Published:Updated:

`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான். ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது' என்று சொல்லி, வாஜ்பாய் அரசைத் தனது புத்தகத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.

விமானம்
விமானம்

விமானக் கடத்தல் சம்பவத்தின்போது நடந்தது என்ன?

1999, டிசம்பர் 24. மாலை 4:25 மணிக்கு நேபாள் தலைநகர் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம். 178 பயணிகள், 2 பைலட்டுகள், 13 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம் 193 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். விமானம் புறப்பட்டு 40 நிமிடங்கள் கடந்த நிலையில், ஐந்து பேர் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவர்களில் இருவர் பைலட்டுகளின் அறைக்குச் செல்ல, மீதி மூவரும் விமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, பயணிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்தத் தீவிரவாதக் கும்பலிடம் நிறைய துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இருந்தன.

``நாங்கள் பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்'' என்கிறார்கள் கடத்தல்காரர்கள். பின்னர், அந்தக் கடத்தல் குழுவின் தலைவன் பைலட்டுகளை மிரட்டி பாகிஸ்தானின் லாகூரில் இறங்கச் சொல்கிறான். ஆனால், லாகூர் அதிகாரிகள் கடத்தல் விமானம் அங்கு தரை இறங்க அனுமதி தர மறுக்கிறார்கள். தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள வேறொரு விமான நிலையத்தில் விமானத்தைத் தரை இறக்குமாறு உத்தரவிடுகிறார்கள் கடத்தல்காரர்கள். அதற்கு `போதிய எரிபொருள் இல்லை. எனவே, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லலாம்' என்று யோசனை சொல்கிறார்கள் பைலட்டுகள்.

இதற்கிடையில், தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் விமானம் கடத்தப்பட்ட தகவலை டெல்லிக்குச் சொல்கிறார் பைலட் ஒருவர். `அமிர்தசரஸிலிருந்து உடனே புறப்படாமல், ஏதாவது காரணம் சொல்லி தாமதம் செய்யுங்கள்' என பைலட்டுக்கு டெல்லி அதிகாரிகள் தகவல் அனுப்புகின்றனர். அந்தச் சமயத்தில், ​டெல்லியிலுள்ள அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள்.

200 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய அரசு தர வேண்டும். இந்தியச் சிறைச்சாலைகளிலிருக்கும் 36 பாகிஸ்தான் தீவிரவாதிகளை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். ஜம்மு பகுதியில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி உடலைச் சகல மரியாதைகளுடன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளாவிட்டால் அனைத்துப் பயணிகளையும் கொன்றுவிடுவோம்.
கடத்தல்காரர்களின் கோரிக்கை
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Pm4gis/ Wikimedia Commons
ஆப்கானிஸ்தான் போர்: `71,344 பொதுமக்கள்; 7,792 குழந்தைகள்' - கலவர பூமியில் பழிவாங்கப்பட்ட அப்பாவிகள்!

அப்போது ஆட்சியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு, இந்தக் கோரிக்கைகளைக் கேட்டு ஆடிப்போனது. தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானது வாஜ்பாய் அரசு. அதோடு டெல்லியிலிருந்து தேசியப் பாதுகாப்புப் படையினரை அமிர்தசரஸுக்கும் அனுப்பிவைத்தது. அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக் குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான். ஆனால், பைலட் மறுக்கிறார்.

உடனே பயணிகள் கூட்டத்திலிருந்த 25 வயது இளைஞர் ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி. அந்த இளைஞரின் மனைவி கதறி அழத் தொடங்குகிறார். விமானம் அமிர்தசரஸிலிருந்து புறப்படுகிறது. லாகூரில் தரை இறங்க அனுமதி கிடைக்கிறது. `விமானத்தை லாகூரிலேயே நிறுத்திவையுங்கள்' என பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கிறது இந்தியா. ஆனால், கடத்தல்காரர்களோ அடுத்து துபாய் செல்ல வேண்டும் என்கிறார்கள். பாகிஸ்தான், இந்தியாவின் கோரிக்கையை மறுக்கவே, துபாய்க்குப் பறக்கிறது விமானம். அங்கும் விமானம் தர இறங்க அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`உயிருக்குப் போராடிவரும் பயணியின் நிலைமையை மனதில்வைத்து அனுமதி வழங்க வேண்டும்' என்கின்றன இந்தியாவும் அமெரிக்காவும். மனிதாபிமான அடிப்படையில் அனுமதி தருகிறது துபாய் அரசு. அதேநேரத்தில், `தீவிரவாதிகளை எதிர்க்க, இந்தியப் பாதுகாப்புப் படைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்கிற இந்தியாவின் கோரிக்கையை மறுத்துவிடுகிறது துபாய்.

நேரம் நள்ளிரவைத் தாண்டுகிறது. விமானத்திலிருந்த உணவுகளும் தண்ணீரும் காலியாகிவிடுகின்றன. ``பெண்களையும் குழந்தைகளையும் விடுதலை செய்யுங்கள். தண்ணீர், உணவு தருகிறோம்'' என்கிறார்கள் துபாய் அதிகாரிகள். பெண்கள், குழந்தைகள் என 25 பயணிகளை விடுவிக்கிறது தீவிரவாதக்குழு. கத்தியால் குத்தப்பட்ட இளைஞரின் உடலும் வெளியே அனுப்பப்படுகிறது. அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் அந்த இளைஞரின் உயிர் பிரிந்துவிட்டது.

உணவும் தண்ணீரும் கிடைத்தவுடன் துபாயைவிட்டுக் கிளம்புகிறது விமானம். அடுத்ததாக தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குச் செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள் தீவிரவாதிகள். டிசம்பர் 25-ம் தேதி காலை நேரத்தில் கந்தஹாரில் தரை இறங்கியது விமானம்.

தாலிபன்
தாலிபன்

அப்போதைய தாலிபன் அரசோடு இந்தியாவுக்கு நல்லுறவு இல்லாத காரணத்தால், ஆப்கனில் இந்தியத் தூதரகம் கிடையாது. எனவே, பாகிஸ்தானிலுள்ள ஆப்கன் தூதரகத்தின் உதவியோடு டிசம்பர் 27-ம் தேதியன்று கந்தஹார் சென்றது இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு.

இந்தியப் பாதுகாப்புப் படை ஆப்கானிஸ்தானுக்கு வர, தாலிபன் அரசு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்களுக்குப் பாதுகாப்பாக பீரங்கிகளையும், ராக்கெட் லாஞ்சர்களையும் விமானத்தைச் சுற்றி நிறுத்தினார்கள் தாலிபன்கள்.

இந்தநிலையில், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியது இந்தியக் குழு. `ஒரு கோரிக்கையையும் ஏற்க மாட்டோம்; பயணிகளை விடுவியுங்கள்' எனத் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசியது இந்தியா.

இதற்கிடையில் உணவு, தண்ணீரில்லாமல் விமானத்துக்குள் அவதிப்பட்டனர் பயணிகள். கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்தன. வியர்வையில் பயணிகள் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். `எப்படியாவது பயணிகளை விடுவியுங்கள்' எனப் பயணிகளின் உறவினர்கள், மனிதநேய ஆர்வலர்கள் இந்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.

நான்கு நாள்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது இந்திய அரசு. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், விடுதலை செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளுடன் தனி விமானத்தில் கந்தஹார் சென்றார். அங்கு கடத்தல்காரர்களிடம் மூன்று பயங்கரவாதிகளையும் ஒப்படைக்கப்பட்டு, பயணிகளும், இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் மீட்டுவரப்பட்டனர்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
`தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது சந்திப்பு'; மசூத் அஸாரின் வாழ்த்து கட்டுரை - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?!

சுப்பிரமணியன் சுவாமி தனது புத்தகத்தில் சொல்லியிருப்பது என்ன?

`இந்தியாவில் மனித உரிமைகளும், பயங்கரவாதமும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அதில், ​``பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தான், மற்ற பயங்கரவாத அமைப்புகள், சீனாவால் ஆதரிக்கப்படும் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் என இந்தியா இன்று பயங்கரவாத முற்றுகையில் இருக்கிறது. இந்து நாகரிகத்தை அழிப்பது, இந்து மதத்தைச் சீரழிப்பது உள்ளிட்டவைதான் பயங்கரவாதிகளின் அரசியல் குறிக்கோள். ஆகையால், அவர்களின் எந்தவிதக் கோரிக்கைக்கும் அரசு ஒருபோதும் அடிபணிந்துவிடக் கூடாது. ஏனென்றால், கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்பதற்காக 1999-ம் ஆண்டு டிசம்பரில் மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. நவீன இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் அடைந்த மிகவும் மோசமான சரணடைதல் அது. அப்போது நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளை, நீதிமன்ற அனுமதிகூட பெறாமல் விடுவித்தது வாஜ்பாய் அரசு.

அதுமட்டுமல்லாமல் அந்த பயங்கரவாதிகளை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒப்படைப்பதற்கு பதிலாக, மூத்த மத்திய அமைச்சர் ஒருவரால் பிரதமரின் சிறப்பு விமானத்தில் அரசு விருந்தினர்கள்போல கந்தஹாருக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டனர். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்று இந்துக்களைக் கொல்வதற்காக மூன்று தனி பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கினர்'' என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு