் ராஜதந்திரத்தால் மெல்ல மெல்ல மேலே ஏறுகிறார். இன்றுள்ள அரசியல் சூழலில், வரும் சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி Vs ஸ்டாலின் என்றுதான் போகவிருக்கிறது. தன்னுடைய சறுக்கல்களை ஸ்டாலின் சரிசெய்துகொண்டால் மட்டுமே அவருக்கு நல்லது. ஒரு எதிர்க்கட்சி என்பது, கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையானதுதான். அதன் தலைவரான ஸ்டாலினிடம் மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்!