Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி: சாதிச் சான்றிதழ் இல்லாமல் கலங்கிய பழங்குடி மாணவர்கள்... உதவிய ஆட்சியர்!

சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ( தே.சிலம்பரசன் )

கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்வதற்கு சாதிச் சான்றிதழ் இல்லாமல் தவித்துவந்த பழங்குடியினர் சமூக மாணவர்களுக்குத் தற்போது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் அடிப்படை உரிமைகளுக்காகவே பல வருடங்களாகப் போராடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்படிப்பட்ட பழங்குடிச் சமூக மக்களில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு முடித்த ஆறு மாணவர்கள் சாதிச் சான்றிதழ் இல்லாமல் சிரமப்பட்டுவருவதாக தகவல் அறிந்தோம். அவர்களிடம் பேசியபோது, ``கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை இருக்கிறது. கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பார்த்தால், சாதிச் சான்றிதழ் இல்லை. வரும் 10-ம் தேதிதான் விண்ணப்பிக்கக் கடைசி தேதி. ஜூலை 28 -ம் தேதி கலெக்டர் சாரை நேரில் பார்த்தோம். `விசாரணை நடத்தி சான்றிதழ் தரேன்’னு சொன்னாங்க. ஆனா, எந்த அதிகாரியும் விசாரணை பண்றதுக்கு வரலை. இந்த வாரத்துல எங்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்கலைன்னா... நாங்க மேற்படிப்பு படிக்கிறது கேள்விக்குறிதான்" என்று கூறி ஆதங்கப்பட்டனர் அந்த மாணவர்கள்.

பெற்றோர்களுடன் மாணவர்கள்
பெற்றோர்களுடன் மாணவர்கள்
`இன்னும் ஒரு வாரத்துல சாதிச் சான்றிதழ் கிடைக்கலைன்னா..!’ - கலங்கும் பழங்குடி மாணவர்கள்

அவர்களின் கோரிக்கையை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கொண்டு சென்றோம். அவருடைய பதிலுடன் கடந்த 3 -ம் தேதி `இன்னும் ஒரு வாரத்துல சாதிச் சான்றிதழ் கிடைக்கலைன்னா..!’ - கலங்கும் பழங்குடி மாணவர்கள் - என்ற தலைப்பில் விகடன் தளத்தில் செய்தியை வெளியிட்டிருந்தோம். அந்த லிங்க்கை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களின் விவரங்களையும் அனுப்பியிருந்தோம். அதை ஃபாலோ செய்வதாகத் தெரிவித்திருந்த ஆட்சியர், மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். அதன்படி, கடந்த 4-ம் தேதி அன்று முழுவதும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஊருக்கு நேராகவே சென்று விசாரணையை மேற்கொண்டிருக்கிறார் கோட்டாட்சியர் ஹரிதாஸ்.

அதைத் தொடர்ந்து, நேற்று (09.08.2021) மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் 12-ம் வகுப்பு முடித்த ஐந்து மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் என ஆறு பழங்குடி இருளர் சமூக மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரவிந்த் என்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் கேட்டோம். `சம்பந்தப்பட்ட தாசில்தாரிடமிருந்து கோப்புகள் வரவேண்டியிருக்கிறது. வந்ததும் நாளையே (இன்று) தந்துவிடுகிறேன்' என்று கூறினார்.

சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
விழுப்புரம்: `எங்க வீடும் வாழ்வும் இப்படித்தான்’ - பரிதவிக்கும் இருளர் சமூக மக்கள்; ஆட்சியரின் பதில்

நம்மிடம் பேசிய அந்த மாணவர்களின் பெற்றோர், ``கலெக்டர் சார், ஆர்.டி.ஓ சார் மற்றும் விகடனுக்கு நன்றி. விகடனில் வெளியான செய்தி எங்களுக்குப் பேருதவியாக இருந்தது. எங்களின் மற்ற குழந்தைகளுக்கும் வரும் நாள்களில் சான்றிதழ் வழங்குவதற்கு முறைப்படி ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனர். தற்போது அதற்காக மனு மட்டும் கொடுக்கச் சொன்னார்கள்" என்று கூறி நெகிழ்ந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு