Published:Updated:

கண்ணீர்... சிரிப்பு... ஆனந்தம்... தலைமைச் செயலகத்தில் முதல் நாள்!

முக்கிய வி.ஐ.பி-க்கள் ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் வரவேற்று இருக்கைகளில் அமரவைத்துக்கொண்டிருந்தார் உதயநிதி.

பிரீமியம் ஸ்டோரி
“குன்னக்குடி ஜோசியரே சொல்லிட்டாரு. அவருக்கு முதல்வராகும் ராசியே இல்லைங்க...”, “பார்த்துப் படிக்கவே தெரியாதவரெல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?”, “அழகிரி இருக்குறவரைக்கும் அவரால முதல்வர் ஆகவே முடியாதுங்க...”- இப்படித் தன்னைப் பற்றி எழுந்த ஏளனப் பேச்சுகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, முதல்வராகியிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் பதவியேற்றபோது அவரின் மனைவி துர்கா கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர், சி.ஐ.டி காலனியில் உதிர்ந்த சிரிப்புச் சத்தம், தலைமைச் செயலகத்தில் தி.மு.க-வினர் ஆனந்தக் கொண்டாட்டம் என மே 7-ம் தேதி சுவாரஸ்யமாகவே கழிந்தது!
கண்ணீர்... சிரிப்பு... ஆனந்தம்... தலைமைச் செயலகத்தில் முதல் நாள்!

காலில் விழுந்த வாரிசுகள்

பதவியேற்பு விழாவுக்காக ஆளுநர் மாளிகைக்கு ஸ்டாலின் கிளம்புவதற்கு முன்னதாகவே, அவரின் குடும்பத்தினர் ராஜ்பவன் வந்துவிட்டனர். சொந்தக் குடும்பத் திருமண விழாவைப்போல இருந்தது அந்தக் காட்சி... முக்கிய வி.ஐ.பி-க்கள் ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் வரவேற்று இருக்கைகளில் அமரவைத்துக்கொண்டிருந்தார் உதயநிதி. ஒரு பக்கத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டும் அமர்வதற்குத் தனியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

அதேசமயம், கூட்டத்தில் ஒரு தரப்பினர் முகங்களில் உற்சாகம் இல்லை... தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கனிமொழியின் இல்லத்துக்கு ஸ்டாலின் செல்லாததால், அவர் ராஜாத்தி அம்மாள் குடும்பத்தை ஒதுக்குவதாக கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல் எழுந்தது. அதனால், பதவியேற்பு விழாவுக்கு கனிமொழி வருவது சந்தேகம்தான் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், இதை எதையும் வெளிக்காட்டாதவராக, வழக்கமான புன்னகையுடன் ஸ்டாலின் வருவதற்கு முன்னதாகவே உற்சாகத்துடன் என்ட்ரி கொடுத்தார் கனிமொழி!

அ.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் சபாநாயகர் தனபாலும் வந்தபோது அவர்கள் அமர்வதற்கு வி.ஐ.பி-க்கள் வரிசையில் இருக்கைகள் எதுவும் காலியாக இல்லை. சுதாரித்த தி.மு.க-வினர், உடனடியாக இரண்டு இருக்கைகளை வரவழைத்து, அதில் அவர்களை அமரவைத்தனர். பன்னீருக்கு அருகில் அமர்ந்த தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் அவருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் பேசுகிறார் என்று அறிந்துகொள்ள அவர்கள் பக்கமாகக் காதைத் திருப்பினோம்... இருவருமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

கண்ணீர்... சிரிப்பு... ஆனந்தம்... தலைமைச் செயலகத்தில் முதல் நாள்!

சரியாக காலை 8:45 மணிக்கு சித்தரஞ்சன் சாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார் ஸ்டாலின். தி.மு.க கட்சி கொடிகட்டிய காரில் அவர் முன்னிருக்கையில் அமர்ந்துகொள்ள, பின்னிருக்கையில் துர்கா அமர்ந்திருந்தார். 8:55 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த ஸ்டாலினின் காலைத் தொட்டுக் கும்பிட்டு உதயநிதியும் சபரீசனும் வரவேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தவுடன், அவருக்குத் தனது அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்துவைத்தார் ஸ்டாலின். கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியை ஆளுநருக்கு ஸ்டாலின் அறிமுகம் செய்தபோது, “ஓ... மிஸ்டர் காந்தி... பெயருக்கு ஏற்ற துறைதான்’ என்று கமென்ட் அடித்தபடி நகர்ந்தார் ஆளுநர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வரவேற்றுவிட்டு ஆளுநர் நகர்ந்தபோது, அவரைத் தடுத்து நிறுத்திய ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரை அழைத்து ஆளுநரிடம் அறிமுகப்படுத்தினார். அடுத்ததாக தன் மனைவி, மகன், மருமகன், பேரக்குழந்தைகளை ஸ்டாலின் அறிமுகம் செய்தபோது, குழந்தைகளின் கன்னம் தொட்டுக் கொஞ்சினார் ஆளுநர்.

மாறிய காட்சிகள்!

பதவியேற்பு உறுதிமொழி வாசிப்பின்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...’ என்று ஸ்டாலின் உச்சரித்தவுடன், விழா அரங்கம் ஆர்ப்பரித்தது. துர்கா ஆனந்தக் கண்ணீர் வடிக்க... தி.மு.க நிர்வாகிகள் கரவொலியால் அரங்கத்தை அதிரச் செய்தனர். நிமிடத்தில் காட்சிகள் மாறத் தொடங்கின... ஸ்டாலின் காரிலிருந்த தி.மு.க கொடி கழற்றப்பட்டு, தேசியக்கொடி பொருத்தப்பட்டது. சரசரவென்று முதல்வரின் காருக்கு முன்பும் பின்புமாக பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சேனையுடன் வளையமிட்டனர். கணநேரத்தில் காட்சிகள் மாறியதைக் கண்டு ஸ்டாலினின் பேரக்குழந்தைகள் மட்டுமல்லாமல், தி.மு.க-வினரும் சற்றே திகைத்துப்போனார்கள். அமைச்சர்கள் பதவியேற்றதும், நேராக தி.மு.க தலைவர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் மலர் தூவி மரியாதை செய்தார். பிறகு கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதி படத்தைப் பார்த்து வணங்கியவர், அடுத்ததாக சி.ஐ.டி காலனிக்குக் கிளம்பினார்.

வெற்றிபெற்ற பிறகு தன்னை வந்து சந்திக்கவே இல்லை என்ற வருத்தத்தில் இருந்த கனிமொழி தரப்பினருக்கு, “அண்ணன் முதல்வரான பின்னாடி வர்றதா முடிவு பண்ணியிருக்கார்” என்று ஏற்கெனவே தகவல் சொல்லப்பட்டிருந்ததால், உற்சாகமாக ‘முதல்வர்’ அண்ணனை வரவேற்கத் தயாராக இருந்தார் கனிமொழி. தனது வீட்டுக்கு வந்த ஸ்டாலினை வாய்நிறைய, ‘வாங்கண்ணே’ என்று கனிமொழி வரவேற்க... ஸ்டாலினுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. உள்ளே சென்றவர் நேராக ராசாத்தி அம்மாளின் அறைக்குச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினார்; கனிமொழியின் மகன் ஆதித்யாவைக் கட்டியணைத்து ஆசீர்வதித்தார். கனிமொழிக்குத்தான் மகிழ்ச்சியில் இருப்புகொள்ளவில்லை. சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு ஸ்டாலின் கிளம்ப எத்தனிக்க, “சாப்பிட்டுட்டு போங்கண்ணே” என்று கனிமொழி கூறவும், “இல்லம்மா, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் வர்றேன்” என்றபடி கிளம்பினார் ஸ்டாலின்.

கண்ணீர்... சிரிப்பு... ஆனந்தம்... தலைமைச் செயலகத்தில் முதல் நாள்!

குதூகல கோட்டை!

இன்னொரு பக்கம், கோட்டைக்குள்ளும் பரபரப்பு பற்றிக்கொண்டது. சில அமைச்சர்களுக்குத் தலைமைச் செயலகத்தின் ஓரத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. “என்னப்பா சந்துக்குள்ள வந்து போட்டிருக்கீங்க. ஏ.சி கூட சரியா வேலை செய்யலை. எனக்கு வேற ரூம் மாத்திக் கொடுங்கப்பா...” என்று பொதுத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் புலம்பியதைக் கேட்க முடிந்தது. கொங்கு ஏரியா அமைச்சர் ஒருவர், தன் அறைக்குள் நுழைந்ததும், “இது எந்த திசையைப் பார்த்த மாதிரிப்பா இருக்கு?” என்று தன் உதவியாளரிடம் கேட்டார். அந்த உதவியாளர் மேற்கு என்று பதிலளிக்கவும், வெளிறிப்போனவர், “எனக்கு மேற்கு ராசியில்லையேப்பா. கிழக்கு பார்த்த மாதிரிதான் ஆபீஸ் ரூம் வேணும்” என்று தலைமைச் செயலாளரின் அலுவலகத்தினரிடம் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். இவர்களைச் சமாளிப்பதற்குள் பொதுத்துறை அதிகாரிகளுக்கு ‘பெண்டு’ கழன்றுவிட்டது.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இருப்பதாகத் தகவல் வெளியானது. அதற்காக, தங்கள் துறை சார்ந்த செயலாளர்களை வரவழைத்து, துறை தொடர்பான பணிகளைக் கேட்பதில் அமைச்சர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அமைச்சரவைக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட ஸ்டாலின் கிளம்பினார். அதன் பிறகுதான் அமைச்சர்கள் ரிலாக்ஸ் மூடுக்கு வந்தார்கள். முதன்முறையாக அமைச்சராகியிருக்கும் சிலர், டி.வி ரிமோட்டை மாற்றியபடி எந்த செய்திச் சேனல் தெரிகிறது, தாங்கள் பதவியேற்ற காட்சிகள் வருகிறதா என்பதைக் குதூகலத்துடன் பார்த்து ரசித்தனர். ஒரு சிலர், உதவியாளர்களை அழைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘காலிங் பெல்’களை அழுத்திப் பார்த்து சோதித்துக்கொண்டிருந்தார்கள்.

கண்ணீர்... சிரிப்பு... ஆனந்தம்... தலைமைச் செயலகத்தில் முதல் நாள்!

வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தன் துறையின் செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்து பணிவுடன், மூச்சுக்கு முந்நூறு தடவை ‘இது இப்படி சார்... அது அப்படி சார்’ என்று சொல்லும்போதெல்லாம், அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை என்கிறார்கள் அந்த அமைச்சரின் ஆதரவாளர்கள். முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் பதற்றம்், குதூகலம், ஆனந்தம் கலந்த உணர்வுகளோடு இருப்பதைப் பல அமைச்சர்களிடமும் காண முடிந்தது.

கோட்டையில் ஸ்டாலினின் முதல்நாள் உற்சாகமும், பொறுப்புணர்வும் கலந்தே இருந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, ஐந்து திட்டங்களுக்கான அரசாணையில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவால் ஸ்டாலின் கையெழுத்திட்டபோதே, ‘இந்தத் திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய வேண்டும்’ என்பதை அதிகாரிகளிடம் அவர் தெளிவாக உத்தரவிட்டார். அதே தெளிவு, பொறுப்புணர்வு, உற்சாகம் கடைசிவரை தடம் பிறழாமல், ஆட்சிச் சக்கரம் சுழல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு