Published:Updated:

அரசாணை 115-க்கு கடும் எதிர்ப்பு: ஆய்வு வரம்புகள் ரத்து என முதல்வர் அறிவிப்பு; பின்னணி என்ன?!

ஸ்டாலின்

``அரசின் இந்த அவசரத்தால், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முறையே ஒழிக்கப்பட்டுவிடும். சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின."

அரசாணை 115-க்கு கடும் எதிர்ப்பு: ஆய்வு வரம்புகள் ரத்து என முதல்வர் அறிவிப்பு; பின்னணி என்ன?!

``அரசின் இந்த அவசரத்தால், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முறையே ஒழிக்கப்பட்டுவிடும். சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின."

Published:Updated:
ஸ்டாலின்

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டி அரசுப் பணிக்கான ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி, மனித வள சீர்திருத்தக்குழு ஒன்றும் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.

பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.எஃப்.பரூக்கி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் சி.சந்திரமௌலி, தேவ், ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், சமூகச் செயற்பாட்டாளர் சந்திரா தேவி, Cognizant முன்னாள் சேர்மன் லஷ்மி நாராயணன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக டெல்லியைச் சேர்ந்த பொது கொள்கை மையம் (Centre for Policy Research) நியமிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக மொத்தம் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அரசாணை 115-ஐ வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

குறிப்பாக, இந்தக் குழு அமைக்கப்பட்டதே, அரசுப் பணிகளில் குறுகியகாலப் பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து ஆராய்வதற்குத்தான் எனச் சொல்லப்பட்டது. அதன்படி, குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நவ. 4-ம் தேதி நடைபெற்றது. இதில் நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம், மனித வள மேலாண்மைத்துறைச் செயலர் மைதிலி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, அவுட்சோர்ஸிங் மூலம் அரசுப் பணிக்குத் தற்காலிக பணியாளர்களை எடுக்க தேவையான நடவடிக்கை குறித்து மிக விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பி.டி.ஆர் தலைமையில் ஆலோசனை
பி.டி.ஆர் தலைமையில் ஆலோசனை

`அரசின் இந்த அவசரத்தால், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முறையே ஒழிக்கப்பட்டுவிடும். சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கப்படும்’ என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ஒரே நேர்க்கோட்டில் நின்று அரசின் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசாணை 115-ஐ ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வரை 9-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நேரடியாகச் சந்தித்தும் கோரிக்கை வைத்தனர். அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மனித வளத்துறை செயலர் மைதிலி ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் 9-ம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள்
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள்

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

`அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக்கொண்டு, மனித வள சீர்திருத்தக்குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகியகாலப் பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதல்வருக்கு மனு அளித்தனர். அவர்களுடைய கோரிக்கையைக் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், எந்தவொரு குழு அமைப்பிலும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

முதல்வரின் உத்தரவு என்பது இந்தப் பிரச்னைக்குத் தற்காலிகத் தீர்வுதான். அரசாணையை ரத்துசெய்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.