சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

என்னை ஏன் பாராட்டுகிறீர்கள்?

அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பழகன்

- சுப.வீரபாண்டியன்

தலைவர் கலைஞர் அவர்களின் அருகிருந்த நேரத்தோடு ஒப்பிடும்போது, நான் பேராசிரியருடன் பேசிய நேரங்கள் மிகக் குறைவுதான்.பேராசிரியரிடம் ஓர் அச்சம் கலந்த மரியாதை உண்டு.

2010ஆம் ஆண்டு, மீஞ்சூர் ஒன்றியத் தி.மு.கழகம் சார்பில், பெரியார், அம்பேத்கர் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. ஏற்கெனவே அண்ணா சிலை இருந்தது. அதன் அருகில், இவ்விரு சிலைகளும் திறக்கப்பட்டன. பேராசிரியர் திறந்து வைக்க, என்னைக் கருத்துரை ஆற்ற அழைத்திருந்தனர்.

கட்சியின் பொறுப்பாளர்கள், பேராசிரியரைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது, பேராசிரியர் குறுக்கிட்டு, “இதெல்லாம் வேணாம், செய்தியைப் பேசச் சொல்” என்று ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் சுந்தரத்திடம் கூறினார். அடுத்தடுத்தும் அவ்வாறே சிலர் பேச, பேராசிரியர் கோபம் கொண்டார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை
கருணாநிதி, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை

பிறகு நான் பேசும் கட்டம் வந்தது. எனக்கு உள்ளூரச் சற்று அச்சம்தான். பேராசிரியரிடம் மெதுவாக, “நான் ஒரு 15 நிமிடம் எடுத்துக்கொள்ளவா?” என்று கேட்டேன். நான் பயந்துபோய்க் கேட்பதைப் புரிந்துகொண்டு, சிரித்தபடி, முதுகில் தட்டிக்கொடுத்து, “நீ நிறைய நேரம் பேசு. சும்மா என்னைப் பாராட்டுவதும், ‘அவர்களே, அவர்களே’ என்று பெயர்களைச் சொல்லி அழைத்துக் கொண்டிருப்பதும் தான் வேண்டாம் என்று கோபப் பட்டேன். இவ்வளவு மக்கள் கூடியிருக்கும்போது, பெரியார், அண்ணா, அம்பேத்கர் பற்றியல்லவா பேச வேண்டும். அதற்காகச் சொன்னேன். நீ அவர்களைப் பற்றி நிறைய பேசு. நானும் கேட்கிறேன்” என்றார்.

அவருடைய சமூக அக்கறையும், பெருந்தன்மையும் எனக்குப் பளிச்சென்று புரிந்தன.

தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த 2006-2011 காலகட்டத்தில் ஒருநாள், இரவு 7 மணி அளவில் நான் தலைவரைப் பார்க்க கோபாலபுரம் சென்றிருந்தேன். மாடியில் அய்யாவோடு அமர்ந்திருந்தபோது, “பேராசிரியரும், ஆசிரியரும் (தி.க.தலைவர் கி.வீரமணி) கூட இன்று வருவதாகச் சொல்லியிருந்தனர். இன்னும் காணவில்லை” என்றார் தலைவர். சொல்லி முடிப்பதற்குள் பேராசிரியர் வந்துவிட்டார். “கண் கொஞ்சம் வலியாக இருந்தது. மருத்துவரிடம் போய்விட்டு வந்தேன். அதுதான் கொஞ்சம் தாமதம்” என்று சொல்லிக்கொண்டே வந்தார் பேராசிரியர்.

அன்பழகன்
அன்பழகன்

“கண்ணுல என்னங்கய்யா பிரச்னை?” என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “ஒண்ணுமில்லே, சும்மா சின்ன வலி. சின்னதுதான் எனக்கு வரும். பெருசெல்லாம் அவருக்குத்தான் வரும். அவராலதான் எல்லாத்தையும் தாங்க முடியும். என்னால முடியாது” என்றார். கலைஞர் சிரித்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. சமகாலத் தலைவர்கள். அதிலும், வயது, கட்சிக்குள் வந்த காலம் என இரண்டிலும் மூத்தவர் பேராசிரியர். அப்படியிருக்க, எந்தப் பொறாமையும் இன்றி, உண்மையை எடுத்துரைக்க எத்தனை பேருக்கு மனமும் துணிச்சலும் வரும்?

பின்னாளில் ஒரு நேர்காணலிலும், அண்ணாவுக்குப் பிறகு, அவரின் நெருக்கமான நண்பர் நாவலரை விட்டுவிட்டுக் கலைஞரை ஆதரித்து அவருடனேயே இருந்ததற்கான காரணத்தைப் பேராசிரியர் வெளிப் படையாகக் கூறியுள்ளார். “நாவலர் நெடுஞ்செழியனின் தலைமை இந்த இயக்கத்தைக் காப்பாற்றாது, கலைஞருடைய தலைமைதான் காப்பாற்றுமென்று உணர்ந்து கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவன் நான்” என்று சற்றும் ஒளிவு மறைவின்றித் தன் கருத்தை வெளிப்படுத்தியவர் அவர்.

ஒருமுறை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், அன்றைய தி.மு.க மாவட்டச் செயலாளர் பலராமன் ஏற்பாடு செய்திருந்த தி.மு.க பயிலரங்கில் பேராசிரியர் முன்னிலையில், தி.மு.க வரலாறு குறித்து நான் பேசினேன். நிறைவுரையாற்றிய பேராசிரியர் ஒரு கருத்தைச் சொன்னார். “எங்களைப் போன்றவர்கள் அடிபட்டு, அனுபவப்பட்டுத் திராவிட இயக்கத்திற்கு வந்தவர்கள்.

இங்கே வரலாறு பேசிய தம்பி வீரபாண்டியன் போன்றவர்கள், நாங்கள் அடிபட்டதைப் பார்த்து இயக்கத்திற்கு வந்தவர்கள்.

நீங்களெல்லாம் குறைந்தது, படித்தும் கேட்டும் அறிந்துகொண்டு இயக்கப் பணியாற்றுங்கள்” என்று கூறினார்.

அன்று நான் பேசும்போது, “திராவிடம் என்பது இனமோ, நிலமோ, மொழியோ சார்ந்து மட்டும் வழங்கப்படும் சொல் இல்லை. அது ஒரு கருத்தியல், சமூகநீதிக் கருத்தியல்” என்று குறிப்பிட்டேன். நிகழ்ச்சி முடிந்து புறப்படும் தருணத்தில், “நீ சொன்னது சரிதான். திராவிடம் என்பது ஒரு கருத்தியல்தான்” என்றவர், அது தொடர்பான ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டார்.

அன்பழகன்,கலைஞர் மு.கருணாநிதி
அன்பழகன்,கலைஞர் மு.கருணாநிதி

“நானும் நாவலரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்பெயின் பாதிரியார் கல்லூரிக்கு உரையாற்ற வந்தார். அவர் உரையில் மகிழ்ந்த நாங்கள் இருவரும் அவரிடம் நினைவொப்பம் (ஆட்டோகிராப்) கேட்டோம். அவர் என்ன எழுதிக் கையெழுத்திட்டார் தெரியுமா?” என்று கேட்டு, சற்று நிறுத்தினார். “நான் ஸ்பெயினிலிருந்து வந்திருக்கும் திராவிடன் (I am a dravidian from Spain) என்று எழுதிக் கையொப்பமிட்டார்” என்று சொன்னார்.

என்ன செய்வது..! தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதைப்போல, திராவிட சிகரம் சாய்ந்துவிட்டது; சங்கப் பலகை சரிந்துவிட்டது!