Published:Updated:

`மோசமான உணவு; தரக்குறைவான வார்த்தைகள்; மிரட்டப்படும் அரசு விடுதி மாணவர்கள்’- குற்றச்சாட்டும் பதிலும்

ஆதிதிராவிட விடுதி

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புகாரின் பேரில், மாவட்ட துணை ஆட்சியர் வந்து ஆய்வு செய்தும், இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் விடுதி மாணவர்கள்.

`மோசமான உணவு; தரக்குறைவான வார்த்தைகள்; மிரட்டப்படும் அரசு விடுதி மாணவர்கள்’- குற்றச்சாட்டும் பதிலும்

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புகாரின் பேரில், மாவட்ட துணை ஆட்சியர் வந்து ஆய்வு செய்தும், இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் விடுதி மாணவர்கள்.

Published:Updated:
ஆதிதிராவிட விடுதி

``காமராசர் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல, கலைஞரின் காலம் கல்லூரியின் காலம் பொற்காலம் என்பதைப் போல எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழவேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்'' என தொடர்ச்சியாகப் பல்கலைக்கழக விழாக்களில் பேசி வருகிறார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், தலைநகர் சென்னையிலேயே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களை விடுதிக் காப்பாளர் மற்றும் பணியாளர்கள் மரியாதையின்றி நடத்தும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மாவட்ட துணை ஆட்சியர் வந்து விசாரித்துச் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

மனு
மனு

சென்னை ராயபுரத்தில், அரசு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர் விடுதி செயல்பட்டுவருகிறது. இங்கு முதுகலை பயிலும் 100 மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்கள் ஐம்பது மாணவர்க்ளும் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதியில் சரியாக உணவு வழங்கப்படாததோடு, அரிசி, பருப்பு ரவை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விடுதிக் காப்பாளர் ராதிகா வெளியில் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் யாராவது இதுகுறித்துக் கேள்விகேட்டால், கண்காணிப்பாளர் ராதிகா, அங்கு சமையலர்களாகப் பணிபுரியும் முருகன், வசந்த் ஆகியோர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களை மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றமசாட்டுகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி விடுதியிலிருந்து உணவுப் பொருள்களை ஒரு வேனில் எடுத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் சுற்றிவந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புகாரின் பேரில், மாவட்ட துணை ஆட்சியர் வந்து ஆய்வு செய்தும், இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் விடுதி மாணவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள் சிலர்,

``எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இலவச உணவு, உறைவிட விடுதி இது. சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளில், பல்வேறு துறையில் பயிலும் 150 மாணவர்கள் இந்த விடுதியில் தங்கியிருக்கோம். இங்கே, எங்கள் உணவுக்காக வரும் ரேஷன் பொருள்களை எல்லாம் வெளியில் விடுதிக் காப்பாளர் ராதிகா கடத்திச் சென்று வெளியில் விற்பனை செஞ்சிட்டு வர்றாங்க. சமையற்காரங்க, முருகன், வசந்த் அவருக்கு உடந்தையாக இருக்காங்க. மொத்தமாக 150 பேர் இருக்கும்போது வெறும் 80 முதல் 100 பேர் சாப்பிடுமளவுக்கான சாப்பாட்டைத்தான் தினமும் சமைப்பாங்க. மீதமாகும் பொருள்களை வீட்டுக்கு எடுத்துப் போயும், வெளியில் விற்கவும் செய்வாங்க. இதுகுறித்து நாங்கள் காப்பாளரிடம் கேள்விகேட்க, ``குடிக்கிறதுக்கு கஞ்சிக்கு வக்கில்லாமத்தானே ஊருநாட்டுல இருந்து இங்க வந்திருக்கீங்க, படிக்கிற வழியைப் பாருங்க'ன்னு மிகவும் தரக்குறைவா பேசுறாங்க. சமையற்காரர்கள் இரண்டு பேரும், 'நாங்க திருடி விற்கத்தான் செய்றோம். இது ஒண்ணும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல, அரசாங்கச் சொத்து. தேவை இல்லாத விஷயத்துல தலையிடாதீங்க'ன்னு மிரட்டினாங்க.

மனு
மனு

கடந்த ஒண்ணாம் தேதி மாலை 4 மணிக்கு, வழக்கம்போல, உணவுப் பொருள்களை கடத்தும்போது எங்கள் விடுதி மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிச்சுட்டாங்க. நாங்கள் முதல்வர் மற்றும் காவல் ஆணையருக்கு இந்த விவகாரம் குறித்துப் புகார் அனுப்பினோம். மாவட்ட துணை ஆட்சியர் வந்து விசாரிச்சாங்க. எங்ககிட வெற்றுப் பேப்பர்ல கையெழுத்துப் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. நாங்க, எதுக்காகக் கையெழுத்துப்போடணும்னு கேட்க, கம்ப்ளெயின்டைக் க்ளோஸ் பண்ணணும்'னு சொன்னாங்க. பிரச்னையைச் சரிசெய்யாம, நெருக்கடி கொடுத்து குறிப்பிட்ட சில மாணவர்கள்கிட்ட மட்டும் கையெழுத்து வாங்கிட்டுப் போயிருக்காங்க.

அதேபோல, இரண்டு சமையற்காரர்களுமே குடிச்சுட்டு வந்துதான் பெரும்பாலும் சமைப்பாங்க. அந்தச் சாப்பாட்டை வாயிலயே வைக்கமுடியாது. இதுகுறித்து, விடுதிக் காப்பாளர்கிட்ட நாங்க கம்ப்ளெயின்ட் பண்ணினா, அவங்கள அழைச்சு விசாரிக்காம, `நானா அவங்களுக்கு ஊத்திக்கொடுத்தேன்'னு எங்ககிட்ட சண்டைக்கு வந்தாங்க. காப்பாளர் செய்யும் பலமுறைகேடுகளுக்கு, முருகன், வசந்த் உடந்தையா இருக்குறதால அவங்க செய்யுற தவறுகளை இவங்க கண்டுக்கிறது இல்ல. அதுமட்டும் இல்ல, விடுதியின் இரவுக் காவலரான தனசேகரன்,விடுதி நூலகத்தில் இருந்த இரும்பு மேஜைகளை இரும்புக் கடையில் விற்பனை செய்ய முற்பட்டபோது, மாணவர்கள் சிலர் அவரைக் கையும் களவுமாகப் பிடிச்சு, காசிமேடு என்2 காவல்நிலையத்தில் ஒப்படைச்சோம். ஆனா, அவர்மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படல.

சமையலறை
சமையலறை

எங்களை மட்டுமில்ல, எம்.எல்.ஏ அனுமதியோட, டி.என்.பி.எஸ் சி தேர்வுக்குப் படிக்கிறதுக்காக சில மாணவர்கள் வெளியில இருந்து வந்து தங்கிப் படிக்கிறாங்க. அவங்களையும் வெளியேறச் சொல்லி தொந்தரவு செய்யுறாங்க. அதிகாரிகள் எங்க பிரச்னையைச் சரிசெய்யுறதவிட, எங்களைக் கட்டுப்படுத்தத்தான் முயற்சி செய்யுறாங்க. அதனால, தமிழக முதல்வரே இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு எங்க பிரச்னையைத் தீர்த்து வைக்கணும். தவறு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும். எங்க எதிர்காலத்தைக் காப்பாத்தணும்'' என்கிறார்கள் வேதனையாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விடுதிக்காப்பாளர் ராதிகாவிடம் விளக்கம் கேட்டோம்,

``இந்த விடுதியில் தங்கியிருந்த பழைய மாணவர்கள், தற்போது தங்கியிருக்கும் மாணவர்களுக்குத் தெரிந்தவர்கள் என பலர் வந்து விடுதியில் தங்குகிறார்கள். அதைக் கண்டிக்கும் போதெல்லாம் இப்படி என்மீது பொய்யான புகார்களைப் பரப்புவார்கள். வெளியாள்கள் அதிகமாகத் தங்குவதால்தான், உணவுப் பற்றாக்குறை உண்டாகிறது. விடுதியில் உணவுப் பொருள்களை வைத்திருக்கும் அறைக்குப் பக்கத்தில், கடந்த மூன்று வாரங்களாக சாக்கடைத் தண்ணீர் தேங்கியிருந்ததால், எட்டு மூடை அரிசி மஞ்சப்பூத்து போய்விட்டது. மாதக்கடைசியில், ஸ்டாக் எடுக்கும்போதுதான் நாங்கள் அதைக் கவனித்தோம். அதை, அப்புறப்படுத்தினோம். அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டுதான் தற்போது பிரச்னையைக் கிளப்பி வருகின்றனர். அதேபோல, மாணவர்களை தரக்குறைவாக நாங்கள் எப்போதும் பேசியதில்லை. இதுதான் உண்மையான நிலவரம்'' என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுகுறித்து விளக்கம் கேட்க, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், கயல்விழி செல்வராஜைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் அழைப்பை எடுக்காகததால், தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்ட்ன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, விடுதிகளை மேம்படுத்த இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தநிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவர்களின்மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த தயவு, தாட்சண்யமும் கிடையாது'' என்றார் உறுதியாக.