குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம், `India: The Modi Question’ என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு, பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம், பிபிசி ஆவணப்படத்தை மக்கள் தொடர்புத்துறையில் இன்று மாலை 6 மணியளவில், பல்கலைக்கழகத்தின் 8-வது நுழைவு வாயிலில் திரையிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்திருந்தது. அதனால், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.
மேலும், கல்லூரிக்குள் மாணவர்கள் இருக்கும் நிலையில், கல்லூரியின் வாயில்களுக்கு, கலகத் தடுப்பு காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளுடன் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஜாமியாவிலுள்ள காவல்துறையினர், ``பல்கலைக்கழக வளாகத்தில் எந்தவோர் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதேபோல நேற்று ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிடத் திட்டமிட்டபோது மின்சாரமும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், தங்களின் மொபைல், லேப்டாப்பில் இந்தப் படத்தை பார்த்தவர்கள்மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.