அரசியல்
Published:Updated:

கலகத் தலைவன் சு.சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சுப்பிரமணியன் சுவாமி

 ``எட்டு ஆண்டுக்கால ஆட்சியில், பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடையத் தவறிவிட்டார் மோடி. அதுமட்டுமல்லாமல், 2016-லிருந்து ஆண்டு தோறும் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது

சுப்பிரமணியன் சுவாமி - அதிரடி கருத்துகளுக்குப் பெயர்போனவர். எதிர்க்கட்சிகள்கூட பயன்படுத்தாத வார்த்தைகளால் சொந்தக் கட்சியான பா.ஜ.க-வைத் தொடர்ந்து போட்டுத்தாக்கி வருகிறார். மோடி அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கும் அவர், சமீபத்தில் `இது அரசாட்சியா இல்லை குண்டர்கள் ஆட்சியா?’ என்று கேட்டு அதிரடித்தார். ‘கலகத் தலைவனாக’ மாறி, சொந்தக் கட்சியினர்மீதே அவர் வைத்த விமர்சனங்களின் தொகுப்பு இங்கே...

``மோடி அரசால் பொருளாதாரத்தைச் சரிசெய்ய முடியவில்லை. சீன அத்துமீறலையும் தடுக்க முடியவில்லை. ஆனால், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் டம்மிகளை நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்துடன் மோதிக்கொண்டிருக்கிறது. இது அரசாட்சியா... இல்லை குண்டர் ஆட்சியா?’’

``தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி என நினைக்கிறேன். தமிழ்நாடு, பா.ஜ.க பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது. ஸ்டாலின் உறுமினால், அவர்கள் (பூனைபோல) `மியாவ்’ எனக் கத்துகிறார்கள்!’’

``எட்டு ஆண்டுக்கால ஆட்சியில், பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடையத் தவறிவிட்டார் மோடி. அதுமட்டுமல்லாமல், 2016-லிருந்து ஆண்டு தோறும் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. தேசியப் பாதுகாப்பு மிகவும் பலவீனமடைந்திருக்கிறது. மீண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது... ஆனால், அதற்கான வழிமுறை மோடிக்குத் தெரியுமா?’’

 “பட்ஜெட் பற்றாக்குறையாக இருப்பதால், நமது அரசை ஏன் ஏலம்விடக் கூடாது?”

``மோடியும் அமித் ஷாவும் ஹரேன் பாண்ட்யாவுக்குச் செய்ததை எனக்குச் செய்யத் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படித் திட்டமிட்டிருந்தால், என் நண்பர்களை எச்சரிக்க வேண்டியிருக்கும். இந்த இரட்டையர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸின் உயர்மட்டத்தில் இருப்பவர்களைக்கூட மாற்றியிருக்கிறார்கள்!’’ (ஹரேன் பாண்ட்யா, குஜராத் பா.ஜ.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பின்னர் கொலையும் செய்யப்பட்டவர்)

 ``லடாக், அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்று, இந்தியாவின் தேசிய நலனுக்குத் துரோகம் செய்துவிட்டார் மோடி!’’

கலகத் தலைவன் சு.சுவாமி!

``பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் பற்றியும் தெரியாது... பொருளாதாரம் சரிவடைந்தால் என்ன செய்வதென்றும் தெரியாது!”

``பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பது நாட்டில் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கிவருகிறது. இது நிதியமைச்சகத்தின் அறிவு திவால். தேச விரோதமும்கூட!’’

``பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் நான் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவன். அது குறித்துப் பொறுப்பான எவருடனும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். பங்கேற்பு ஜனநாயகம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா... மோடி இந்தியாவின் ராஜா அல்ல!’’

``மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: பொருளாதாரம் - தோல்வி, எல்லைப் பாதுகாப்பு - தோல்வி, ஆப்கானிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கை - தோல்வி, தேசப் பாதுகாப்பில் - பெகாசஸ் விவகாரம், உள்நாட்டுப் பாதுகாப்பில் - காஷ்மீர் இருள் என எல்லாமே தோல்வி... இதற்கெல்லாம் யார் பொறுப்பு?’’

 ``ஜி.எஸ்.டி என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம்!’’

 “வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இந்துக்கள் இனப்படுகொலை விவகாரத்தில், பா.ஜ.க அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... வங்கதேசத்துக்குப் பயப்படுகிறோமா? லடாக்கில் சீன ஆக்கிரமிப்புக்குப் பயந்தோம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதால் பயந்தோம். அடுத்து மாலத்தீவுக்குப் பயப்படுவோமா?”