Published:Updated:

“தி.மு.க மூன்றாம் தலைமுறை... அ.தி.மு.க முதல் தலைமுறை!” - சட்டமன்ற வாரிசு சர்ச்சை

அ.சையது அபுதாஹிர்

"இன்று ஏழுபேருக்காகப் பரிந்து பேசும் உங்கள் ஆட்சியில் நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்தான், 'நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள்” என்று பதில் அளித்தார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

எழுவர் விடுதலை

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையில், நிதி நிர்வாகம், சிறைச்சாலை மற்றும் சட்டத்துறையின் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டத்துறை கோரிக்கையின்போது பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், “மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழுபேரின் விடுதலை தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மாநில அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

தி.மு.க உறுப்பினர்கள்
தி.மு.க உறுப்பினர்கள்

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிக்கிட்டு, “தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுரிடம் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஏழு பேருக்காகப் பரிந்து பேசும் உங்கள் ஆட்சியில் நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்தான், 'நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள்” என்று பதில் அளித்தார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, “ நீதிமன்றம் இப்போது மாநில அரசுக்கு வழங்கியுள்ள வாய்ப்பை எங்களுக்கு அப்போது வழங்கவில்லை. இப்போது மாநில அரசுக்கு வாய்ப்பிருப்பதால் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம்” என்று பதிலளித்தார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழக அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் போட்டு விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் போட்டு, ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். இந்த அரசு அம்மாவின் வழியில் தமிழக மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை ஆதரிப்போம். எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம்” என்று கூறி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை?

அதேபோல் எதிர்க்கட்சி துணைத் தலைவர், "தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட கட்சிகள் எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டது? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே அழைத்திருக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் மட்டும் அழைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளைக் கேட்டு, அவரின் ஆலோசனைப்படிதான் தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழைக்கச் சொன்னது எதிர்க்கட்சித் தலைவர்தான். கி.வீரமணியின் கருத்துகள் பல, இந்த விவகாரத்திற்குத் தேவைப்பட்டவையாக இருந்தன” என்றார்.

துரைமுருகன்
துரைமுருகன்

ஸ்டாலின் அதற்கு, “திராவிடக் கட்சியை அழைக்க நான் வலியுறுத்தினேன். அதே நேரம், தேர்தலில் வெற்றிபெற்ற கொங்குநாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. ஆனால், தேர்தலிலே போட்டியிடாத சிறிய கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்” என்று சொல்ல, பன்னீர்செல்வம், “இனி நடைபெறும் கூட்டங்களில் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம்” என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாரிசு விவகாரம்!

சட்டத்துறை மானியக் கோரிக்கையில் கடைசியாக, நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க உறுப்பினர் சோளிங்கர் ரவி பேச ஆரம்பித்தார். அப்போது அவர், “தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு கட்சி செயல்படுகிறது. மூன்றாம் தலைமுறை வாரிசு முறை அந்தக் கட்சியில் உள்ளது” என்று மறைமுகமாக தி.மு.க-வை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

ஸ்டாலினுடன் உதயநிதி
ஸ்டாலினுடன் உதயநிதி

இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தி.மு.க உறுப்பினர்கள் அவருடைய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவைக்குள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, மாற்றுத் தலைவராக அவையை நடத்திக்கொண்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமன், அவைக்குறிப்பிலிருந்து அவற்றை நீக்க மறுத்துவிட்டார். இதனால் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். அதனால், தி.மு.க-வுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அந்தக் கட்சியின் கொறடா சக்கரபாணி பேசியபோது, “ துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாரே, அது வாரிசு அரசியல் இல்லையா? ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் நின்றாரே, அது வாரிசு அரசியல் இல்லையா? என்று கேட்க... இதற்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளுமாறு பேரவைத் தலைவர் கண்டிப்புடன் கூறியதால், இருதரப்பும் சிறிதுநேரத்தில் அமைதிகாத்தனர்.