Published:Updated:

சென்னை: 550 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் பணி நீக்கம்! - மாநகராட்சி சொல்வது என்ன?

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய 550-க்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பணி நீக்கத்துக்கு என்ன காரணம்?

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பைகளும், 700 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு திடக்கழிவுகளும் உருவாகின்றன. இவற்றில் குடியிருப்புகளிலிருந்து 68 சதவிகிதம், வர்த்தகரீதியான இடங்களிலிருந்து 16 சதவிகிதம், அரங்கங்கள், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 14 சதவிகிதம், தொழிற்சாலைகளிலிருந்து இரண்டு சதவிகிதம் என குப்பைகள் உருவாகின்றன. மருத்துவக்கழிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நியமித்திருக்கும் ஏஜென்டுகள் மூலமாக அகற்றப்பட்டுவருகின்றன.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தற்போது 19,300-க்கும் மேற்பட்ட தூய்மைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மட்டும் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இவற்றில் அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உர்பேசர் - சுமீத் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன. அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்கள் ராம்கி என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள அண்ணாநகர், திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதில் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் மண்டலங்களில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுவருகிறார்கள். இதன் காரணமாக, இந்த மண்டலங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியிழக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் தொழிலாளர்கள்

முதற்கட்டமாக அண்ணாநகர் மண்டலத்தில் பணியாற்றிவரும் 550-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்களை, `இனிமேல் பணிக்கு வர வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தூய்மைத் தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையிலும், அண்ணாநகர் மண்டல அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாநகரைத் தொடர்ந்து திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை, ராம்கி நிறுவனம் செயல்படும் மண்டலங்களில் பணியமர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

தற்போது நீக்கப்பட்ட ஊழியர்களும் சரி, நீக்கப்பட்டிருக்கும் ஊழியர்களும் சரி.... இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றியவர்கள். இந்த கொரோனா பேரிடரில் மொத்த நகரமும் வீட்டுக்குள் இருக்க, சென்னை மாநகராட்சியின் கழிவுகளை அகற்றி, நகரத்தைத் தூய்மையாக வைத்திருந்தவர்கள். கொரோனா பேரிடரின்போது நூற்றுக்கணக்கான தூய்மைத் தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதோடு, சிலர் தங்கள் உயிர்களையும் இழந்திருக்கிறார்கள்.

Vikatan

``கொரோனா பேரிடர் மட்டுமல்ல, சமீபத்தில் ஏற்பட்ட சென்னை கனமழையிலும் ஈடுபட்டவர்கள் நாங்கள். சென்னைக்கு வெள்ளம் வந்தாலும், புயல் வந்தாலும், எந்தப் பேரிடர் வந்தாலும், எவ்வளவு அபாயகரமான நோய்த் தொற்று வந்தாலும் அந்தக் கடுமையான நேரங்களிலும் எங்களில் பலரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். கடுமையான நேரங்களிலும் தொடர்ந்து பணியாற்றிய எங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், இப்படி திடீரென்று பணியைவிட்டு நிறுத்தியது எங்களை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது" என்று பணியிழந்த ஊழியர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

மாநகராட்சியின் இந்தச் செயல்பாட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ``கோவிட் போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இ.பி.எஸ் அரசு சென்னையில் 700 துப்புரவுத் தொழிலாளர்களின் வேலையைப் பறித்திருக்கிறது. நாம் பெருந்தொற்றின்போது அவர்களைச் சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் மோசமான செயல். பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றி இதுதான்” என்று தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

இது குறித்து அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப் பணியாளர்களாக நின்ற தூய்மைப் பணியாளர்கள் சுமார் 700 பேரைச் சென்னை மாநகராட்சி திடீரென வேலையைவிட்டு நீக்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென, சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்" என்று தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசினேன், ``சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் தூய்மைப் பணி மறுசீரமைப்பு செய்யப்பட்டுவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பணியிலுள்ள 75 சதவிகித தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள்தான். மறுசீரமைப்பின்போது அவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு ஏற்கனவே பணிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் பணி வழங்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஊதியம் தினச் சம்பளம் என்ற காரணத்தால், வேறு மண்டலம் மாற்றும் வரை தற்காலிகமாகப் பணி வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தொடர்ந்து பேசிய அவர், ``தூய்மைத் தொழிலாளர்களில் வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பணியில் ஒழுங்கில்லாதவர்களைத் தவிர மற்ற அனைவருமே வேறு மண்டலத்தில் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் அனைவருமே கடுமையான நேரங்களிலும் மாநகராட்சியில் பணியாற்றியவர்கள். மாநகராட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேறு மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கும் இன்னும் சில நாள்களில் வேறு மண்டலத்தில் பணி வழங்கப்படும்" என்று கூறினார்.

`மிகக் கடினமான காலங்களிலும் தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்களை பணிநீக்கம் செய்தது வருந்தத்தக்கது. அவர்களை விரைவில் பணியமர்த்த வேண்டும்’ என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு