Published:Updated:

`மக்கள் மீது அக்கறையில்லையா?!' - சுங்கக் கட்டணத்தால் கொதிக்கும் மதுரை எம்.பி

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

'இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி வசூல்செய்தால் போராட்டம் நடத்துவோம்' என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று சமீபத்தில் பிரதமர் அறிவித்தார்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி
என்.ஜி.மணிகண்டன்

அந்த வகையில், குறைந்த அளவில் வாகனப் போக்குவரத்து நடைபெறும் என்ற நிலையில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி வசூல் செய்தால் போராட்டம் நடத்துவோம் என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே மக்களுக்கு போதிய அளவு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காத நிலையில், இது இன்னும் கஷ்டத்தைக் கொடுக்கும். அது மட்டுமில்லாமல், விலைவாசி இன்னும் உயரும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

இதுபற்றி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கேட்டோம், ''கொரோனா பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் ஏப்.20-ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது.

ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து இல்லாதபோது, மக்களுக்கு பெரிய சலுகை வழங்குவதுபோல சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த இக்கட்டான நேரத்தில் அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்திற்காக வாகனங்கள் ஓரளவு ஓட உள்ள நிலையில், மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்பது பகல் கொள்ளையாகும்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

ஊரடங்கு முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும் நாள் வரையிலாவது சுங்கக் கட்டண வசூல் செய்வது நிறுத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசையும் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தையும் கேட்டுக்கொள்கிறேன்''என்றார். சுங்கக்கட்டண வசூல் அறிவிப்புக்கு பல வகையிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு